Home இலங்கை கிழக்கில் பிரகாசிக்கும் வெகுசனப் பாடகர் செ.ஞானப்பிரகாசம்!- து.கௌரீஸ்வரன்.

கிழக்கில் பிரகாசிக்கும் வெகுசனப் பாடகர் செ.ஞானப்பிரகாசம்!- து.கௌரீஸ்வரன்.

by admin



அறிமுகம்
பெப்ரவரி 21 ஆந் திகதி உலக தாய் மொழித் தினம் இதை முன்னிட்டு இந்த வருடம் மூன்றாவதுகண் நண்பர்கள் தமிழிசையால் எழுவோம் ஈழத்துத் தமிழ் இசைமொழியின் பல்வகைமைகளைக் கொண்டாடுவோம், அதனைப்பல்பரிமாணங்களுக்கு இட்டுச்செல்வோம் எனும் நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறார்கள்.இதற்கிணங்க ஈழத்து தமிழ் இசை மொழியின் வளர்ச்சியில் கனதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள உள்ளுர் இசைக்கலைஞர்களைத் தேடியறிந்து அவர்கள் குறித்து பொது வெளியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கிழக்கிலங்கையின் வெகுசனப் பாடகராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள மதிப்பிற்குரிய பாடகர் திரு.செல்லையா ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் இயக்கம் குறித்து பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.அவை குறித்து இக்கட்டுரையில் பகிரப்படுகின்றது.


இளம்பராயமும் இசைப்பிரவேசமும்


திரு செ.ஞானப்பிரகாசம் அவர்கள் 1950.06.22 ஆந் திகதி மட்டுநகர் தாண்டவன்வெளியில் பிறந்துள்ளார். ஆரம்பக் கல்வியை தாண்டவன்வெளியில் இயங்கிய கிளெனி ஆண்கள் பாடசாலையிலும், தரம் ஆறு தொடக்கம் தரம் ஒன்பது வரையான கல்வியை புனித மேரிஸ் பாடசாலையிலும் பெற்றுள்ளார். தரம் ஒன்பது படிக்கும் போது தனது தாயை இழக்க நேரிட்டதால் அதனால் மிகுந்த வேதனைப்பட்டு கல்வியைத் தொடராது இடைவிலகிய தன்னை மீட்டுவித்து சமநிலை கொண்ட மனிதனாக மாற்றயது தன்னிடமிருந்த இசை மீதான ஆர்வமே எனக்கூறுகிறார்.
புனித மேரிஸ் பாடசாலையில் கற்கும் காலங்களில் பாடல்களைப் பாடுவதில் தான் தனித்து அடையாளங் காண்பித்தமையால் ஏழாந்தரத்தில் கற்கும் போது வில்லுப்பாட்டு ஆற்றுகை ஒன்று பாடசாலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் தலைமைப் பாடகனாகச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு சிறந்த வில்லுப் பாட்டுக்காரனாக இவர் இனங்காணப்பட்டுள்ளார்.


தரம் ஒன்பதுடன் பாடசாலையிலிருந்து இடைவிலகினாலும் தான் கற்றுக்கொண்ட வில்லுப்பாட்டை இவர் கைவிடவில்லை 1968 களில்; இவரும் இவருடைய நண்பர்களும் இணைந்து ஷபாரதி இளைஞர் மன்றம்| எனும் பெயரில் ஒரு கலையமைப்பை உருவாக்கி இதனூடாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வடிவமைத்து மட்டுநகரின் கோவில் விழாக்களில் ஆற்றுகை செய்து வந்துள்ளனர். ஆரையம்பதியைச் சேர்ந்த இலக்கிய ஆசிரியரான இசற். ஏ.செல்வராசா என்பவரிடம் வில்லுப்பாட்டுக்களை எழுதி அவற்றை இம்மன்றத்தினர் ஆற்றுகை செய்துள்ளனர்.

