யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர மாணவனும் இணைந்து கொண்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார், இராணுவத்தினர் விலகவேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நாளை திங்கட்கிழமை முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணம்_பல்கலை #மாணவர்களின் #போராட்டத்தில் #பாடசாலை_மாணவன் #முள்ளிவாய்க்கால்நினைவிடம்