இந்திய அரசு மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த் கெய்ர்ன் நிறுவனத்துக்கு இடையே நடந்த கோர்ப்பரேட் வரி வழக்கில் வெற்றி பெற்ற கெய்ர்ன் நிறுவனத்துக்கு 120 கோடி அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் 8750 கோடி ரூபாய்.
அத்தீர்ப்பை மதித்து இழப்பீட்டுத் தொகையை இந்தியா கொடுக்கவில்லை எனில், இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்துவிடுவோம் என கெய்ர்ன் நிறுவனம், அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக நீண்டு கொண்டிருந்த இந்த வழக்குக்கான தீர்ப்பை கடந்த மாதம் தி பெர்மனெண்ட் கோர்ட் ஆஃப் ஆர்பிட்ரேஷன் (The Permanent Court of Arbitration) எனும் ஒரு சர்வதேச தீர்ப்பாயம் பிரிட்டனின் கெய்ர்ன் நிறுவனத்துக்குச் சாதகமாக வழங்கியது.
ஒருவேளை தீர்ப்பில் கூறப்பட்டது போல இந்திய அரசு இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்கவில்லை என்றால், தன்னால் பறிமுதல் செய்யப்படக்கூடிய, இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகளை அடையாளம் காண கெய்ர்ன் நிறுவனம் தொடங்கி இருக்கிறது . இதில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவையும் அடக்கம் எனத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கெய்ர்ன் எனர்ஜி – கெய்ர்ன்இந்தியா
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு இந்தியாவில் கெய்ர்ன்இந்தியா என்ற ஒரு துணை நிறுவனமிருக்கிறது. அந்த அந்த துணை நிறுவனத்தில் கெய்ர்ன் நிறுவனம் வைத்திருக்கும் 10 சதவீத பங்குகளை, இந்தியாவின் வருமான வரித் துறை பறிமுதல் செய்தபின் கெய்ர்ன் வழக்கு தொடுத்தது.
இந்தியா – பிரிட்டன் முதலீட்டு ஒப்பந்தத்தை, இந்தியா மீறிவிட்டதாக கடந்த டிசம்பர் 2020-ல், ஒரு சர்வதேச தீர்ப்பாயம் தன் தீர்ப்பை வழங்கியது. அதோடு இந்தியா 1.2 பில்லியன் அமெரிக்க டொலரை இழப்பீடாக, உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
582 பக்கங்களைக் கொண்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளியான பிறகும், இந்திய அரசு இழப்பீட்டுத் தொகையை எப்போது கொடுக்கப் போகிறது என எதையும் குறிப்பிடவில்லை.
தங்களுக்கான இழப்பீட்டைக் கொடுக்குமாறும், அப்படிக் கொடுக்கவில்லை எனில் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட இருப்பதாகவும், கெய்ர்ன் நிறுவனம் இந்திய அரசுக்கு கடிதமும் எழுதியது.
அக்கடிதத்தில், எப்போது இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனக் குறிப்பிடவில்லை. ஆனால் மத்திய அரசு நிறுவனங்களான ஏர் இந்தியா போன்றவைகளின் சொத்துகள் கெய்ர்ன் நிறுவனத்தின் இலக்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நீண்ட கால சட்டப் போராட்டம்
இந்தியா மற்றும் கெய்ர்ன் நிறுவனத்துக்கு இடையிலான இந்தப் பிரச்சனை கடந்த 2012-ம் ஆண்டு ஒரு சட்டம் வந்ததிலிருந்து தொடங்கியது. அச்சட்டம் இந்தியாவின் வரி முறையை முன்திகதியிட்டு மாற்றியது.
இதன்படி இந்த சட்டம் அமலாவதற்கு முன்பே கோர்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரம் கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்ற நிலை உருவானது.
புதிய சட்டத்தைக் காட்டி, கெய்ர்ன் நிறுவனத்தின் கோர்ப்பரேட் நிறுவன மறுசீரமைப்பு செய்யப்பட்டதற்கான (2006-ம் ஆண்டில் இருந்து) வரி பாக்கிகளைச் செலுத்துமாறு கடந்த 2014-ம் ஆண்டு கூறினார்கள் வரி அதிகாரிகள்.
அப்போதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையில் நடந்து வந்த சட்டப் போராட்டம், கடந்த மாதம் சர்வதேச தீர்ப்பாயத்தால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
BBC