ஒரே கட்டமாக நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி 234 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 26.29 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
காலை 11 மணி வரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 % வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது.
அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். கடுமையான வறண்ட கால நிலையின் மத்தியில் தொடர்ந்த மாபெரும் பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
அதன்பின், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் கையுறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள்; 7,192 பேர் 3-ம் பாலினத்தவர். அத்தனை வேட்பாளர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் தயார். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.