அருளார் அமுதம் வழங்கும் அருட் சிவயோக வள்ளல்
யோகசுவாமிகள் செல்லப்பதேசிகர் அருளால் சிவபோகத்தில் பொருந்திய இடம் நல்லூர்த் தேரடி. அவர் அரை நூற்றாண்டு காலமாக உறைந்து சிவதொண்டு புரிந்த இடம் கொழும்புத்துறை ஆச்சிரமம். தமது சாந்நித்தியம் என்றும் நின்று நிலவும் வண்ணமாய்க் கோவில் கொண்டருளும் இடம் சிவதொண்டன் நிலையம்.
செல்லப்பமூர்த்தம் ஒரு சிவமூர்த்தமே. யோகசுவாமிகள் இம்மூர்த்தத்தை மூவர்களும் ஒன்றாகச் சேர்ந்த நல்ல மூர்த்தம் எனப் போற்றுவார். இக்குருமூர்த்தம் யோகசுவாமிகளைத் தம்மோடு கூடக் குடியிருத்தி ஞானவித்தையின் நுட்பங்களையெல்லாம் ஒன்றும் ஒழியாமற் போதித்து, அப்போதனை நிறைவுற்றபின் ஒருநாள் யோகசுவாமிகளை உவகை பூத்த முகத்துடன் உற்றுநோக்கி ஒருபொல்லாப்புமில்லை என்று அருவமும் காட்டி, உருவமும் காட்டி, அப்பாற்கப்பாலாம் அருள்நிலை காட்டிக்காட்டி, அந்தம் ஆதியில்லாச் சொருபமும் காட்டிச் சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டி விட்டார். அந்த நன்மோன நிறைவில் மாட்டுப்பட்டுக் கிடக்கும் நிலையினின்றும் பின் கணமேனும் சுவாமி பிரிந்திருந்ததில்லை அவர் சந்ததமும் மோனநிலை தவறாத ஞானநிட்டர். அவர் செல்லப்பரைப் போற்றிச் சொன்ன “ஆறாறு தத்துவத்துக்கப்பாலே உள்ளவன், மாறாக்கருணையன், மருமத்தில் மருமமாயிருப்பான், மாதவருமறியாத மகத்தான்” என்னும் மொழிகள் அவருக்கும் பொருந்துவதே. (இத்தகைய மகத்தான ஞான குரவனை சித்து மயக்கத்தில் அகப்பட்ட கூட்டத்துள் ஒருவராக வைத்துக் கிளிப்பிள்ளை போலச் சொல்லிவருவது அழகன்று.)
ஆசான் அருளால் ஆசானான யோகசுவாமிகளது திருவுள்ளத்திலே ஆசான் தமக்கு ஈந்த அனுபவ சித்தாந்தத்தை உலகறிய விளக்கம் செய்ய வேண்டுமென்ற திருக்குறிப்புத் தோன்றியதும் கொழும்புத்துறைக் கொட்டிலிற் போயமர்ந்தார். தக்கவர்களைத் தேடி யாழ்ப்பாணத்துச் சந்தி தெருக்கள், சந்தை கடைகளெங்கும் திரிந்தார். நம்மவர் உத்தியோகம் புரிந்த கொழும்புப்பட்டினம், கண்டி, மலைநாடெல்லாம் மாதம் ஒருமுறை சுற்றி வந்தார். ஒரு ஞானிக்கும் ஞான நாட்டமுடையோர்க்குமான சம்பந்தம் மலருக்கும் மதுவண்டுக்கும் உள்ளதும், பழமரத்துக்கும் வெளவாலுக்கும் உள்ளதும் போன்ற சம்பந்தமெனவே தோன்றுகின்றது.
