Home இந்தியா “ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”

“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”

by admin



மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த தனது நினைவுகளையும் எண்ணங்களையும் ‘ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என் காதல் கடிதம்’ எனும் தலைப்பில் திறந்த மடலாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதன் தமிழாக்கம் பின்வருமாறு.

உங்களில் கோடிக்கணக்கானவர்களை போல நானும் ஸ்ரீதேவி மிகவும் அழகான, ஈர்ப்புக்குரிய பெண் என்று நினைத்தேன். இந்த நாட்டின் மிகப்பெரிய திரை நட்சத்திரமான அவர் 20 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளித் திரையில் கோலோச்சினார்.

ஆனால், அது இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே. ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தாலும், வாழ்வும் மரணமும் கணிக்க முடியாதது, கொடூரமானது, வலுவிழந்தது மற்றும் புதிரானது என்பதற்கான ஒரு மோசமான நினைவூட்டல்தான் ஸ்ரீதேவியின் மரணம்.

ஸ்ரீதேவியின் இறப்புக்குப் பிறகு அவரது அழகு, நடிப்பாற்றல், அவரது மரணம் எவ்வாறு பாதித்துள்ளது என்பது எல்லாம் பற்றி பேச அனைவரையும்விட என்னிடம் அதிக விடயங்கள் உள்ளன.

‘க்ஷணம்’ மற்றும் ‘கோவிந்தா கோவிந்தா’ ஆகிய எனது இரு படங்களில் அவர் நடித்தபோது அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வெளியுலகம் நினைப்பதைவிட எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பெரும்பாலனவர்களுக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை மிகவும் நேர்த்தியானது என்ற எண்ணமே உண்டு. அழகிய முகம், சிறந்த திறமை, இரு அழகான மகள்களுடன் நிலையான குடும்பம் இருந்தது அவருக்கு. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை விரும்பத்தக்கதாகவும், பொறாமைப்படும் வகையிலும் இருந்தது. ஆனால், உண்மையிலேயே ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக இருந்தாரா?

அவரைச் சந்தித்த நாள் முதலே அவரை நான் நன்கு அறிவேன். அவரது தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடிக்கும் பறவையைப் போல இருந்ததையும், அவரது தந்தையின் இறப்புக்குப் பின்னர் மிகவும் கட்டுப்பாடுகள் விதித்த அவரது தாயால் அவர் ஒரு கூண்டுப் பறவையைப் போல இருந்ததையும் நான் என் கண்ணாரக் கண்டுள்ளேன்.

அந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு கருப்பு பணமாகத்தான் சம்பளம் வழங்கப்படும். வருமான வரி சோதனைகளுக்கு பயந்து அவரது தந்தை, தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்பினார். அவர் இறப்புக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஸ்ரீதேவியை ஏமாற்றினார்கள்.

ஸ்ரீதேவியின் தாயும் அவரது அறியாமையால், பிரச்சனைக்கு உரிய பல சொத்துகளில் முதலீடு செய்ய, அந்தப் பிழைகள் அனைத்தும் சேர்ந்து அவர் ஒன்றும் இல்லாதாராகவே இருந்தார். போனி கபூர் அவரது வாழ்க்கைக்குள் நுழையும்போது அவர் கிட்டத்தட்ட அனைத்தை சொத்துக்களையும் இழந்தவராகவே இருந்தார்.

ஏற்கனவே கடுமையான கடன் நெருக்கடியில் இருந்த போனி கபூரால், ஸ்ரீதேவி சாய்ந்து அழுவதற்கு தனது தோள்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மூளை அறுவைசிகிச்சையால் ஸ்ரீதேவியின் தாய் உளவியல் நோயாளியானார். ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவும் தனது அண்டை வீட்டு நபர் ஒருவருடன் தாமாகச் சென்று மணம் புரிந்துகொண்டார்.

இறப்பதற்கு முன்பு ஸ்ரீதேவியின் தாய், சொத்துகள் அனைத்தையும் ஸ்ரீதேவியின் பேரிலேயே உயிலாக எழுதி வைத்தார். ஆனால், அந்த உயிலில் கையெழுத்திடும் தனது தாய் தெளிவாகச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்று ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்குத் தொடுத்தார்.

அந்தச் சூழ்நிலையில், கோடிக்கணக்கானவர்களால் விரும்பப்பட்ட ஸ்ரீதேவி, பணம் ஏதுமின்றி தனித்து நின்றார். அவருடன் இருந்தது போனி கபூர் மட்டும்தான்.

போனி கபூரின் தாய் ஸ்ரீதேவியைத் தனது குடும்பத்தைக் கலைத்தவராகவே பார்த்தார். போனி கபூரின் முதல் மனைவி மோனாவுக்கு செய்தவற்றுக்காக, ஒருமுறை ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ஸ்ரீதேவியின் வயிற்றில் குத்தினார் போனியின் தாய்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த சிறு காலக்கட்டத்தைத் தவிர அவர் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார். எதிர்காலம் பற்றிய உத்தரவாதமின்மை, தனி வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் அவரது மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் நிம்மதியாகவே இல்லை.

