அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். டிரம்ப் பதவி ஏற்றதனைத் தொடர்ந்து ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ள நிலையில் முதன் முறையாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியதனை ரஸ்ய ஜனாதிபதி மாளிகை உறுதி செய்துள்ளது.
2 நாடுகளும் சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது எனவும் குறிப்பாக சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளை அடக்கி ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பேச்சு ஆக்கப் பூர்வமாக இருந்ததாகவும்; மத்திய கிழக்கு, அரபு மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை, ஈரான் அணு ஆயுத திட்டம், வடக்கு மற்றும் தென் கொரியா பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்தும் விவாதித்தனர் எனவும் முக்கியமாக சர்வதேச தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு செயல்பட இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.