பிரான்ஸின் “போர்தோ வைன்” (Bordeaux wine) உலகப் பிரசித்தி பெற்றது.அதன் சுவைக்கும் தரத்துக்கும் என்று தனியான அடையாளம் உண்டு. இயற்கையோடு இணைந்து நொதிக்கும் திராட்சை வைனே அதன் சிறந்த பயனை தருகிறது.
ஆனால் பூமியின் பருவநிலை மாறுதல்கள் வைன் தயாரிப்பிலும் அதன் குண நலன்களிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
வெப்பநிலை அதிகரிப்பு வைன் தொழில் துறையைப் பெரிதும் பாதித்து வருகிறது. அண்மையில் பருவம் தவறி வந்த கடும் பனி காரணமாக திராட்சைக் குருத்துகள் கருகின.
பருவநிலை மாற்றத்தின் இந்த சவால் களை எதிர்கொள்ள மாற்று வழிமுறை கள் என்ன?”பூமிக்கு அப்பாற்பட்ட விவசாயம்”(extra-terrestrial agriculture) எனப்படுகின்ற எதிர்கால விவசாய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வைன் தயாரிப்பையும் திராட்சைச் செய்கையையும் விண்வெளியில் மேற்கொள்ள முடியுமா என்பதை அறியும் ஒரு முயற்சியாக ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பூமிக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் இயற்கைச் சூழ்நிலையில் வைனை நீண்ட நாள் புளிக்க வைத்துப் பார்த்தால் என்ன? இவ்வாறு அதன் தரம், சுவையை சோதித்து அறிகின்ற ஒரு முயற்சியில் பிரான்ஸின் வைன் தயாரிப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூட்டாக இறங்கி உள்ளனர்.
அத்துடன் திராட்சைச் செடிகளின் குருத்துக்களை விண் வெளியில் பாதுகாத்து வளர்க்க முடியுமா என்பதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குஅனுப்பி அங்கு சுமார் 14 மாதகாலம்பாதுகாக்கப்பட்ட வைன் போத்தல்கள்மீண்டும் பூமிக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
பிரபல வைன் வகையான ‘Pétrus 2000’உட்பட 12 வைன் போத்தல்கள் வேறு பல பொருள்களுடன் சேர்த்து கடந்த 2019 இல் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி அங்கு பேணிவைக்கப்பட்டன.
வைனின் சுவையை மதிப்பிடுகின்ற நிபுணர்கள் 12 பேர் விண்வெளி வைனைசுவைத்துப் பார்த்துள்ளனர். அது தரத்திலும் நிறத்திலும் மேம்பட்டிருப்பதை ஆரம்ப ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
விண்வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட’Pétrus 2000′ வைன் போத்தலைஏலத்தில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை யாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.06-05-2021