வில்லுப்பாட்டில் வரும் பாடல் வரிகளுக்கான இசையமைப்பினை திரு.செ.ஞானப்பிரகாசம் அவர்களே மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு பாரதி இளைஞர் மன்றமூடாக வில்லுப்பாட்டுக்காரனாகத் தன்னை அடையாளம் காட்டிய காலத்தில் இலங்கை வானொலியில் பிரபல்யம் பெற்றிருந்த ஷகுதூகலம்| எனும் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தமையால் இவருடைய இசைப்பயணம் மேலும் வளர்ச்சிகாணத் தொடங்கியது. இதன் காரணமாக கல்முனையில் பெயர்பெற்று விளங்கிய கதிரவன் இசைக்குழுவில் பாடகனாகும் வாய்ப்பு பதினேழாவது அகவையில் இவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தினார். கதிரவன் இசைக்குழுவின் முன்னணிப்பாடகரானார்.


ஒரு சிவராத்திரி இரவில் கல்முனை தொடங்கி மட்டுநகர் வரை நான்கு இசை நிகழ்ச்சிகளை அந்நாட்களில் கதிரவன் இசைக்குழு செய்ததாகவும் அதில் தான் பிரதான பாடகனாக இருந்ததாகவும் கூறுகின்றார்.


ஆதவன் இசைக்குழுவும் சொந்தப் பாடல்களும்
1970 களில் இவருடைய நண்பர்களின் உந்துதல் மற்றும் ஆதரவுடனும் கதிரவன் இசைக்குழுவின் ஒத்துழைப்புடனும் மட்டுநகரில் ஷஆதவன் இசைக்குழு| என்ற பெயரில் புதிய இசைக்குழுவொன்றை அமைத்து அதனூடாகத் தனது இசைப்பயணத்தை இவர் தொடர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆதவன் ஞானப்பிரகாசம் என அழைக்கப்படுமளவிற்கு இவரும் ஆதவன் இசைக்குழுவும் பிரபல்யமாயின. அந்நாட்களில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கிரமமாக பௌர்ணமி கலை விழா நடத்தப்பட்டதன் காரணத்தால் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆதவன் இசைக்குழுவிற்கும் வாய்ப்புக்கள் கிடைத்தது இதனால் ஆதவன் இசைக்குழு மேலும் பிரபல்யம் பெறுவதாயிற்று.


அக்காலத்தில் இலங்கை வானொலியில் சொந்தப் பாடல்களுக்கு (தென்னிந்திய சினிமாப்பாடல்களல்லாத உள்நாட்டுப் பாடல்கள்) மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையால் ஆதவன் இசைக்குழுவும் கே.கே.மதிவதனன், மாலா இராமச்சந்திரன் ஆகியோரை அணுகி சொந்தப்பாடல்களை உருவாக்கி இசையமைத்து இலங்கை வானொலியில் ஒலிபரப்புவதற்கேற்ற வகையில் தன்னைத் தகவமைத்தது. இச்சொந்தப்பாடலாக்கச் செயற்பாட்டில் திரு.செ.ஞானப்பிரகாசத்தின் பங்களிப்பு விதந்து கூறப்படத்தக்கதாகும். முன்னர் நாம் கூறிய நபர்கள் எழுதிய பாடல்வரிகளுக்கு இசையமைப்பதில் திரு.செ.ஞானப்பிரகாசம் அவர்கள் முக்கிய கலைஞராகத் திகழ்ந்துள்ளார். இத்தோடு தானும் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். இவரால் எழுதி இசையமைக்கப்பட்ட ‘மாநகராம் மட்டு மாநகராம்…’எனும் பாடல் மட்டுநகரின் தேசிய கீதம் போலவே எல்லோராலும் ஆர்வத்துடன் பாடப்பட்டு வந்தது. இப்பாடல் மட்டுநகரின் மக்களுடைய இதயங்களில் ஆதவன் இசைக்குழுவையும் திரு.செ.ஞானப்பிரகாசத்தையும் குடிபுகச் செய்தது என்கிறார்கள்.


