யாழில் இருந்து வெள்ளை வானில் வாள்களுடன் சென்ற குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தி உள்ளதாக வவுனியா காவல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி குறித்த பெண்ணை அழைத்து சென்று பதிவு திருமணமும் செய்துள்ளார்.
இந்நிலையில், யாழில் இருந்து வெள்ளை நிற வான் ஒன்றில் சென்ற குறித்த பெண்ணின் தந்தை, சகோதரி ஆகியோருடன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து கட்டியபடி வாள்களுடன் சென்ற 10க்கு மேற்பட்ட இளைஞர் குழு பெண்ணை அழைத்து சென்ற இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து யன்னல் கண்ணாடியை உடைத்து குறித்த பெண்ணும், இளைஞனும் எங்கே எனக் கேட்டு வாள் முனையில் அச்சுறுத்தியதாகவும், இதன்போது வீட்டு உரிமையாளரின் மகள் காவற்துறையினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் கழுத்தில் வாளினை வைத்து அச்சுறுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்த வீட்டு வளவில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் வாள்களுடன் புகுந்த குறித்த குழுவினர், அந்த இளைஞனும் பெண்ணும் சம்பவ நேரம் அங்கு இல்லாத நிலையில், வீட்டு அறையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கு இருந்த வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அசம்பாவிதத்தில் ஈடுபட்ட இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டோர், குறித்த இளைஞர்கள் யாழில் இருந்து வருகை தந்த ஆவா குழுவா என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், 119 காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.