150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெற்ற பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவனான ஜெயரட்ணம் தனுசன் அமலன் எனும் இளைஞர் அடித்து கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளே மே மாதத்திற்கு ஒத்தி வைக்கபப்ட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று புதன் கிழமை முதல் நாளை வெள்ளிக்கிழமை வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இருந்தது.
அந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மூன்றாவது சாட்சியம் நேற்று தனது சாட்சியத்தை மன்றில் பதிவு செய்யும் போது, ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் தான் வாக்கு மூலம் பதிவு செய்தேன் என மன்றில் தெரிவித்தார்.
அதனை அடுத்து எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் சாட்சியம் அளித்த வாக்கு மூலத்தின் பிரதி தனக்கு தரப்படவில்லை எனவும் அதனை தருமாறும் மன்றில் கோரினார்.
அதனை அடுத்து குறித்த வாக்கு மூலத்தின் பிரதியினை பெற்றுக்கொள்ளும் முகமாக இன்றைய தினத்திற்கு (வியாழக்கிழமை) வழக்கு விசாரணை ஒத்தி வைக்கபப்ட்டது.
அந்நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிய சாட்சியத்தின் வாக்கு மூல பிரதியினை பெற்றுக் கொள்ள முடியவில்லை என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மன்றில் தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு.
அதனால் குறித்த ஆவணத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 30 திகதிக்கு மேல் மேல்நீதிபதி ஒத்திவைத்தார். அது தொடர்பில் மேல் நீதிபதி தெரிவிக்கையில் ,
மூன்று தடவைகள் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு.
குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த ஒன்பதாவது மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் ஆவணங்கள், அறிக்கைகள் வேண்டும் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரி வருவதனால் இன்றைய தினம் குறித்த வழக்கு மூன்றாவது தடவையாக ஒத்தி வைக்கபப்டுகின்றது.
ஆகவே எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிய அனைத்து ஆவணங்களையும் அதன் மொழிபெயர்ப்புக்களையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் அரச சட்டவாதி நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 7 ம் திகதி முதல் அவற்றை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிரிகளின் பிணை இரத்து செய்யப்படும்.
குறித்த வழக்கு விசாரணைகள் மே 30 தொடக்கம் ஜூன் 9ம் திகதி வரையில் தொடர் நடைபெறும். அத்தினங்களில் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஏதேனும் ஆவணங்கள் அறிக்கைகள் கோரினால் எதிரிகளின் பிணை சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மறு பரிசீலனை செய்யப்பட்டு பிணை இரத்து செய்யப்பட்டு எதிரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.என தெரிவித்தார்.
சாட்சியங்களுக்கு அழைப்பாணை.
அத்துடன் சாட்சியங்களில் 2ம் மற்றும் 4ம் சாட்சியங்கள் மன்றில் சமூகமளிக்காததால் அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்படுகின்றது.
அவர்கள் எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி மன்றில் சமூகமளிக்க வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு இட்டுள்ளார்.
Spread the love