இந்த மாநகராம் மட்டு மாநகராம் எனும் பாடல் எழுதப்பட்ட வரலாறு முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்.அதாவது மட்டு மாநகர சபையின் முதல்வராக 1971 இல் திரு. கே. தியாகராஜா அவர்கள் தெரிவான போது சபை அமர்வைத் தொடங்குவதற்கு முன்னர் ஒரு கீதம் இசைக்கப்பட வேண்டும் எனக்கூறி அக்கீதத்தை உருவாக்க மட்டுநகர் இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அப்போது தானும் தனது நண்பர்களும் மட்டக்களப்பு எல்லை வீதியிலுள்ள நரசிங்க வயிரவர் ஆலய வளாகத்தில் வழமையாக மாலை வேளையில் ஒன்றுகூடிக் கலந்துரையாடிய வேளையில் முதல்வர் கோரியுள்ள பாடலை ஆக்கும் உரையாடல் நடந்தது என்றும், அன்றிரவே இப்பாடலைத் தான் எழுதி இசையும் அமைத்ததாகவும் கூறுகின்றார். இப்பாடல் மட்டுநகரில் மட்டுமல்ல இலங்கை வானொலியூடாக தேசம் எங்கும் ஒலித்துத் தனக்குப் புகழ் தேடித்தந்ததாகவும் பெருமைப்படுகின்றார்.


இத்தோடு கே.கே.மதிவதனன் அவர்கள் எழுதி ஞானப்பிரகாசம் அவர்களால் இசையமைக்கப்பட்ட ‘எங்கள் நாடு எங்கள் தேசம்…’,’சிந்தையெல்லாம் நீயே செந்தமிழே தாயே’எனும் பாடல்களும் மட்டுநகர் ஆதவன் இசைக்குழுவை வடமாகாணத்தின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற கண்ணன் இசைக்குழுவின் ஆதிக்கம் இருந்த போதிலும் ஆதவன் இசைக்குழுவின் சொந்தப்பாடல்களால் வன்னியின் நகரங்களில் ஆதவன் இசைக்குழு தனது இசை நிகழ்ச்சிகளைச் செய்யும் வாய்ப்பைப் பெற்றது எனப்பெருமைப்படுகின்றார். மன்னார் மவட்டத்தில் பல தடவைகளும், வவுனியா, முல்லைத்தீவு, ஹெக்கிராவ, திருகோணமலை, கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம் எனப்பல இடங்களில் பல்வேறு மேடைகளில் மட்டுநகர் ஆதவன் இசைக்குழுவின் ஆற்றுகைகள் நடந்துள்ளது.

இவற்றில் அதிகமானவை வசூல் நிகழ்ச்சிகளாகவே இருந்துள்ளன. ஒழுங்கமைப்பாளர்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் வல்லமை மிகுந்த இசைக்குழுவாக ஆதவன் விளங்கியுள்ளது. இதற்கு அடிப்படையாக இருந்தது ஆதவன் இசைக்குழு உருவாக்கிய சொந்தப்பாடல்களே என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
இஸ்லாமியரின் இதயத்தைக் கவர்ந்த ஆதவன் இசைக்குழு
கிழக்கிலங்கையில் ஆதவன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் இரசித்தவர்களுள் இசுலாமிய சகோதரர்கள் முக்கியமானவர்கள். இசுலாமியர் இல்லங்களில் நடைபெறும் சுன்னத்துக் கல்யாணத்தில் ஆதவன் இசைக்குழுவின் பாடல்கள் ஆற்றுகை செய்யப்படுவதற்கான அழைப்புக்கள் நிறையவே கிடைத்துள்ளன.


