அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறப்பட்டு டான்டே ரைட்டுக்கு எதிரான கைது ஆணை உள்ளதாகக்கூறி காவல்துறையினர் அவரை தடுத்த போது அதனை உதாசீனப்படுத்தியவாறு டான்டே தனது வாகனத்துக்குள் செல்ல முற்பட்டபோது அவரை கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டதாகவும் டான்டே சில அடி தூரம் அவரது காாில் சென்றபோது அவரை நோக்கி ஒரு காவலர் சுட்டதாகவும் அப்போது அந்த கார் வேறொரு கார் மீது மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அதே இடத்தில் டான்டே உயிர் இழந்ததாக புரூக்ளின் சென்டர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த காருக்குள் இருந்த மற்றொரு பெண்மணி உயிருக்கு ஆபத்தின்றி தப்பியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கெனவே அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃபிளாய்டை அங்குள்ள காவல்துறையினர் கடுமையான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் பரவலான கண்டனங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.