யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட தையிட்டி பிரதேசத்தில் இரகசியமாக முறையில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் பின்னர் தகவல் அறிந்த சுகாதார பிரிவினர் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட சிலரை இனம் கண்டு தனிமைப்படுத்தி இருந்தனர். அவர்களில் சிலருக்கு முன்னெடுக்கப்பட்ட பி,சி.ஆர் பரிசோதனை முடிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட நெல்லியடி பிரதேசத்தில் உள்ள பிரபல வெதுப்பாக ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்து குருநகர் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் குழந்தை ஒன்றுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அது தவிர யாழ்ப்பாண மாநகர சுகாதர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் , பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் , சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.