உதயன் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் நாம் அறிந்த வரையில் யாழ்ப்பாண தலமை காவல்நிலைய பொறுப்பதிகாரி காழ்ப்புணர்ச்சியுடன் எம்மை மிரட்ட தொடர்ந்த வழக்கே என உதயன் பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திபின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
உதயனுக்கோ எனக்கோ வழக்கு தொடரப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.
காவல்துறையினருக்கு உதயனுடன் சரியான உறவு இல்லை. தமது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை அதனூடாக செய்ய முயல்கின்றனர் என்பது புலனாகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது பின்னணிகள் புலப்படும்.
சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்பதிகாரி தொலை பேசி ஊடாக எமது ஆசிரியரை அழைத்தார். காரணம் சொல்லாமல் அழைத்ததால் அவர் சமூகமளிக்கவில்லை. அதனால் அடாத்தாக தமது அடக்குமுறையை பிரயோகிக்கின்றார்கள் என்றே சந்தேகிக்குறோம்.
அதேவேளை சில அரசியல்வாதிகளின் பின்புலம் உள்ளதாகவும் அறிகிறோம். இதன் பின்னணிகளில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என சந்தேகிக்கின்றோம்.
1985ஆம் ஆண்டு அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினர் புலிகளுடன் மோதலை ஆரம்பித்த போது முதல் முதல் இந்திய இராணுவம் உதயன் பத்திரிகையை இலக்கு வைத்து தான் செல் அடித்தார்கள். அந்த தாக்குதலில் அயலவர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே எதாவது அடக்குமுறைகளை தொடங் கும் போது பத்திரிக்கை நிறுவனங்களை இலக்கு வைப்பார்கள். அதே போன்று தான் இதனையும் பார்க்கிறோம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் அன்று , அவரது பிறந்த நாள் இன்று என அவரது படத்துடன் செய்தியை பிரசுரித்தோம். இது எப்படி பயங்கரவாதத்தை தூண்டும் ?
புட்டு சாப்பிட்டவர்களை பீட்ஷா சாப்பிட வைத்தேன் என யாழ்ப்பாண காவல்துறை தலமையக காவல்துறைப்பொறுப்பதிகாரி கூறியதை செய்தியாக வெளியிட்டமைக்காக எம்மை பழிவாங்க அல்லது மிரட்டும் நோக்குடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு நாம் அஞ்சப்போவதில்லை.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் உதயன் சார்பாக பல முறைப்பாடுகள் செய்திருந்தேன். அதில் எது தொடர்பாக நடவடிக்கை எடுத்தார்கள் ?
உதயன் நிறுவனத்தினுள் உட்புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்து இருவர் கொல்லப்பட்டனர். அது தொடர்பில் இவர்கள் விசாரணை செய்தார்களா ?
உதயன் தவிர வடக்கு ஊடகங்கள் , ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஏதாவது விசாரணை செய்தார்களா?
இதெல்லாம் எந்த அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இவையெல்லாம் தலமைப்பொறுப்பதிகாரி பிரசாத் பெனார்ன்டோக்கு தெரியாதா ? இவை எவை தொடர்பிலும் விசாரணை செய்யாது எம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறன செயற்பாடுகளால் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் தமிழ் மக்களுக்கும் , ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கும் முட்டுக்கட்டையாக வழக்குகளை தொடர முனைகின்றனர். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் #உதயன் #பயங்கரவாததடைச்சட்டம் #சரவணபவன் #காழ்ப்புணர்ச்சி #தமிழீழவிடுதலைப்புலிகள் #பிரபாகரன்