அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக ரஸ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமொிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளான உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் மற்றும் மைக்ரோசொப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சைபர் தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுப்பது மிகவும் சிக்கலானது என்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகாமை (சி.ஐ.எஸ்.ஏ) அப்போது தொிவித்திருந்தது.
இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஸ்யா இருப்பதாக அமொிக்கா குற்றம் சுமத்திய போதிலும் ரஸ்யா அதற்கு மறுப்புத் தொிவித்திருந்தது.
அதேவேளை இது தொடா்பில் நடைபெற்ற விசாரணையின்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஸ்யாவின் உளவுத்துறை இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக தொிவித்திருந்தாா். எனினும் இந்தக் குற்றச்சாட்டையும் ரஸ்யா மறுத்தது.
இந்த சைபர் தாக்குதல் குறித்து அப்போது பேசிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனத் தொிவித்திருந்தாா்.
இந்த நிலையில் ‘சோலார் விண்ட்ஸ் ஹக்கிங்’ விவகாரத்தில் ரஸ்யா மீது வலுவான பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் பேரில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ரஸ்யா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாகவும் அடுத்த 3 வாரங்களுக்குள் ரஸ்யாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ரஸ்யா #பொருளாதார_தடை #அமொிக்கா #சைபர்_தாக்குதல்