காத்தான்குடி, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, சம்மாந்துறை எனப்பல ஊர்களில் ஆதவன் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சிகள் நிறையவே நடந்துள்ளன. இத்தோடு கல்முனை கடற்கரைப் பள்ளியின் விழாக் காலத்தில் ஆதவன் இசைக்குழுவிற்கு அழைப்புக்கள் கிடைத்து அதில் நாகூர் ஹனிபாவின் இசுலாமிய கீதங்கள், ஹாதிம் நாடகப் பாடல்கள், ஆதவனின் சொந்தப்பாடல்கள், காத்திரமான சினிமாப் பாடல்கள் எனப்பல்வகைப் பாடல்களைத் தாம் பாடியதாகவும் அந்நாட்களில் ஷஹாதிம்| எனும் இசுலாமிய இளவரசனின் கதை நாடகமாக கல்முனை கடற்கரைப்பள்ளி விழாக்காலத்தில் நடிக்கப்பட்டதாகவும் கல்முனையைச் சேர்ந்த சாலிம் என்பவர் எழுதிய ஹாதிம் பாடல்களுக்குத் தான் இசையமைத்துப் பாடியதாகவும் இதனால் இசுலாமிய இசை இரசிகர்கள் தம்மை வாஞ்சையோடு உபசரித்த வரலாறுகளையும் ஞாபகத்திற் கொணர்ந்து பூரிப்படைகிறார். இந்த வரலாற்றுப் பதிவினை பிரபல கவிஞர் சோலைக்கிளி அவர்கள் தேசியப் பத்திரிகை ஒன்றில் எழுதியமையினையும் நினைவுபடுத்துகிறார்.


வெகுசனப் பாடகன்
1972 ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஊறணிச் சந்தியில் விபத்தில் அகப்பட்டதால் தனது முகத்திலும் வாயிலும் காயங்கள் வந்த நிலையில் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குத்தான் உட்படுத்தப்பட்ட போது தன்னை அடையாளங்கண்டுகொண்ட வைத்தியர்களும், தாதியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பாடகரின் பாடுந்தன்மைக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதி மிகக்கவனமாக சிகிச்சை வழங்கியதாகவும் தனது பாடல்களுக்குக் கிடைத்த மரியாதையினைச் சொல்லி மகிழ்கிறார்.


அந்நாட்களில் உள்ளுர்ப் பாடகர்களுக்கும் சொந்தமாகப் பாடல்களைப்பாடி மக்கள் மனங்களில் இடம்பிடித்த பாடகர்களுக்கும் நிறைவான கௌரவமும் மாண்புகளும் பொது மக்களிடமிருந்து கிடைத்தமையினை பெருமிதமாக நினைவு கூர்கிறார். சொந்தப்பாடல்களால் உள்ளுர் இசைக்கலைஞர்கள் உள்ளுர் நட்சத்திரங்களாகவே இரசிகர்களால் மதிக்கப்பட்டார்கள.; இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் குடும்பத்துடன் வந்து கதைப்பார்கள் அன்பைப் பரிமாறுவார்கள் பரிசு தருவார்கள் நமது பாடல்கள் இத்தகைய வசீகரத்தை ஏற்படுத்தியிருந்தன. இன்றைய காலத்தில் இந்த நிலையினைக் காண்பது அரிதாகவே உள்ளது என ஆதங்கப்படுகின்றார்.


நீண்டகால யுத்தமும், உள்ளுர்க்கலைகளைப் போசிக்காத ஊடகங்களின் போக்கும் இத்தகைய நிலைமைக்கு காரணமாக இருந்துள்ளது என்பதைத் தனது அனுபவங்களுடாக உறுதிப்படுத்துகின்றார். கடந்த யுத்த நாட்களில் ஜெயம் எனும் சக கலைஞன் இசைக்குழுவின் செயற்பாடுகளை மீளக்கட்டியெழுப்ப முயன்றதையும் நன்றியுடன் நினைவுபடுத்துகிறார்.
அரசியல் மேடைகளில்…


