Home இலக்கியம் ஊர்மகிளும்உள்ளூர் நகைச்சுவை நடிகன் காத்தமுத்து ஆனந்தன்!சந்தியூர் சஞ்சீபன்.

ஊர்மகிளும்உள்ளூர் நகைச்சுவை நடிகன் காத்தமுத்து ஆனந்தன்!சந்தியூர் சஞ்சீபன்.

by admin

“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சிரிப்பு என்பது ஓர் குணப்படுத்தும் ஒரு சாதனமாக விளங்குகின்றது.ஆரம்பகாலம் தொடக்கம் இன்றைய காலம் வரைசிரிப்பு என்பது ஒரு மகிழ்வான ஒரு சூழலை உண்டு பண்ணக் கூடியதாகவும் ஒரு நகைப்பூட்டலை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகிறது. ஒருவரை இலகுவில் மகிழ்விக்கவேண்டும் என்பதுஓர் இயலாத காரியமாகும்.அதற்கு ஒரு தனித்துவமான இயல்பு நம்மில் இருக்க வேண்டும்.


மனிதர் மனிதரைப் பார்த்து ஏதாவது ஒரு மொழியில் பேசுவதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர் இதன் பின்னரே உரையாடத் தொடங்குகின்றனர். ஏன்? ஓர் குழந்தை இத்தரணியை கண் திறந்து பார்த்து பேசுவதற்கு முன்னால் சிரிக்கின்றது. இவ்வாறாக சிரிப்பு,மகிழ்ச்சி,நகைச்சுவை,நகைப்பு, கேலி, நையாண்டி என்றெல்லாம் சில தன்மைகளை வெளிக்கொணர்கிறது. ஆரம்பகாலங்களில் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் அவர்கள் துறை சார்ந்து செயற்பட்டனர்.பாடகர்கள் பாடல் மூலமாகவும் கவிஞர்கள் சிறந்த நகைச்சுவை கவிதைகளிலும் இலக்கியவாதிகள் சிறந்த இலக்கியப் படைப்புகளினாலும் மக்களை பார்வையாளர்களை அவர்களின் விசித்திர திறமைகளினால் மகிழ்வித்தனர்.

இதில் முக்கிய படைப்பாளியாக நடிகர்காணப்படுகின்றார். காரணம் ஏனைய படைப்புகள் படைப்புக்கும் படைப்பாளிக்கும் தொடர்பில்லாத கலை வடிவங்கள் ஆகும்.நாடக நடிகர் என்பவர் உயிரோட்டமாக பார்வையாளர்களுடன் தொடர்பு உடையவராக காணப்படுகின்றார். நகைச்சுவை நடிகர் ஆனவர்கள் தன் உடலையும் உடல் அங்கங்களையும் முழுமையாக பயன்படுத்தி அங்க அபிநயங்களின்மூலமாக மற்றவர்களை முழுமையாகமன மகிழ்விப்பதனையே நோக்கமாக கொண்டு இருப்பார்கள்.


அந்த வகையிலே நாம் இதில் ஒரு முக்கியமான நகைச்சுவை நடிகன் பற்றியதான ஒரு கண்ணோட்டத்தினை நோக்குவோமானால் சித்தாண்டியை பிறப்பிடமாகவும் சந்திவெளியைவசிப்பிடமாகவும் கொண்ட காத்தமுத்து ஆனந்தன் அவர்களை பற்றிய நகைச்சுவை செயற்பாடுகளை உற்று நோக்க வேண்டியுள்ளது. இவர் ஒரு சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவராகக் காணப்படுகிறார். சிறுவயதிலிருந்தே கலையார்வம் கொண்ட ஆனந்தன் பாரம்பரிய கலைகளையும் நாடகங்களையும் பார்ப்பதில் மிக ஆர்வம் உடையவராக காணப்பட்டார். பின்னர் தான் பார்த்து பழகிய சமூகமான சித்தாண்டி பிரதேசத்திலேயே நல்ல மழை வளம் வேண்டி அம்மனை முதன்மையாகக் கொண்டு ஆற்றப்படுகின்ற சடங்கு சார்ந்த ஒரு நிகழ்வான கொம்புமுறி விளையாட்டில் வடசேரி தரப்பை சேர்ந்தவராகவும் கொம்புமுறி விளையாட்டின்போது வடசேரி தென்சேரி கொம்புகள்ஊர்வலம் கொண்டு செல்கின்ற வேளையிலே வசந்தன் அடிப்பது வழக்கம் இந்த வசந்தன் அடிப்பதில் 15 வயதிலேயே முதன் முதலில் தன்னை ஆற்றிப்படுத்தி கொண்டார்.

