குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்த உழவு இயந்திரத்தை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா்.
குறித்த காணி தங்களுடையது என இருவா் உரிமை கோரி வருகின்றனா். இதேவேளை குறித்த காணியை தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறாா்களும் 1991 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனா் என பொது மக்களும் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில் குறித்த காணி தொடா்பில் அடிக்கடி உரிமை கோருகின்றவா்களுக்கும் தாரணி குடியிருப்பு மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவிவந்திருக்கின்றன.
இந்தநிலையில் இன்று புதன் கிழமை காலை உரிமை கோருகின்றவா்களால் உழவு இயந்திரம் மூலம் விளையாட்டு மைதானம் உழவு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட இளைஞர்கள் உழவு இயந்திரத்தை மறித்து வைத்து தங்களின் எதிர்ப்பை வெளியிட்டதோடு, உழவு செய்யப்பட்ட பகுதியை மீளவும் முன்னர் இருந்தது போன்று சம தரையாக மாற்றியமைத்து தருமாறும் அதுவரை உழவு இயந்திரத்தை விடுவிக்கப்போவதில்லை எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமரச நடவடிக்கையில் ஈடுப்பட்டு உழவு இயந்திரத்தை விடுவித்ததோடு, கிராமத்தின் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும் காவல் நிலையம் வருமாறும் அறிவித்துச் சென்றுள்ளனர்.