பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் கலந்துகொண்ட நாடாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் இன்று (19.02.21) திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று காவல் நிலையங்களின் காவற்துறையினர் 3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
கடந்த 3ம் திகதி தொடக்கம் 6 திகதி வரையிலான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்து கொள்வதற்கு எதிராக திருக்கோவில், கல்முனை, அக்கரைப்பற்று காவற்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று அவரிடம் வழங்கினர்.
இந்த நிலையில் தடை உத்தரவை மீறி இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் நாடாராளுமன்ற உறப்பினர் த. கலையரசனின் வீட்டிற்கு இன்று காலை 9 மணிக்கு திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று காவல் நிலையங்களின் காவற்துறையினர் சென்று அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
இதேவேளை தடை உத்தரவை மீறி பேரணில் கலந்துகொண்ட த.கலையரசனுக்கு எதிராக காவற்துறையினர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30 ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.