பிரான்ஸில் லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோஷிக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.
நிக்கலஸ் சார்க்கோஷி தனக்கு எதிரான வழக்கு ஒன்றில் நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் வழங்குவதற்குத் தனது சட்டத்தரணி மூலம் முயற்சித்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த வலதுசாரி அரசியல்வாதியான சார்க்கோஷி, “செய்வது தவறு எனத் தெரிந்தே(குற்றம்)செய்திருக்கிறார்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளார். அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் “நீதித்துறை பற்றிய தப்பான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சார்க்கோஷி தனது சிறைக் காலத்தில் ஓராண்டை இலத்திரனியல் காவல் காப்புடன் (electronic bracelet) வீட்டில் இருந்தே கழிக்க முடியும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். ஆயினும் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு சார்க்கோஷிக்கு அவகாசம் உள்ளது.
தீர்ப்புக்கு எதிரான அவரது மேன்முறை யீடுகள் நிராகரிக்கப்பட்டால் பிரான்ஸில் வழக்கு விசாரணை ஒன்றில் காவலு டனான தண்டனையைப் பெறுகின்ற (custodial sentence) முதலாவது முன்னாள் அதிபராக அவர் கருதப்படுவார். 66 வயதுடைய சார்க்கோஷி 2007 முதல் 2012 வரை அதிபர் பதவியில் இருந்தவர். அவரது தேர்தல் பிரசாரக் காலத்திலும் பின்னர் பதவிக் காலத்திலும் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற லஞ்ச ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான சில வழக்குகளில் அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
2007 இல் சார்க்கோஷி தனது தேர்தல் பிரசாரத்துக்காக பிரான்ஸின் பிரபல செல்வந்தச் சீமாட்டியான லிலியன் பெத்தான்கூவிடம் (Liliane Bettencourt) இருந்து முறைகேடாக நிதி உதவி பெற்றார் எனக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை கள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஒருவருக்கு தனது சட்டவாளருடன் சேர்ந்து ரகசியமாக லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று கூறப்படுகின்ற பிறிதொரு வழக்கி லேயே இன்று அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
செல்வாக்கான பதவி ஒன்றை வழங்குவது தொடர்பாக சார்க்கோஷி யின் சட்டத்தரணி நீதிபதியுடன் ரகசிய மாக நடத்திய தொலைபேசி உரையா டலின் பதிவு பொலீஸாரிடம் சிக்கியதை அடுத்தே இந்த விவகாரம் அம்பலமானது.சார்க்கோஷியுடன் அந்த லஞ்ச பேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி மற்றும் சட்டத்த ரணி ஆகியோருக்கும் இன்று சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸில் ஜக் சிராக்கிற்குப் (Jacques Chirac) பிறகு நீதிமன்றம் ஒன்றினால் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்ற முன்னாள் அதிபர் சார்க்கோஷி ஆவார்.ஜக் சிராக் பாரிஸ் நகர மேயராக இருந்த சமயத்தில் தனது கட்சிக்கு நிதி சேகரிப்ப தற்காகப் போலியான பதவிகளை உருவாக்கினார் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அவரது உடல் நிலை காரணமாக விசாரணைகளில் சமூகமளிப்பதில் இருந்து அவருக்கு விலக்களிக்கப்பட்டது. #லஞ்ச_ஊழல் #சார்க்கோஷி #சிறைத்தண்டனை #பிரான்ஸில்
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.01-03-2021