பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
பருத்தித்துறை சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றது.
சுடலைக்கு முன்பாக வான் ஒன்றில் கஞ்சா பொதிகளை ஏற்ற முற்பட்ட போது, காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர். மற்றொரு சந்தேக நபர் தப்பித்துள்ளார்.
45 பொதிகளில் 95 கஞ்சா போதைப்பொருள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வானும் மீட்கப்பட்டுள்ளது என்றும் பருத்தித்துறை காவல்துறையினா் கூறினர்.
இதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 35 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. வீட்டில் இருந்த இளைஞன் ஒருவனும் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து வந்தவேளை அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 183 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளது.
இவ்வாறாக யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 313 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.