காவல்துறையினா் துரத்தி சென்ற டிப்பர் வாகனம் ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிக்கொண்டு தப்பி சென்ற போதிலும் , விபத்துக்குள்ளான ஆசிரியையை மீட்காது காவல்துறையினரும் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTVயில் சம்பவம் முழுமையாக பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சப்பிரமுவா மாகாண பதிவில் உள்ள LM 5114 எனும் இலக்கமுடைய டிப்பர் வாகனம் காவல்துறையினரின் கட்டளையை மீறி சென்ற போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று காவல்துறையினா் (இருவர் சீருடை) அதனை துரத்தி சென்றுள்ளனர்.
அதன் போது டிப்பர் சாரதி வாகனத்தை திக்கம் பகுதியில் உள்ள சிறிய வீதிகளின் ஊடாக மிக வேகமாக ஓடி தப்பி சென்றுள்ளார்.
அவ்வாறு தப்பி செல்லும் போது சிறிய வீதி வளைவில் வாகனத்தை திருப்பும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியை மோதி தள்ளியுள்ளனர்.
டிப்பர் வாகனத்தை துரத்தி வந்த காவல்துறையினா் விபத்துக்கு உள்ளான ஆசிரியை மீட்காது , தொடர்ந்தும் டிப்பர் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர். அதனால் வாகன சாரதி வேகமாக வாகனத்தை ஒட்டி சென்றுள்ளார்.
விபத்துக்கு உள்ளான ஆசிரியை அப்பகுதியை சேர்ந்த மக்களே மீட்டு, நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆசிரியை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை விபத்து நடைபெற்ற இடத்திற்கு இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினா் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை , விபத்துக்கு உள்ளான ஆசிரியையின் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமது கட்டளையை மீறி சென்ற டிப்பர் வாகனத்தை ஒடுங்கிய வீதிக்குள் காவல்துறையினா் துரத்தி சென்றதால் டிப்பர் சாரதி மிக வேகமாக வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார். விபத்தினையும் ஏற்படுத்தி உள்ளார்.
விபத்து நடைபெற்ற பின்னரும் துரத்தி சென்ற காவல்துறையினா்விபத்துக்கு உள்ளானவரை மீட்காது , தொடர்ந்தும் டிப்பர் வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர். காவல்துறையினரின் மனிதாபிமானற்ற பொறுப்பற்ற செயல் தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்தனர்.
விபத்து நடைபெற்று இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து காவல்துறையினா் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காதது தொடர்பில் காவல்துறையினா்மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதேவேளை தப்பியோடிய டிப்பர் வாகனத்தை இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினா் மீட்கவில்லை என்றும் , சாரதி தப்பித்துள்ளார் எனவும், என தெரிவிக்கப்படுகின்றது. இதனை காவல்துறைத் தகவல்கள் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.