நெருப்பு வட்டி கடன்களை மீள செலுத்த இயலாமையால் அவதிப்பட்டு வரும் இலட்சக்கணக்கான இலங்கை பெண்களுக்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘சத்தியாக்கிரகம்’ இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது.
இந்தப் போராட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க இதுவரை எந்தவொரு அதிகாரியும் வருகைதரவில்லை என, நுண் கடன்களை உடனடியாக இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, ஹிங்குரக்கொட பிரதேசத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ள, நுண் கடன் சேவையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரேணுகா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பெண்கள் கடன் சுமையை தாங்க முடியாமல், 200ற்கும் மேற்பட்ட பெண்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வட்டி விகிதங்கள் காரணமாக கடனைத் மீளச் செலுத்த முடியாத 2.4 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பெண்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வசூலிப்பவர்களின் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“நுண் கடனை செலுத்த முடியாத பல பெண்கள் இப்போது அந்த கடனை செலுத்த வேறு கடன்களை வாங்கி, கடன் வலைக்குள் சிக்கியுள்ளனர். இத்தகைய துன்புறுத்தல்களுக்கு மத்தியில், பல பெண்கள் கடன்களை அடைப்பதற்காக தங்கள் உடமைகளையும் வீட்டு பொருட்களையும் விற்பனை செய்துள்ளனர். ஏனையவர்கள் தாம் வசிக்கும் வீட்டை கூட அடமானம் வைத்து நுண் கடன்களை செலுத்த முயன்றனர்.” என நுண் கடன் சேவையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200ற்கும் மேற்பட்ட பெண்கள், உழைக்கும் வருமானத்தை கடனை செலுத்துவது தொடர்பான குடும்ப தகராறு மற்றும் வீட்டு வன்முறையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளால், நுண் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நம்பி கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளதோடு, அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாக்க வாக்குகளை கொள்ளையடித்துள்ளதாக, நுண் கடன் சேவையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
அரசாங்கம் பொறுப்பைத் துறந்துள்ளது
அரசாங்கம் அடிமட்ட பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதோடு, வறுமை ஒழிப்பு பொறுப்பை இலாப நோக்குடைய நிதித் துறையிடம் கையளித்துள்ளமை, நுண் கடன் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் எனவும், ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்து இந்த கடன்களை இரத்து செய்து, பெண்களை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுமாறு அவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நிதித் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் சட்டமொன்று இயற்பட வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இலாப நோக்கத்துடனான நுண் கடன் சேவைகளுக்கு பதிலாக சிறு உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய கூட்டுறவு போன்ற பொறிறைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் எனவுத் அவர்கள் கோரியுள்ளனர்.
நுண் கடன் சேவையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் சத்தியாகிரகத்தின் முக்கிய ஐந்து கோரிக்கைகள்
01. அனைத்து நுண் கடன்களையும் இரத்துசெய்!
02. கொள்ளையடிக்கும் நுண் கடன் கணக்காய்வு செய்யப்படும் வரை உடனடியாக அனைத்து கடன்களையும் வசூலிப்பதை நிறுத்துங்கள்!
03. நுண் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்!
04. நுண் கடனால் பாதிக்கப்பட்டவர்களை மோசமான பட்டியலிலிருந்து (CRIB) உடனடியாக அகற்றவும்!
05. பாகுபாடற்ற சமூக விடுதலையை மையமாகக் கொண்ட பெண்கள் நிதி அமைப்பை நிறுவுங்கள்!
தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லையென, நுண் கடன் சேவையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவரான பிரியந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் எமக்கு செவிசாய்த்து, இதுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த சத்தியாகிரகம் தொடரும்” #பாதிக்கப்பட்ட #பெண்களுக்கு #நீதி_கோரி #சத்தியாக்கிரகம் #நுண்கடன் #தற்கொலை