பூமியை சூடாக்கியதன் விளைவைத் தான் உலகம் தொற்று நோய் வடிவத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழலைக் கணக்கில் எடுக்காமல் கண்ணை மூடிக் கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளால் மனித குலத்துக்கும் பூமியின் இருப்புக்கும் ஆபத்துக்களே மிஞ்சும்.
கொரோனா வைரஸுக்குப் பிந்திய உலகம் கற்றுக் கொண்ட பாடங்கள் பலனளிக்கத் தொடங்கி விட்டன.பாரிஸின் “சார்ள் -து- ஹோல்”(Roissy-Charles-de-Gaulle) சர்வதேச விமான நிலையத்தைப் பிரமாண்டமான முறையில் விஸ்தரிக்கும் திட்டம் இனி சூழலுக்குப் பொருந்தாதது என்று தெரிவித்துக் கைவிடப்படுகிறது.
அரசாங்கத்தின் சுற்றுச் சூழல் கொள்கைகளைப் பொறுத்தவரை இத் திட்டம் “வழக்கொழிந்து” விட்டது என்று பிரான்ஸின் சுற்றுச் சூழல் அமைச்சர் பார்பரா பொம்பிலி(Barbara Pompili) தெரிவித்திருக்கிறார்.
2037 ஆம் ஆண்டு தொடக்கம் நாற்பது மில்லியன் மேலதிக பயணிகளையும் நாளாந்தம் மேலும் 450 விமானங்களை யும் உள்ளடக்கும் நோக்குடன் சுமார் 7முதல் 9பில்லியன் ஈரோக்கள் செலவில் நான்காவது முனையம் ஒன்றை நிறுவி விமான நிலையத்தை விரிவாக்கும் பெருந் திட்டமே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நேரடியான விளைவு இது என்று விமான நிலைய விஸ்தரிப்புக் குழு தெரிவித் திருக்கிறது.வைரஸ் நெருக்கடியை அடுத்து விமான சேவைத்துறை சந்தித்த இழப்பும் அரசு இந்தத் தீர்மானத்தை எடுப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூழலுக்கும் வான் வெளிக்கும் பெரும் பாதிப்புகளை உண்டுபண்ணுகின்ற விமானப் பயணங்களை அதிகரிக்க உதவும் இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன.
தற்போது அமைச்சர் பார்பரா பொம்பிலியின் இந்தத் தீர்மானம் சூழல் பாதுகாப்பு அமைப்புக்களினதும் ஆர்வலர்களினதும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.”எங்களுக்கு விமானங்கள் தேவை. ஆனால் விமானப் பயணங்கள் சூழலுக்கு நியாயமான முறையில்-காபன் உமிழ்வைக் குறைக்கும் வகையில்- இருக்க வேண்டும்”-என்று அமைச்சர் பொம்பிலி தெரிவித்திருக்கிறார்.
பருவநிலை மாறுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஒத்திசைவான முறைகளில்- காபன் உமிழாத நவீன விமானங்களுக்குரிய தளம் போன்ற- மாற்றுத் திட்டம் ஒன்றைத்தயாரிக்குமாறு விமான நிலைய விரிவாக்கக் குழுவை அரசு கேட்டிருக்கிறது.”கிறீன்பீஸ்” (Greenpeace) இயக்கம் உட்பட சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பலவும் விஸதரிப்புத் திட்டம் கைவிடப்படுவதை வரவேற்றுள்ளன.
ஆனால் பல்லாயிரக் கணக்கானோரின் தொழில் வாய்ப்புகளைப் பறிக்கின்ற இத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.1
974 இல் நிறுவப்பட்ட பாரிஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தை 2019 இல் 76 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜரோப்பாவில் லண்டன் ஹீத்ரோவுக்கு(Heathrow) அடுத்த படியாக மிகுந்த பரபரப்பான பயணிகள் நெரிசலைக் கொண்ட விமான நிலையம் இதுவாகும். #பாரிஸ்_விமானநிலையம் #விரிவாக்கத்திட்டம் #தொற்றுநோய் #கொரோனா #Roissy_Charles_de_Gaulle #கிறீன்பீஸ்
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ். 11-02-2021