உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவலை வெளியிட்டிருக்கிறார்.
வத்திக்கானின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 84 வயதான பாப்பரசரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
“நெறிமுறைப்படி அனைவருமே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தான் உணர்வதாக” தெரிவித்திருக்கின்ற பாப்பரசர், தடுப்பூசி ஏற்றாதவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்துடன் அடுத்தவரது நலனையும் பாதிப்புக்குள்ளாக்கு கின்றனர் – என்றும் கூறியிருக்கிறார்.
புனித பாப்பரசரின் தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான Fabrizio Soccorsi கொரோனா வைரஸுடன் தொடர்புடைய குழப்பமான நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவலை வத்திக்கான் செய்தித் தாள் L’Osservatore Romano வெளியிட்டிருக் கிறது.
78 வயதான மருத்துவர் பொதுவான நோய்களுடன் டிசெம்பர் 26 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.அவருக்கு வைரஸ் தொடர்பான பாதிப்புகள் காணப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மருத்துவர் கடைசியாக பாப்பரசருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன.இந்த நிலையிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
இதேவேளை பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தும் அவரது கணவரும் கடந்த சனியன்று வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
——————————–———————————-
குமாரதாஸன். பாரிஸ்.
10-01-2021