Home இலங்கை மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்!

மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது? நிலாந்தன்!

by admin

மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறைவடக்கிலும்கிழக்கிலும்தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான்பெறலாம் என்றகணிப்பு பரவலாக உண்டு.
கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப்பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக உண்டு. தமிழ்த்தரப்போடு ஒப்பிடுகையில் அங்கே முஸ்லிம்தரப்பும் சிங்களத் தரப்பும் வாக்குகளை சிதறவிடாமல் வைத்திருக்கக் கூடியநிலைமைகள் அதிகமாகத்தென்படுகின்றன.


இது கிழக்கில். வடக்கிலும் நிலைமை திருப்தியாக இல்லை.. கடந்த வடமாகாண சபை தேர்தலின்போது கிடைத்தது போன்ற அமோக பெரும்பான்மை இம்முறைகிடைப்பதற்கானவாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. தமிழ்த் தேசியநிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். அதைவிட முக்கியமாக கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் சுமந்திரன்-மாவை மோதலும் வாக்குகளைத் திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடும். இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப்பார்த்தால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகளின் பேரபலம் முன்னரை விட அதிகமாகலாம் என்று ஒரு கணிப்பும் உண்டு.


இவ்வாறானதொரு பின்னணியில்தான் மாகாணசபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால் அதில் கிழக்கில்முஸ்லிம்களையும் கவரக்கூடிய ஒருவரை முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்று கூட்டமைப்புக்குள் ஒரு தரப்பினர் குறிப்பாக சுமந்திரன் தரப்பினர் சிந்திப்பதாக தெரிகிறது.


அதேசமயம் வடக்கில் மாவையின்அணியை எதிர் கொள்வதற்கு அல்லது மாவையின்அணியை ஓரங்கட்டுவதற்கு யாரை முன்நிறுத்தலாம் என்று சுமந்திரன் அணி சிந்திப்பதாக பரவலான ஊகங்கள்உண்டு. இந்தஊகங்களின் பின்னணியில் தான் மணிவண்ணனின் கைது செய்யப்பட்ட அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டதைக் குறித்து ஒருபகுதியினர் வியாக்கியானம் செய்து வருகிறார்கள்.


சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தல்வீழ்ச்சிகளின்பின்ஒருஉத்தியைக் கடைப்பிடித்து வருகிறார்.அவருடைய முன்னாள் எதிரிகள் பலரை அவர் நண்பர்களாக்கிக் கொண்டுவிட்டார்.. அப்படித்தான் மணிவண்ணனின் விடயத்திலும் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்ட இரவு நீதிமன்றத்துக்கு அருகே அப்படியொரு தோற்றந்தான் மேலெழுந்தது. இந்தப்பின்னணியில்தான் சுமந்திரன் மாவைக்கு எதிராக மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக் கூடும் என்றவாறான ஊகங்களும் அதிகம் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.

இவ்வாறான ஊகங்களுக்கு காரணமே தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ போட்டிதான். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வீழ்ச்சிகளுக்குப் பின் சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையில் ஒரு பனிப்போர் நிலவுகிறது. இந்தப்பனிப்போர் முக்கியமாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைத்துவம் பலவீனமாக இருக்கிறது என்பதைத்தான்.

கூட்டமைப்பின் தலைவராகிய சம்பந்தரால் தனது கட்சி ஆட்கள் இருவருக்கு இடையிலான முரண்பாட்டை சுமூகமாக தீர்க்க முடியவில்லை என்பதைத்தான். இப்பனிப்போரின் விளைவாக தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து காணப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பதில் தொடங்கி எல்லா விடயங்களிலும்அவர்களுக்கிடையேமுரண்பாடுகள் கூர்மையாக வெளித்தெரிகின்றன.தேர்தல்களில் வீட்டுச்சின்னத்தின் கீழ் போட்டியிட்டால்தான் வெற்றியை உறுதிப்படுத்தலாம் என்று நம்பினால் இரண்டு அணிகளும்இணைந்து தேர்தலை எதிர்கொள்ளக்கூடும் ஆனால் மாகாணசபைக்குள் எப்படி விக்னேஸ்வரனை சுமந்திரன் அணி சுற்றி வளைத்ததோ அதே நிலைமை தொடரப்பார்க்கும்.


