கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படைவாத வகுப்புக்களை நடாத்திய இருவா் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஒலுவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரும் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 39 வயதுடையவா்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.
வௌிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கு உறுப்பினர்களை சோ்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சொற்பொழிவுகள் அடங்கிய விடயங்களை குறித்த சந்தேகநபர்கள் இந்நாட்டு சிறுவர்களுக்கு போதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஓலுவில் பிரதேசத்தில் இந்த வகுப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவர்களின் அனுமதியின்றி பல்வேறு உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் குறித்த வகுப்புக்கள் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அதேவேளை குறித்த பயிற்சிகளை விரும்பாத மாணவர்கள் தாக்குதலுக்குள்ளானதாகவும் அவா்கள் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் அவா்கள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.