தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு விசேட சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களுக்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 8 நாட்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்ட புரட்சியினால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர் .
இதனையடுத்து அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் திகதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
குறித்தசட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று மாலை வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள் என விலங்குகள் நல வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.