புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துப் போனதாக கூறப்படுகிறது.
இன்றைய தினம் (21.01.21) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டிட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவைக்கூட்டத்தினை முடிவுறுத்தி, சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அச் சமயத்தில் நிலாவரை கிணற்றுப்பகுதியில் இராணுவத்தினர் பலர் இருந்தனர். இராணுவத்தினர் தவிசாளர் உறுப்பினர்களுடன் செல்வதைக் கண்டதும் வளாகத்தில் இருந்து வெளியேறிச்சென்றனர்.
இந் நிலையில் தவிசாளர், அங்கு நிலத்தினை வெண்டிக் கொண்டிருந்தவர்களிடத்தில் நீங்கள் யார்? என்ன செய்கின்றீர்கள்? என்று வினவியுள்ளார். அதற்கு அங்கு நின்ற அதிகாரி ஒருவர் தான் “தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நளின் விரசிங்க… நாம் பணிகளில் ஈடுபடுகின்றோம்” என்றபோது தவிசாளர் இங்கே எதாவது புதிய கட்டிடங்களை அமைக்கவா முயற்சிக்கின்றீர்கள்? எனக் கேட்டுள்ளார்.
நிலத்தினை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் முழுமையாக சிங்களவர்களாக இருந்தபோது தவிசாளார் தான் வரலாறு சார்ந்த விடயங்களாக இருப்பதால் தன்னால் தமிழில் தான் தொடர்ந்து உரையாட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அங்கு நின்ற ஒருவரை இவர் தமிழர் தான் என தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி கூட்டிக்காட்டியபோது அவரும் உரியவாறு தமிழைப்பேசவில்லை.
இந் நிலையில் “நாட்டில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகள் ஆக்கிரமிப்புப் பணிகளாகவே அமைகின்றன அதுதான் எமக்கு சந்தேகமாகவுள்ளது. எமது மக்கள் இனநல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் இங்கு பௌத்த கட்டுமாணம் அல்லது வரலாற்று மேசடி நடக்கப்போவதாக எனக்கு அறிவித்துள்ளனர்.
இப் பகுதியை பிரதேச சபைதான் பங்காளராக முகாமை செய்கின்றது. சுற்றுலா வலயமாக கேள்விக் கோரல் செய்வதும் நாம் தான். எமக்குத் தெரியாமல் என்ன செய்யப்போகின்றீர்கள்? நான் தவிசாளராக அவதானிப்பினைச் செலுத்த வேண்டியுள்ளது என அவ்விடத்தில் ஒரிரு உறுப்பினர்களுடன் நின்றபோது, மீளவும் தோன்டப்பட்ட குழியில் கணிசமான பகுதி முடப்பட்டது.
பின்னர் அங்கு வந்திருந்தவர்கள் குறித்த பகுதியில் காணப்பட்ட சிறு சிறு புட்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தவிசாளரிடம் எதாவது பிரச்சினையா என்று கேட்டபோது தவிசாளர் நாம் எனது கடமையினை ஆற்றுகின்றோம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து சட்டி பானைகளுடன் உணவினை எடுத்து வந்து மதிய போசனத்தினை தொல்லியல் திணைக்களத்தினர் ஆரம்பித்திருந்தனர்.
இந் நிலையில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ் உள்ளிட்ட மேலும் பல செயற்பட்டாளர்களும் அவ்விடத்திற்கு சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பின்னர் ஊடகங்களும் பிரசன்னமாக தொல்லியல் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றிருந்த மண்வெட்டிகள், தள்ளுவண்டி போன்றவற்றினை பிக்கப்பில் ஏற்றி அனுப்பியுள்ளனர். 3 மணியாளவில் பிரசன்னமாகியிருந்த உத்தியோகத்தர்களையும் குறித்த பிக்கப் வாகனம் வந்து ஏற்றிச் சென்றது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் காத்திருந்த அனைவரும் நிலாவரைக் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இருந்து வெளியேறினர்.