இந்த மோதலில் ஒப்பீட்டளவில் சுமந்திரன் தலைமைத்துவப் பண்புகள் அதிகமுடையவராகவும் நெளிவு சுளிவு சூழ்ச்சிகள் மிக்கவராகவும் காணப்படுகிறார். மாவை சேனாதிராஜாவிடம் தலைமைத்துவ பண்பு குறைவு. கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் அவர் ஒரு முதலமைச்சருக்குரிய தகுதிகளை கொண்டிருக்க வில்லை என்று அவருடைய கட்சியேகருதியது. அதனால்தான் விக்னேஸ்வரனை உள்ளிறக்கினார்கள். ஆனால் இம்முறை சுமந்திரனோடு மோதல் வந்த பின் அவரை மறுபடியும் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் ஒரு பகுதியினர்முன்னிறுத்தி வருகிறார்கள்.


மாவை எல்லாரையும் சமாளிப்பார். எல்லாரையும்அரவணைத்துப் போவார் அவருக்கு கட்சியில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த மூப்பு காரணமாகத்தான் அவர் தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். நிச்சயமாக அவருடைய தலைமைத்துவப் பண்பு காரணமாக அல்ல. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகாலத்தில்தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுகளுக்கு மாவையும் பொறுப்பு. சுமந்திரனின் எழுச்சியிலும் அவருக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. அவருடைய தலைமைத்துவத்தின் தோல்விதான் இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இரு அணிகள். எனினும்தமிழரசுக்கட்சியின் பலமான கட்டமைப்புத்தான் அவரை தொடர்ந்தும் பாதுகாக்கிறது. அது காரணமாகத்தான் சுமந்திரனால் மாவையை நினைத்தபடி அகற்ற முடியவில்லை.


அடுத்த வடமாகாணசபைக்கு ஓய்வு பெற்ற ஓரு நிர்வாக உத்தியோகத்தரை சுமந்திரன் மனதில் வைத்திருந்ததாக தகவல்கள் உண்டு. மணிவண்ணனின் எழுச்சியையடுத்து அவரை சுமந்திரன் பயன்படுத்த யோசிக்கலாம். மணிவண்ணனை கைது செய்ததன் மூலம் அரசாங்கம் அவருடைய பிம்பத்தை உயர்த்தியிருக்கிறது. என்பதே உண்மை. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்ட அன்று டான் டிவியின் அதிபர் குகநாதன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்……”அனந்தி தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட போது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……”.

முக்கியமான அரசியல் விவகாரங்களின் போது கொடுப்புக்குள் சிரித்தபடி குகநாதன் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. இதன்மூலம் அவர் என்ன கூறவருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய இமேஜை உயர்த்தியிருக்கிறது என்றா?


மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதன் மூலம் சுமந்திரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தலாம். ஒன்று மாவை மற்றது கஜேந்திரகுமார். ஆனால் தமிழரசுக்கட்சி அதற்கு இடம் கொடுக்குமா?


வடமாகாண சபையில் தமிழ் வாக்குகள் சிதறுவதைத் தடுப்பது என்றால் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகளின் பேரம் அதிகரிப்பதை தடுப்பதென்றால் ஒரே ஒரு முன்நிபந்தனைதான் உண்டு. அது தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதுதான். ஆனால் இக்கட்டுரைஎழுதப்படும் இந்நாள் வரையிலும் அது ஒரு அம்புலிமாமாகதையாகவே இருக்கிறது. இந்த அம்புலிமாமா கதையின் அடுத்த பாகம்தான் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற சிந்தனையும்.


இது முதலாவதாக கட்சிகளுக்குள் தலைவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது. இரண்டாவதாக எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருவர் கட்சிகளுக்குள் இல்லை என்பதை காட்டுகிறது. மூன்றாவதாக கடந்த 12 ஆண்டுகளில் கீழிருந்து மேல் நோக்கி தலைவர்களை உருவாக்குவதில் கட்சிகள் தோல்வியுற்று விட்டதைக் காட்டுகிறது.அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்த தமிழரசுக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கடந்த வடமாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரனை உள்ளே கொண்டுவந்து பட்டபாடு போதும் என்று அவர்கள் வலிமையாக நம்புகிறார்கள். கட்சிப்பாரம்பரியத்தில் வராத ஒருவர் கட்சிக்கும் கட்டுப்படமாட்டார் அது மட்டுமல்ல அவரால் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களையும் கட்டுப்படுத்த முடியாது என்ற வாதத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.


