கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின், அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியமைக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட, பஞ்சன்கேணி வித்தியாலய மாணவர்களை, தமது வரவேற்பு நிகழ்விற்காக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பயன்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண்ட் வாத்தியத்தை இசைப்பதற்காக சீருடையுடன் மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்ததாக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் கூட்டங்களில் பாடசாலை இசைக்குழுக்களை பயன்படுத்தப்படக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்களை வெளிச் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என கல்வி அமைச்சும் அரசாங்கமும் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொற்றுநோய் சூழ்நிலையில் மாணவர்கள் இவ்வாறானக நிகழ்விற்கு பயன்படுத்தப்பட்டமை குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நிலைமைக்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளே பொறுப்பு என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, பிள்ளையான், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுபோன்ற வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவது கடுமையான சூழ்நிலையை ஏற்படுத்தும் என ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி பிள்ளையான் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டின் மாவட்டங்களில் தரப்படுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்டம் 23ஆவது இடத்தையே பிடித்திருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
“முறைசாரா நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறைந்த ஒரு கல்விச் செயற்பாடு அங்கு நடைபெறுகிறது. இதுபோன்ற வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது நடைமுறையில் உள்ள யதார்த்தத்தைக் காட்டுகிறது.” என ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார். #பிள்ளையான் #அரசியலுக்கு #மாணவர்களை #விசாரணை #இலங்கைஆசிரியர்சங்கம் #கொரோனா