கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இக்கால பகுதியில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனைகள் இன்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினர் சடடத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கை சிறைகளில் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக 78க்கும் அதிகமான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 15க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கொரோனா சிகிசை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமுள்ளது.
இலங்கை சிறைசாலைகள் நெருக்கடி மிக்கவை. அத்துடன் சுகாதார வசதிகளும் அற்றவை. இந்நிலையில் தொடர்ந்து அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதனால் , அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் நிலையுள்ளது.
எனவே மனிதாபிமான அடிப்படையில் நிபந்தனைகள் இன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதேவேளை யாழ்.மாநகர சபையில் புதிய முதல்வர் தெரிவின் போது தங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ,
பாதீட்டில் உள்ள சில குறைப்பாடுகளும் கடந்த காலங்களில் முதல்வரின் நடவடிக்கையில் ஏற்பட்டு இருந்த அதிருப்தியாலுமே பாதீட்டை எதிர்த்தோம்.
எதிர்வரும் காலங்களில் யாழ்.மாநகர சபையில் சிறப்பான ஆட்சி அமைக்க உதவுவோம் என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமது உறுப்பினர்களுடனான கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்களை முதல்வராக முன் மொழியாவிடின் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவோம் என முடிவெடுத்து உள்ளதாக கூறியமை தொடர்பில் கேட்ட போது ,
எனக்கு எந்த கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றவில்லை போல. அதனால் எனக்கு அது தொடர்பில் தெரியாது என தெரிவித்தார்.