சுவாமிகளை ஒரு பெரும் திருக்கூட்டம் சூழ்ந்தது. அத்திருக்கூட்டத்தில் சித்தாந்தசாத்திர நூல்களைச் சிந்தித்துச் சிந்தித்து சோதியாய்ப் பரிணமித்த திருவிளங்க தேசிகர் ஆதிய தீவிரதரபக்குவர்கள் இருந்தனர். திருவடியின்பத்தைக் குறியாயக் கொண்டு சுவாமிகளின் பின்னே முன்பின் நாடாது செல்லவல்ல மார்க்கண்டு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் முதலான உத்தமச் சீடர்கள் இருந்தனர். பிரம்மஸ்ரீ கணேசய்யர், சோமசுந்தரப்புலவர் ஆகிய இருமொழிக்கடல்களும் பழுத்த தமிழ்ப்புலவர்களும் இருந்தனர். சேர். பொன். இராமநாதன் போன்ற நாட்டுத் தலைவர்கள் கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்கு வந்து திருக்கதவம் திறக்கும் தருணம் பார்த்துக் கிடுகிடென்ற நடுக்கத்துடன் நின்றனர். S.W.R.D. பண்டாரநாயக்கா அவர்கள் தலதா மாளிகைக்குட் செல்வது போன்ற பக்குவத்துடன் கொழும்புத்துறைக் கொட்டிலுட் புகுந்து சுவாமிகளின் ஆசிவேண்டி நின்றனர். அபயசேகர, திகிரிபண்டார, சுசநாக வீரப்பெரும் ஆதிய பௌத்த அறிஞர்கள் அவரைத் தரிசித்துச் சென்றனர். இராமகிருஷ்ண மடத்துத் தலைவராயிருந்த சுவாமி அசங்கானந்தா மகராஜ் அவர்கள் தாம் தரிசித்த இரு மகத்தான ஞானியருள் யாழ்ப்பாணச் சோதியான யோகசுவாமிகள் ஒருவர் எனப் போற்றினார். கனேடியத் தூதுவராய்ப் பணிபுரிந்த கலாநிதி ஜோர்ஜ் அவர்கள் சுவாமிகளைத் தமது ஆன்மீகக் குருவாகக் கொண்டு அடிக்கடி தரிசித்து மோனத்தேன் பருகிக் களித்தார். சோல்பரிப் பிரபுவின் புதல்வரான றாம்ஸ்போதம் என்பவர் சந்தசுவாமி எனும் நாமம் சூடி சுவாமிகளின் துறவுச்சீடருள் ஒருவராய்ச் சிவதொண்டு புரிந்தார். நீதியரசராயிருந்த அக்பர் பொதுக்கூட்டங்களுக்கு விருந்தினராய்ச் சென்று உரையாற்றிய போதெல்லாம் சுவாமிகளைப்பற்றிச் சில வசனங்களாதல் சொல்வதில் தவறாத சுவாமிப்பத்தராய் ஒழுகினார்.
ஸ்ரீகாந்தா போன்ற அரச அதிபர்கள் சுவாமிகளின் அடிப்பொடியாகப் பணி செய்தனர். ஆசிரியர்கள், வைத்தியர்கள் என்று அரச பணிபுரிந்தோரும், கமஞ்செய்தோரும், ஆச்சிமாரும், குழந்தைகளும் சுவாமிகளிடம் அன்பு பூண்டனர். குடிப்பழக்கத்தைவிட முடியாதோரும், கடத்தல் மன்னர்களும், நாத்திகரும் கூட சுவாமிகள் திருமுன்னிலையிலே பயபக்தியுடன் உடல் கோட்டி நின்றனர். தன்னில் எல்லாரையும் எல்லாரிலும் தன்னையும் காணும் பேரன்பாளர் ஒருவரிடம் எல்லாரும் அன்பு பூண்டிருத்தல் இயல்பன்றோ!
சுவாமிகள் தம்மைச் சூழ்ந்த திருக்கூட்டத்தினருக்கு அவரவர்க்கு அதுவதுவாய் நின்று அருள் சொரிந்தார்.
அவரிடம் வந்த அனைவரும் தாம் ஏந்திய பாத்திரத்தின் கொள்ளளவிற்குத்தக அருளமுதத்தைப் பெற்றனர். அவர் சிலருக்கு வாக்கியப்பிரசாதம் ஈந்தனர். அப்பிரசாதம் அருள் நனி சுரக்கும் அமுதகீதங்களாகவும் இருந்தன; ஒரிரு சொற்களான சின்மொழிகளாகவும் இருந்தன.
“நாங்கள் பரிசுத்தரும் தெய்வத்துள் வைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். எங்களுக்குள் ஒரு மாறுபாடும் இல்லை. நாங்கள் எல்லாம் ஒரே ஆள். இதுவே நமது உண்மைச் சுபாவம்! வித்தியாசங்கள் எல்லாம் உண்மைச் சுபாவத்தின் சிறப்புக்கள். அவற்றால் ஒரு குறையுமில்லை. கடவுளால் ஒன்று செய்ய முடியாது; அவரால் நம்மைப் பிரிந்திருக்க முடியாது.
இந்தக்குழந்தைக்கும் எனக்கும் ஒரு வயது” என்றவண்ணம் எளிதாய் எவர்க்கும் இன்னுரை சொன்னார். அவர் தெய்வத்தோடு நமக்குள்ள சம்பந்தத்தை நினைவூட்டிய வண்ணம் தாம் ஒரு நடமாடுந் தெய்வமாகத் திரிந்தார். எங்கும் மங்களம் தங்குக என்று செப்பிக்கொண்டு எங்கும் திரிந்தார். அதனால் யாழ்ப்பாணம் எங்கும் திருவும், கல்வியும், சீரும் தழைத்தன. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தார் கல்வி, செல்வம், உத்தியோகம் ஆகியவற்றில் முன்னணியினராய் நின்றதன் இரகசியம் இதுவே. தெப்பத்தின் அமைதியான செல்கைக்கு, சீரான ஆற்று நீரோட்டம் ஆதாரமாவது போல நம்மவரின் வள வாழ்வுக்கு நற்சிந்தனை என்னும் நறுமலர்சேர் கற்பகதரு என எங்கள் சுவாமிகள் உலவியது ஆதாரமாயிற்று. இந்த அருளாதார நுட்பம் நூலறிவாளரால் நுணுகியும் காணொணாதது; திறவோர் காட்சியில் கையில் நெல்லிக்கனியெனத் தெரிவது.
