தொற்று நோய்க்குப் பிந்திய உலகில் சுற்றுச் சூழல் மீதான கரிசனை பரவலாக அதிகரித்திருக்கிறது. இளவயதினரது கவனம் சூழல் மீது திரும்புவதும் தெரிகிறது.தேர்தல் அரசியலிலும் அது எதிரொலிக்கிறது.
பிரான்ஸில் கடந்த ஆண்டு நகரசபைத் தேர்தல்களில் பசுமைக் கட்சிகள் திடீரென முன்னரங்குக்கு வந்தன. அடுத்த மாதம் நடைபெறப்போகின்ற பிராந்தியத் தேர்தல்களிலும் சூழலியல்
கட்சிகளோடு கூட்டணி அமைத்தாலேயே வெல்லலாம் என்பது பிரதான கட்சிகளின் உத்தியாக உள்ளது.
ஜரோப்பாவின் சக்தி மிக்க நாடான ஜேர்மனியில் அரசுத் தலைவர் தேர்தல் செப்ரெம்பரில் நடக்கிறது. உலகின் வலிமை மிக்க பெண்களில் ஒருவரான அங்கெலா மெர்கல் இல்லாமல் நடைபெறப்போகின்ற முதலாவது தேர்தல் அது.ஆனால் அங்கு ‘அடுத்த அங்கெலா மெர்கல்’ என அழைக்கப்படும் இளம் பெண் ஒருவர் களத்துக்கு வந்திருக்கிறார்.
இதுவரை அரசுத் தலைவர் பதவிக்கு தனியே போட்டியிடாது கூட்டணி வகித்துவந்த பிரபல பசுமைக் கட்சி இந்தத் தடவை தனக்கான தனி வேட்பாளரை அறிவித்திருக்கிறது. நாற்பது வயதான அன்னலினா பேர்பாக் (Annalena Baerbock) பசுமைக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டிருக்கிறார். அங்கெலா மெர்கலின் மைய வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக் கூட்டணியை விட (Christian Democratic Union-Christian Social Union) பசுமைக் கட்சியின் இளம் வேட்பாளர் வெற்றிவாய்ப்பில் முன்னிலை வகிக்கிறார் என்று முக்கிய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங் களே இருக்கும் நிலையில் அன்னலினா வின் வருகை ஜேர்மனியின் அரசியல் அரங்குகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.பழமைவாதிகளா பசுமைவாதி
களா என்ற பரபரப்பான ஒரு திசையை நோக்கித் தேர்தல் களம் விரிகிறது.
சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு வெற்றிடமாகின்ற அங்கெலா மெர்கலின் இடத்தை நிரப்பக் கூடிய பொருத்தமான பெண் தலைவியாக அன்னலினாவை அரசியல் நோக்கர்கள் கருதுகின்ற னர்.”எல்லாக் கட்சிகளும் அவரைத் தங்களது பிரதான அரசியல் எதிராளியாகப் பார்க்கின்றன” என்கிறார் ஓர் ஆய்வாளர்.
பசுமைப் பொருளாதாரம் (greener economy) சீனா, ரஷ்யாவுக்கு எதிரான கடினமான வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாடு ஆகிய விடயங்களைத் தனது அரசியல் திட்டங்களில் கொண்டவர் அன்னலினா. அவருக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கும் Bild செய்தி ஏஜென்சி, “ஜேர்மனியர்கள் ஒரு மாற்றத்துக்கான மனநிலையில் உள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறது.
ஆனால் போதிய அரசியல் முன் அனுபவம் இல்லாத அன்னலினா
வின் பசுமைக் கட்சி பற்றிய இந்த மதிப்பீடுகள் வெறும் ஊடகங்களின்
மிகைப்ப்படுத்தல் மட்டுமே என்று விமர்சிக்கின்ற சிலர், மக்களுக்கான அவரது தேர்தல் உறுதி மொழிகள் எவை என்பது தெரிய வந்த பின்னரே அவருக்கான வெற்றிவாய்பைச் சரிவர மதிப்பிட முடியும் என்று கூறுகின்றனர்.
எனினும் அரசுத் தலைவர் பதவியில் அவர் தோற்றாலும் அடுத்த அரசை நிறுவுவதில் முக்கிய கிங் மேக்கராக இருப்பார். அங்கேலாவுக்குப் பிறகு சக்தி மிக்க தலைவராகவும் மாறுவார்
என்று வேறு சிலர் எதிர்வு கூறுகின்றனர்.
40 வயதான இளம் தாய் அன்னலினா ஒரு ஜிம்னாஸ்டிக்(trampolining) வீராங் கனை ஆவார். ஹனோவரில் அரசியல் கல்வி கற்ற அவர் லண்டன் பொருளா தாரக் கல்லூரியில் (London School of Economics) சட்டம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்றவர். 2005 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பசுமைக் கட்சியில் (Greens) இணைந்த அவர், 2013இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இருந்தார்.
2005 ஆம் ஆண்டு தனது 51 ஆவது வயதில் அரசுத் தலைவர் பதவிக்கு வந்த அங்கெலா மெர்கல் அம்மையாருக்குப் பின்னர் பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ள அன்னலினா, அடுத்த அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால் உலகப் போருக்குப் பின் ஜேர்மனியை ஆளப்போகின்ற வயதில் குறைந்த தலைவராக அவரே இருப்பார்.
- பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
02-05-2021