பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனரும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவருமான பில் கேட்ஸ், தனது சுட்டுரைப் பக்கத்தில், (Twitter) விவாகரத்து குறித்து தனது மனைவியுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பில் – மெலிண்டா தம்பதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் அறக்கட்டளையை நிறுவி அதனை உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ வழிவகை செய்து வருகிறது.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். ஆனால், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள ஒன்றாக முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
1975ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கிய பில் கேட்ஸ், அதன் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தார். அதன் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்தவர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்த மெலிண்டா கேட்சை திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.