திரு.செ.ஞானப்பிரகாசம் அவர்கள் தனது இசையாற்றுகையினை தமிழ்த்தேசிய அரசியல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தியுள்ளார். கோவைமகேசன்,ஈழவேந்தன், காசிஆனந்தன் முதலானோர் தலைமையில் மட்டக்களப்பிலிருந்து தம்பட்டை வரை அரசியல் பரப்புரைக் கூட்டங்கள் நடாத்தப்பட்ட போது கூட்டத்தின் தொடக்கத்தில் ஞானப்பிரகாசத்தின் பாடல் இசைக்கப்பட்டு அதன் பின்னரேயே உரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு தமிழரசுக் கட்சியினரின் பல்வேறு அரசியல் பரப்புரைக் கூட்டங்களில் ஞானப்பிரகாசத்தின் இசைமொழியும் மக்களை அரசியல் மயப்படுத்தியதில் பிரதான பங்கு வகித்து வந்துள்ளமை பற்றி அறிய முடிகின்றது.


கர்நாடக இசையினைக் கற்று மட்டக்களப்பில் இசையாற்றுகை செய்து வந்த சங்கீத பூசணம் சாந்தாவதி நாகையா எனும் சிறந்த பாடகியுடன் தானும் பல மேடைகளில் பாடியுள்ளதாகவும் பெருமைப்படுகின்றார்.


பஸான் எனப்படும் வியாகுலப் பிரசங்கப் பாடல்களை உணர்ச்சி ததும்பப்பாடுபவராகவும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த காவியங்களை சிங்களத்திலிருந்து தமிழாக்கி இசையமைத்து பதிவாக்கஞ் செய்தலில் குறித்த பாடல்களைத் தமிழாக்கிப் பாடிப்பதிவு செய்துள்ள இசைக்கலைஞனாகவும் இவர் செயலாற்றியுள்ளார்.


திரு.செ.ஞானப்பிரகாசம் அவர்கள் தனியாளாகவும் பல முக்கிய இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் விழாவில் சீர்காழி கோவிந்தராஜன் வருகைதந்து பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த போது அவரின் வருகை தடைபட்டதால் அந்த நிகழ்ச்சியில் தன்னை அழைப்பித்துப் பாடவைத்து அங்கிருந்த இரசிகர்கள் இரசித்ததாகவும், இதேபோல் மட்டுநகருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி எனும் தென்னிந்தியப் பாடகர் வருவதாக இருந்து அவருடைய வருகை தடைப்பட்டதால் அந்த நிகழ்ச்சிக்கும் தன்னையே அழைத்து நிகழ்ச்சியை நடத்தியதாகவும் கூறுகின்றார்.


தன்னை வளர்த்த ஆதவன் இசைக்குழுவில் பங்குபற்றிய நபர்களை அடிக்கடி நினைவுபடுத்துகின்றார். குறிப்பாக இசைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட செல்வராஜா அவர்களையும் வாத்தியக் கலைஞர்களான ஆரையூர் செல்வராஜா, கல்முனை யோகேந்திரன், கல்முனை சீனித்தம்பி, பாடகர்களான சேகர்ஜோசப், கல்முனை லோரன்ஸ், பெஞ்சமின், ஜெயந்தி, சாந்தி, சதானந்தன் தனது மனைவியும் பாடகியுமான சித்திராதேவி முதலானேரை நன்றியுடன் ஞாபகப்படுத்திக்கொண்டே உரையாடுகின்றார்.
அரச நிறுவனங்களாலும், பல்வேறு அமைப்புக்களாலும் ஏராளமான விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவருடைய சொந்தப் பாடல்களான பின்வரும் பாடல்கள் இசைப்பேழையாக வெளியிடப்பட்டுள்ளது.

  1. மாநகராம் மட்டு மாநகராம்…
  2. நீலக்கடல் ஓரத்திலே நித்தம் நித்தம்…
  3. சோலையிலே பொன் வண்டொன்று…
  4. உருண்டு செல்லும் உலகினிலே…
  5. தம்பிகளா அன்புத் தங்கைகளா…
  6. தேர்த்திருவிழா பார்க்க வாறியா…
  7. அண்ணன்மாரே தம்பிமாரே கொஞ்சம் கேளுங்கோ…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More