யாழ்.பல்கலை சூழலில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவைத்தமையுடன், அவர்களை கைது செய்வோம் என மிரட்டியும் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலை கழகத்தினுள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்பல்கலை சூழலை சுற்றி குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் பல்கலை கழக சூழல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்த இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் அவர்களின் ஊடக அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்து விட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தத்துடன் மிரட்டியும் உள்ளனர்.
ஊடகவியலார்களின் மோட்டார் சைக்கிள் திறப்பை பூட்டி எடுத்து , அவர்களின் புகைப்பட கருவியில் உள்ள படங்களை அழிக்குமாறும் , இல்லாவிடின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என கடும் தொனியில் மிரட்டி யுள்ளனர்.
சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இருவரையும் தடுத்து வைத்திருந்தகாவல்துறையினர் தமது மேலதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் மீண்டும் கடும் தொனியில் மிரட்டி ஊடகவியலார்களை அவர்களது கடமையை செய்ய விடாது அவ்விடத்திலிருந்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்