இவ்வாறாககலைக்குள் காலடி எடுத்து வைத்த இவர் அதனைத்தொடர்ந்து தனது வாழ்க்கையில் கலையோடு ஒன்றி வாழ்ந்து பின்னரான நாட்களில் சந்திவெழியில் திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து புலிக்கூத்து,மகுடிக் கூத்து , சூரன் போரில் நாரதர் , வேட்டைத்திருவிழாவில்வேடன் போன்ற பல பாத்திரப் படைப்புக்களை ஏற்று இருபத்தைந்து வருட கால அனுபவ பலத்தால் தனது இன்றைய 59வது வயதிலும் இவை அனைத்திலும் தனது அகடவிகடம் நடிப்புத் திறனையும் தனது நகைச்சுவை ஆற்றலையும் தனது நடிப்புத் திறனால் வெளிக்கொண்டு மக்களை மகிழ்வித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இவர் கந்த சஷ்டி விரதஇறுதி நாள் மற்றும் விநாயகர் காப்பு விரத இறுதிநாட்களில் நடைபெறும் சூரன் போர் நிகழ்வுகளில் நாரதர் வேடம் புரிந்து பாத்திரம் ஏற்றதும் அவர் கொடுத்த நாரதர் பாத்திரத்தை ஏற்று அன் நிகழ்வுகள் சார்ந்து அவரது நடிப்பு காணப்பட்டாலும் கூட பக்தர்களாக வந்தவர்கள் பார்வையாளர்களாக மாறும் சந்தர்ப்பங்களில் இவர் மக்களோடு தனது அகடவிகட நகைச்சுவை தோற்றம் மற்றும் நடிப்பால் நகைச்சுவை தன்மையினை கொண்டு வந்துவிடுவார். பெரியவர்கள் என்றால் அவர்களுக்கு ஏற்றார் போன்றும்சிறுவர்கள் என்றால் அவர்களுக்கும் ஏற்றாற் போன்றும்மாறிவிடுவார். இவர் தனது உடலை அசைக்கும் முறை மற்றும் உரையாடும் முறை என்பன சாதாரணமாக பார்க்கும் வேளையிலேயே நகைப்பை உண்டு பண்ணுவதாக இருக்கும்.


மற்றும் வேட்டைத் திருவிழா காலங்களில் ஊர் சுற்றி வரும் நிகழ்வு காணப்படும். இதன்போது ஆனந்தன் அவர்கள் ஒவ்வொரு வருடமும் இதில் பங்கு கொள்வார். இவர் அதிலே வேடர் பாத்திரம் ஏற்று கொள்வார்.அப்போது ஊரே கூடி ஊர்வலமாக செல்ல ஒவ்வொரு தெருக்களிலும் வீடுகளுக்கு முன்னிலையிலும் மக்கள் கூடி நிற்பர்.அப்போது அவர் சிறுவர்களைக் கண்டால் அவர்கள் அருகே சென்று கேலி நடிப்பாட்டங்களை ஆடுவார்.அப்போது சிறுவர்கள் இவரின் பின்னால் சென்று இவர் கட்டியிருக்கும் இலை குலைகளைத் இழுத்து விட்டு ஓடுவர் அப்போது இவர் அவர்களை நகைப்புடன் ஓடி அவர்களை விரட்டி புரியாத மொழிகளில் எல்லாம் பேசும்போது சிறார்கள் மற்றும் பெரியவர்கள் வரை சிரித்து மகிழ்வார்கள்.
பொதுவாக இவரின் நடிப்பானது எனது பார்வையில் பண்டைத் தமிழகத்தில் ஆடப்படும் சாக்கைக் கூத்து ஆடப்படுவது போன்று சொல்லவந்த கதையுடன் பல்வேறு கிளைக் கதைகளையும் இடையில் வரும் நகைச்சுவை நடிப்புடன் ஆடுவதை போன்றும் நகைச்சுவை நடிப்பு கலைஞனான ஆனந்தன் அவர்களின் நடிப்பும் இவ்வாறே காணப்படுகிறது.

நாரதர் பாத்திரமேற்று இரண்டு பக்கமும் கதை கூறி இருந்தாலும்கூட இடையிடையே மக்களையும் மகிழ்விப்பதற்காக நக்கல் நையாண்டி பேச்சுக்களையும் வளைந்து நெளிந்த உடலசைவுகள் மூலமாக அகடவிகட நடிப்பாற்றலை வெளிக்கொணர்வதில் வல்லவராக திகழ்கின்றார்.


ஆனந்தன் அவரின் நடிப்பு திறமையினாலும் மக்களை குறிப்பிட்ட கணத்தில் மகிழ்விப்பதாலும் இவரின் திறமை எமது ஊரில் மாத்திரம் நின்றுவிடவில்லை. அயல் ஊர்களில் நடைபெறும் வேட்டைத் திருவிழாக்கள் மற்றும் சூரன்போர் நாரதர் போன்ற பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கும் இவரை அழைத்துச் சென்று ஆற்றுகை செய்விப்பார். இதனால் இவரின் பால் காணப்படும் அகடவிகட நடிப்பாற்றல் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்து ஆலய தரிசனங்களுக்கு மனக்கவலை குழப்பங்களுடன் வந்தவர்களையும் ஓர் மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் சென்றடைய வைக்க வல்லவராக காணப்படுகிறார்.

பொதுவாக இன்றைய சூழலில் சினிமா பிரபலங்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகள் உடனே தங்கள் நடிப்பாற்றல் திறனை வெளிக்காட்டி இருந்தாலும் எம்மவர் நம் கலைஞர்கள் குறிப்பிட்ட நாட்களில் மாத்திரமே தங்கள் வேலைகளுக்கு மத்தியிலும் மனதில் இவ்வாறான கஷ்டங்கள் இருந்தாலும் கூட அதனை வெளிக்கொணராது அன்றைய நாள் முழுவதும் மக்களை மகிழ்விப்பதில் உள்ள வல்லமை உள்ளூர் கலைஞர்களையும் அவர்கள் சார்ந்தகலைஞர்களையுமே சாரும். ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர் கூடி மகிழ்கின்ற நாட்களை மென்மேலும் தன் நடிப்பாலும் திறமையினாலும் கொண்டு அவர்களை ஓர் ஒற்றுமையுடன் கூடியதான ஒரு குதூகலத்தில் ஆழ்த்தும் அவரை என்றும் போற்றிப் புகழ வேண்டும். எம்கலைகள் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
நம் கலை வாழ வழிவகுப்போம் – அதுவே
நம் இனம் வாழ வழிவகுக்கும்.

சந்தியூர் சஞ்சீபன்
நாடகமும் அரங்கிலும் சிறப்பு கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை
இலங்கை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More