மிகவும் இளம் வயதிலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால், அவரால் இயல்பான வகையில் வளர முடியவில்லை. புற அமைதியைவிட அவரது மனநிலையே மிகவும் கவலைக்குரிய விடயமாக இருந்தது. அதனால், அவர் தன்னைத் தானே தாழ்வாக நினைத்தார்.

அவர் பெரும்பாலானவர்களுக்கு அழகானவராகவே தோன்றினார். ஆனால், ஸ்ரீதேவி தன்னைத் தானே அழகானவராக நினைத்தாரா? ஆம். நினைத்தார். ஆனால், எல்லா நடிகைகளுக்கும் முதுமை என்பது ஒரு சிம்மசொப்பனமாகவே இருக்கும். ஸ்ரீதேவியும் அதற்கு விதிவிலக்கல்ல.

அவர் அவ்வப்போது அழகுக்காக மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளை செய்துகொண்டார். அவை வெளிப்படையாகவே தெரிந்தன.

ஸ்ரீதேவி தம்மைப்பற்றி அதிகம் பேசாதவராகவே இருந்தார். அதன் காரணம் அவர் தன்னைச் சுற்றி ஒரு மனச்சுவர் எழுப்பி இருந்ததுதான். தனக்குள் என்ன உள்ளது என்பதை பிறர் அறிந்துகொள்வார்களோ என்பது குறித்து ஸ்ரீதேவி ஒருவித அச்சத்துடனேயே இருந்தார்.

அது அவரது தவறல்ல. மிகவும் இளம் வயதிலேயே அவர் புகழ் வெளிச்சம் பெற்றுவிட்டதால் சுதந்திரமாக இருக்க அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கவில்லை.

கேமரா மும்பு மட்டும் ‘மேக் அப்’ போட்டுகொண்டு அவர் வேறு ஒருவராக நடிக்கவில்லை. தன் மனதுக்கும் மேக் அப் போட்டுகொண்டு அவர் கேமராவுக்கு பின்னும் நடிக்கவேண்டியிருந்தது.

ஸ்ரீதேவி தனது பெற்றோர், உறவினர், கணவர், குழந்தைகள் என அவர்களது நோக்கங்களாலேயே இயக்கப்பட்டு வந்தார். பல பிரபலமான பெற்றோர்கள் நினைப்பதை போலவே தனது மகள்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா என்பது குறித்த அச்சத்தில் அவரும் இருந்தார்.

ஒரு பெண்ணின் உடலுக்குள் சிக்கிக்கொண்ட குழந்தையாயாகவே ஸ்ரீதேவி இருந்தார். அவர் மிகவும் அப்பாவி ஆனால் தனது அனுபவங்களால் ஒரு சந்தேக மனநிலையுடன் அவர் இருந்தார். எனவே அது அப்பாவித்தனத்துடன் பொருந்திப்போகவில்லை.

அவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பொதுவாக நான் யார் மரணத்தின் பின்னும் ‘அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று கூறுவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு நான் அதைச் சொல்லவே விரும்புகிறேன். காரணம், அவர் இறந்துவிட்டதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப்போகிறார்.

எனது சொந்த அனுபவத்தில் அவர் அமைதியுடன் இருந்தது கேமரா முன்பு மட்டுமே. அதுவும் ‘ஆக்‌ஷன்’ மாற்று ‘கட்’ சொல்லப்படுவதற்கான இடைவேளையின்போது மட்டுமே. ஏனெனில், கசப்பான உண்மைகளை விட்டுவிட்டு அப்போது அவரால் ஒரு கற்பனை உலகத்துக்குள் நுழைந்துவிடமுடியும்.

அதனால்தான், அவருக்கு வலியைத் தரும் விடயங்களில் இருந்து, வெகுதூரம் சென்று அவரால் மிகவும் நிம்மதியாக இப்போது இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

உங்கள் ரசிகர்கள் மற்றும் சுற்றி இருந்தவர்களான நாங்கள் உங்களைச் சோர்வடையச் செய்து, உங்கள் குழந்தைப் பருவம் முதலே இன்னல்களை மட்டுமே தந்தாலும் நீங்கள் எங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே தந்தீர்கள்.

இது நியாயம் இல்லைதான். ஆனால், இப்போதைக்கு வேறு எதையும் எங்களால் செய்ய முடியாது.

கண்களில் உண்மையான அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் ஒரு சுதந்திரமான பறவையைப் போல சொர்க்கத்தையும் தாண்டி நீங்கள் பறப்பதைப் போன்ற காட்சிகள் எனக்குத் தோன்றுகின்றன.

எனக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த முறை நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முறை எங்களைத் திருத்திக்கொண்டு உங்களுக்கு தகுதியானவர்களாக இருக்க எங்களால் ஆனவரை முயல்வோம்.

இந்த ஒரு வாய்ப்பை மட்டும் எங்களுக்கு கொடுங்கள் ஸ்ரீதேவி. ஏனெனில் நாங்கள் அனைவரும் உங்களை உண்மையாக நேசிக்கிறோம்.

இப்படியே என்னால் எழுதிக்கொண்டு போக முடியும். ஆனால், என்னால் கண்ணீரையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை, என்று அந்த கடிதத்தை முடித்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More