இராணுவ புலனாய்வாளர்கள் என கூறி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யாழ்.தென்மராட்சி பகுதிகளில் இக் கொள்ளையர்கள் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கடந்த வாரம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகளால் தெரியப்படுத்தப்பட்டும் , சாவகச்சேரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டு உள்ள போதிலும், கொள்ளையர்கள் தொடர்ந்தும் கைவரிசை காட்டி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த கொள்ளையர்கள் தென்மராட்சி பகுதிகளில் சனநடமாட்டம் குறைந்த வீதிகளால் வரும் பெண்கள் , வியாபாரிகள் உள்ளிடடோரை வழி மறித்து தம்மை இராணுவ புலனாய்வு பிரிவினர் என அறிமுக படுத்தி க்கொண்டு , நீங்கள் சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளன என விசாரணை செய்வது போல பாசாங்கு செய்து கொண்டு அவர்களில் கை பைகளை சோதனை செய்து அதில் இருந்து பணத்தினை அபகரித்துக் கொண்டு தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவார்கள்.
அதேவேளை சில பெண்களிடம் சங்கிலிகளையும் அறுத்து சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளையர்களின் நடமாட்டத்தால் மாலை வேளைகளில் மக்கள் வீதிகளில் செல்ல அச்சம் கொண்டுள்ளதாகவும் , அவர்களுக்கு எதிராக விரைந்து காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். #இராணுவ #புலனாய்வாளர்கள் #கொள்ளை #தென்மராட்சி