Home இலங்கை யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று, மீண்டும் தலைதூக்கி உள்ளது.

யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று, மீண்டும் தலைதூக்கி உள்ளது.

by admin

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல…


யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடகக் குழுவொன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.

 60 மாத பதவிக்காலத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவேன்


 அடுத்த ஜனாதிபதி பற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை

 சட்டங்கள் கொண்டுவரப்படுவது மக்களின் நன்மைக்கே..


 வறிய நிலையில் உள்ள மக்களுக்கு மேலும் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகள்..


 மக்களின் கோரிக்கையின் பேரில் வலப்பனை, பூன்டுலோயா முழுமையான அபிவிருத்தி கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு..


ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வெண்டுமென்ற தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவவித அழுத்தங்களையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவையின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்திற்குள் தள்ள முயற்சித்தால் அத்தகைய வர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்திற்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.


இன்று (20) முற்பகல் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ 15வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும். 60 மாதங்களைக்கொண்ட பதவிக் காலத்தில் 16 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இன்னும் குறிப்பிடத்தக்க காலம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி சிலர் குழப்பமடைந்துள்ளனர். அதுபற்றி எவரும் குழப்பமடையத் தேவையில்லை. என்பதுடன், அதனை தீர்மானிப்பது மக்களேயாகும். எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் தேசிய பொருளாதாரத்தையும் கிராமிய மக்களையும் முன்னேற்றுவதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.


அதிகாரிகளின் பொறுப்பு மக்களின் வாழ்க்கைக்கான வழிகளை செய்து கொடுப்பதாகும். ஒருபோதும் அவர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக்கூடாது. மக்கள் வாழ்க்கை நிலைமைகளை பாதிக்கும் வகையிலான எவ்வித செயற்பாடுகளையும் அரச அதிகாரிகளிடம் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.


நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன். சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவ, மாத்தளை, லக்கலை, ரிதிகம, வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது. அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.


வறுமையை ஒழித்து கிராமிய மக்களை பொருாளதார ரீதியாக முன்னேற்றவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும். 75 வீதமாக உள்ள கிராமிய மக்களில் 35 வீதமானோர் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவம் ஜனாதிபதி தெரிவித்தார்.


சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 35,000 பேருக்கு தற்போது தொழில்கள் வழங்கபபட்டுள்ளன. ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்கும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்களை வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அதற்காக பொருத்தமானவர்களை தெரிவு செய்யும்போது சரியான ஆட்களை இனங்காண்பது கிராமிய அரச அதிகாரிகளினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாதிருப்பது நாட்டின் அபிவிருத்தித்திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.


“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.

தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம். இன்றைய “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் யோம்புவெல்தென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு வலப்பனை நகரத்தில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அது வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். ஊவ வெல்லச போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய மக்கள் வாழ்கின்ற பாரம்பரிய பிரதேசமாக உள்ள யோம்புவெல் தென்ன கெப்பட்டிபொல நிலமே மீண்டும் சிங்கள இராணுவத்துடன் ஒன்றிணைந்த பிரதேசமாக பிரபல்யம் பெற்றுள்ளது. மருத்துவ குணம்கொண்ட தாவரமான “யோம்புவெல்” அதிகளவு காணப்பட்டதால் இக்கிராமத்தின் பெயர் உருவானதாக குறிப்பிடப்படுகின்றது. 139 குடும்பங்கள் வசிக்கின்ற யோம்புவெல் தென்ன கிராமத்தின் தற்போதைய சனத்தொகை 397 ஆகும். நெல் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையே இம்மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படுகின்றது.


“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கு பற்றுவதற்காக நில்தண்டாஹின்ன பொது மைதானத்திலிருந்து யோம்புவெல்தென்னவிற்கு செல்லும் வழியில் திரண்டு இருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து அதன்போது ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்ததுடன், கலகன்வத்த நவோதய பாடசாலை மாணவர்களுடன் புகைப்படத்திற்கும் தோற்றினார்.


உள்நாட்டில் சொசேஜஸ் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஒருவர் ஜனாதிபதி அவர்களுக்கு அதனை அறிமுகப்படுத்தியதுடன், தான் அந்த கருத்தை வியத்மக மாநாடொன்றின்போது பெற்றுக் கொண்டதக குறிப்பிட்டு, அதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஜனாதிபதி அவர்களுக்கு காட்டினார். நீண்ட காலமாக வன விலங்குகளினால் தமது பயிர்களுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். மொபிடெல் நிறுவனம் வித்தியாபதீப இரண்டாம் நிலை பாடசாலைக்கும் சிதுஹத் மகா வித்தியாலயத்திற்கும் அன்பளிப்பு செய்த இணைய வசதியுடன்கூடிய மடிக் கணினியையும் டயலொக் நிறுவனம் தென்னபோதி ஆரம்ப பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த தொலைக்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.


‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்கள் பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.


பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை வீதி போக்குவரத்து கஷ்டங்களாகும். இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கல்வத்த, யோம்புவெல்தென்ன வீதி, தெரிபெஹ மோலந்தேவ, கலஹா, தெல்தோட்டையிலிருந்து ரிகிலகஸ்கட வீதி, யட்டிவெல்ல மத்துரட்ட வீதி, தெரிபெஹ நில்தண்டாஹின்ன வீதி மற்றும் பல சிறிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவுப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.


பிரதேசத்தில் பிரதான மற்றும் சிறியளவிலான 15 பாலங்களை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. யோம்புவெல்தென்ன, லவெல்லகொல்ல, மகுனகஹபிட்டிய, ஹப்புகஹபிட்டிய, கலகத்வத்த உள்ளிட்ட பிரதேசங்களின் அனைத்து குடிநீர்த் திட்டங்களையும் மக்களின் தேவையின்பேரில் முழுமைப் படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வலப்பனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. தடகெலே, வெலித்துடுவ, பரஹாலந்த, கிரிவடுன்ன, மூகலன், உடகந்த உள்ளிட்ட பிரதேசங்களின் மேலும் பல குளங்களை புனரமைக்கும் பணிகளையும் விரைபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.


பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கலகத்வத்த நவோதய பாடசாலை, அருனோதய இந்து வித்தியாலயம், ரன்கெலம்புவ மகாவித்தியாலயம், உடமாதுற ஸ்ரீ வித்தியா பிரதீப வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. மடுல்ல இரண்டாம் நிலை பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒன்று வீதம் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யவும் பணிப்புரை வழங்கப்பட்டது.


விகாரைகளில் நடத்திச் செல்லப்படும் 12 அறநெறிப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் பிரிவெனாக்களின் பௌதீக தேவைகளை நிறைவு செய்து தருமாறு பிக்குகள் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்தார்.


13 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள காணி பிரச்சினைகள் குறித்து “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தின்போது இனங்காணப்பட்டுள்ளது. அந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து உறுதிப்பத்திரங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். காட்டு யானைகள் பிரச்சினைக்கு தீர்வாக பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள அனைத்து யானை வேலிகளையும் புனரமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பைனஸ், டேபன்டைன் சுற்றாடலுக்கு பாதிப்பானதாகும் என மக்கள் சுட்டிக்காட்டினர். அவற்றை நீக்கி தேசிய வனச் செய்கையை மேம்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் சுற்றாடல் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


உலகில் சுவையான கோப்பி வகைகளில் நான்காவது இடத்தில் கொப்பிரியா, எரபிக்கா, லக்பெரகும் உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பொருத்தமான சூழலும் காலநிலையும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. அந்த கோப்பி செய்கையை மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

வலப்பனை, பொகவந்தலாவ, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, தெரிபெஹ பிரதேச மற்றும் கிராமிய வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


மாவட்டத்தின் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


ரிக்கில்லகஸ்கட, வலப்பனை வைத்தியசாலைகளில் இரண்டு பிக்கு வாட்டுகளை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை கண்டறிந்து நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.


பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கு இராணுவ முகாம் ஒன்றை வலப்பனை பிரதேசத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. வலப்பனை பிரதேசத்தில் உர மத்திய நிலையமொன்றின் தேவை பற்றி மக்கள் சுட்டிக்காட்டினர். மாவட்டத்தில் இருந்துவந்த பயிர்களை சேகரிக்கும் மத்திய நிலையமும் கடந்த அரசாங்கத்தினால் கவனிக்கப்படா திருந்தமை மக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. பயிர்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களை மாவட்டத்தின் பொருத்தமான இடங்களில் தாபிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார். பயிரிட முடியாதுள்ள தரிசு வயல் காணிகளில் கறுவா மற்றும் கற்றாலை செய்கையை பிரசித்தப்படுத்தவும் முன்மொழியப்பட்டது. நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வந்த வலப்பனை மற்றும் பூன்டுலோயா நகரங்களை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது


அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, நிமல் பியதிஸ்ஸ, ரமேஸ் மருதபாண்டி, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.03.20

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More