எனவே ஒரு பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சிக்குள் குறிப்பாக மாவைஅணிக்குள் ஆதரவு இல்லை என்று தெரிகிறது. விக்னேஸ்வரன் மாவைக்கு எதிராகக் காணப்படுகிறார். எனினும், இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது “ஏன் ஒரு பொது வேட்பாளரை தேடவேண்டும்? எங்களுடைய கட்சிக்குள் ஆட்கள் இல்லையா?” என்று ஒரு நேர்காணலில் கேட்டிருந்தார். கஜேந்திரகுமார் இதுவரையிலும் அப்படி ஒரு உரையாடலைத் தொடங்கவேயில்லை. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்முறைமாகாணசபையில் தமிழ் வாக்குகள் மூன்றாகச் சிதறும் வாய்ப்புகளே தெரிகின்றன.சிவில்சமூகங்கள்தலையிட்டு மூன்று கட்சிகளுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு பகை தவிர்ப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தலாமா என்பதும் சந்தேகமே. தேர்தல் முடிவுகள் வந்த பின் மூன்று கட்சிகளுக்கும் அவர்களுடைய உயரம் எதுவென்று தெரிய வந்தபின் ஒரு பொதுவான புரிந்துணர்வு ஏற்படும். அதைகுறைந்தபட்ச உடன்படிக்கை ஒன்றுக்காண அடிப்படையாகக் கட்டியெழுப்பலாமா?


எனவே ஒரு பொது வேட்பாளரை நோக்கி சிந்திப்பது இப்போதைக்கு சாத்தியமான ஒன்றாகத்தெரியவில்லை.மாறாக அதைவிட முக்கியமாக மாகாணசபை தேர்தல் என்று ஒன்று நடந்தால் அந்த மாகாண ஆட்சியை எப்படி வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பதைக் குறித்து பொருத்தமான அரசியல் பொருளாதார தரிசனங்கள் கட்சிகளிடம் உண்டா? என்ற கேள்விக்கு முதலில் விடைகாண வேண்டும். மாகாணகட்டமைப்பின் அதிகார வரையறைகளை பரிசோதிக்கும் ஓர் அரசியல் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் கட்சிகளிடம்இருக்கவேண்டும்.ஒருமாகாண முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய தகுதியை அந்த அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும்.சரியான பொருளாதாரத் திட்டங்கள்மாகாணசபையிடம் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாணகட்டமைப்பை எப்படி ஆகக் கூடிய பட்சம்பயன்படுத்தலாம் அல்லது அவ்வாறு செய்யும்போது ஏற்படக்கூடியதடைகளை. எப்படி அம்பலப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.


மாகாணக் கட்டமைப்பு ஒரு பொருத்தமான தீர்வு என்ற கற்பனையைஇக்கட்டுரைஊக்குவிக்கவில்லை.ஆனால் தமிழ் மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் அம்சங்களை ஆகக்குறைந்த பட்சமாவது பலப்படுத்துவதற்குமாகாணகட்டமைப்பை எப்படி சாதுரியமாக பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று சிந்திக்கலாம். எல்லாவற்றுக்கும் முதலில் சரியான அரசியல் பொருளாதார திட்டவரைபு ஒன்று கட்சிகளிடம் இருக்கவேண்டும். தமிழ் கட்சிகள் அவ்வாறானதிட்டவரைபுகளை அல்லது வழிவரைபடத்தைஇப்பொழுதே முன்வைக்க வேண்டும். மாகாணத்தில் யார் ஆட்சிக்கு வருவது என்பதனை அந்த திட்டவரைபு தான் தீர்மானிக்க வேண்டும். மாறாக கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும்உட்பூல்கள் அல்ல.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More