யாழில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை , தனிப்பட்ட காரணங்களுக்காக பொது சுகாதார பரிசோதகர் நடைமுறைப்படுத்தினார் என குற்றம் சாட்டி வேலணை வாசி ஒருவர் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேலணை வடக்கில் புதிதாக வீடு ஒன்றினை அமைத்து அதற்கான கிரக பிரவேசத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி , திகதி குறித்து கிரகப்பிரவேசம் செய்வதற்கு வேலணை சுகாதார பரிசோதகரிடம் அனுமதியும் பெற்றிருந்தேன்.
அதன் பிரகாரம் உரிய சுகாதார முறைமைகளை கடைப்பிடித்தது 25 பேரையே நிகழ்வுக்கு அழைத்திருந்தேன். அதுவும் அன்றைய தினம் வந்தவர்கள் பகுதி பகுதியாகவே நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வு முடித்து 27ஆம் திகதி நான் கொழும்பு சென்று கொண்டிருந்த போது , தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுகாதார பரிசோதகர் என்னையும் , நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேரையும் தனிமைப்படுத்த வேண்டும் என கூறினார். நான் விளக்கம் கேட்ட போது, விளக்கம் எதுவும் கூறாது போனை துண்டித்தார்.
மறுநாள் யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் எனது உறவினர்கள் மற்றும் வேலணை பகுதியில் வசிக்கும் எனது உறவினர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள் என அறிந்து கொண்டேன்.
அதனை அடுத்து நான் உடனடியாக கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டேன். அதில் எனக்கு தொற்று இல்லை அறிக்கை கிடைத்தது..
அந்த அறிக்கையையும் , நிகழ்வு தொடர்பிலும் என்நிலை விளக்கமளித்து கடிதம் ஊடாக அவற்றை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் குறித்த பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன்.
அத்துடன் நான் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டில் தங்கி நின்றே புதிய வீட்டினை நிர்மாணித்து முடிந்தேன் என்பதனையும் அவர்களுக்கு தெளிவு படுத்தி இருந்தேன்.
அதனை அடுத்து வேலணையில் தனிமைப்படுத்திய சில உறவினர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவித்தனர். ஆனாலும் வேலணையில் மேலும் சிலரையும் யாழ்.நகரில் உள்ள உறவினர்களையும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கவில்லை.
கொரோனா சுகாதார விதிமுறைகளை தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாகவும் , பொது மக்களை அடிமையாக நடத்தும் செயற்பாடு என அவர் குற்றம் சாட்டினார்.
அதேவேளை தனது உறவினர் வீடுகளுக்கு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரை அழைத்து சென்றே அவர்களை தனிமைப்படுத்தினார் எனவும் தெரிவித்தார்.
குறித்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் , வடமாகாண சுகாதார பணிப்பாளரிடம் கேட்ட போது , குறித்த நபர் தான் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தார் என கூறினாலும் , அவர் இடைக்கிடை கொழும்பு சென்று வந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்தன.அதனால் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். எமக்கு அவர் மீது சந்தேகம் இருந்தமையால் தனிமைப்படுத்தினோம் என தெரிவித்தார். #தனிமைப்படுத்தல் #தனிப்பட்ட #குற்றச்சாட்டு #பொதுசுகாதாரபரிசோதகர் #பவித்திராவன்னியாராச்சி #கொரோனா