சுவாமிகள் தாம் திருவடிக்கலப்புறுவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் சிவதொண்டன் நிலையத்தை நிறுவினார். இதுபற்றிபப் பின்னர் தம் அன்பர்களிடம் கூறியபோது தனக்குப் பின் தன்னை நம்பினோர் தட்டுக்கெட்டுப் போகாதிருத்தற்பொருட்டு இதனை நிறுவியதாகக் குறிப்பிட்டார். சிவதொண்டன் நிலையத்துக் குறிக்கோள் மௌனமாயிருந்து இளைப்பாறுதல். மாந்தர் வெய்ய புவிபார்த்து விழித்திருந்து துயரகல ஆறியிருக்கும் இணையடி நிழலாக இந்நிலையம் அமைந்திருக்கின்றது. இதன் பொருட்டே சுவாமிகள் ‘திருவடி’யைப் பிரதிட்டை செய்தனர். மௌனமாகத் தியானத்தமர்ந்திருத்தற்கு ஏதுவான பூசனை முறையையும், எளிமையான விழாக்கள் சிலவற்றையும் நியமஞ் செய்தார். இத்தவச்சாலையிலே தன்னையறியத் தவமியற்றுவோருக்குத் தடையேதும் நிகழாதிருத்தற்பொருட்டு கண்டிப்பான நடைமுறைகள் சிலவற்றை ஏற்படுத்தினார். அவர் தம் திருவுளப்படி இந்த நடைமுறைகளைப் பேணுதற்பொருட்டிருக்கும் பொறுப்பாளர் கயிலைப்பதியிலிருக்கும் நந்தியம் பெருமானைப் போன்று பணி செய்தல் வேண்டும். இவ்வண்ணம் உன்னதமான குறிக்கோளையும், அக்குறிக்கோளை அடைதற்கான நியமங்களையும், இவற்றைப் பேணும் கண்டிப்பான நடைமுறைகளையும் ஏற்படுத்திய பின் தம்மைத் தரிசிக்கக் கொழும்புத்துறைக்கு வருவோரிடம் “இங்கு ஏன் வருகிறீர்கள் சிவதொண்டன் நிலையத்திற்குச் சென்று நன்றாக தியானஞ் செய்யுங்கள்” என்று கூறினார். தக்கவர்களைப் பார்த்துத் தான் சிவதொண்டன் நிலையத்தில் இருப்பதாயும் அங்கு தியானஞ் செய்வோர் அனைவருடனும் கூட இருப்பதாயும் கூறியருளினார். தியான மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படிகளில் குண்டலினி சக்தியிருப்பதாயும் கூறினார். அவர் திருவடிக் கலப்புறுவதற்கு முந்திய ஓராண்டு காலத்தில் தியான மண்டபத்திலே திருவடி வீற்றிருக்கும் இடத்திற்கு நேரே கீழிருக்கும் அறையில் இடையிடையே வந்து உறைந்தார். அவ்வறையிலேதான் பேராசிரியர் T.M.P.மகாதேவன் முதலாய தத்துவப்புலவர்கள் சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர். யோகசுவாமிகள் நல்லைத்தேரடியில் சிவயோகத்தில் பொருந்தியது போல செல்லத்துரை சுவாமிகள் சிவயோகத்திற் பொருந்திய இடம் சுவாமிகள் உறைந்த அவ்வறையேயாம்.
ஆகவே யாழ்ப்பாணம் முழுவதற்கும் சோதிப் பிரகாசமளிக்கும் ஞானச்சுடர் விளக்காகச் சிவதொண்டன் நிலையம் ஒளிர்கிறது. இந்நிலையத்திலே கடந்த மூன்று நாட்களாக ஆச்சிரம வாழ்வு வாழ்ந்து நந்சிந்தனை முற்றோதல் புரிந்த அடியார்கள் இன்று(25.03.2021) யோகசுவாமிகளின் ஐம்பத்தேழாவது குரு பூசையை அபிடேக ஆராதனைகளுடனும் சிறப்படனும் அனுட்டிக்கிறார்கள். சுவாமிகள் தியானமண்டபத்திலே திருவடியாக வீற்றிருக்கிறார். அவர் மண்ணாகச் செய்யும் இம்மண்ணுலகிலே பிறந்து வெய்ய புவிபார்த்து இளைத்துப் போயிருக்கும் எமக்கிரங்கி தியானமண்டபத்துப் படிவழியே இறங்கி வந்து புராணமண்டபத்தில் வீற்றிருந்து நம் பூசனை கொண்டு கற்பகதருவென வேண்டுவார் வேண்டுவதை அருள்வார். அவர் அருளார் அமுதம் வழங்குகின்றார்; வந்து முந்துமினே.
சிவதொண்டன் சபை
434, கே.கே.எஸ் வீதி
யாழ்ப்பாணம்