மன்னாரில் முருங்கன் செம்மண்தீவில் கூட்டுறவுத் திணைக்களத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரின் பணிமனை இயங்கவுள்ள இந்தக் கட்டிடம் நேற்று வியாழக்கிழமை (02.02.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூபா 15 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர்பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்துள்ளார்.
மன்னார் மாவட்டக் கூட்டுறவு உதவி ஆணையாளர் பணிமனை இதுவரையில் தற்காலிகமாக வாடகைக் கட்டிடமொன்றிலேயே பல அசௌகரியங்களுடன் இயங்கி வந்துள்ளது. இதனால், வாடகையாகக் கணிசமான அளவு பணம் செலவாகுவதோடு, கூட்டுறவுத் திணைக்களத்தால் வினைத்திறனான சேவையையும் மன்னார் மாவட்டத்தில் வழங்க முடியாதிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே கூட்டுறவு அமைச்சுக்குக் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பிராந்திய அபிவிருத்திக்கான விசேட நிதியில் இருந்து இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.செபமாலை தலைமையில் நடைபெற்ற கட்டிடத் திறப்புவிழாவில் வடக்கு மகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடக்கு விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மடு பிரதேச செயலர் பி.ச.சத்தியசோதி, நானாட்டான் பிரதேச செயலகச் செயலர் ம.பரமதாசன், நானாட்டான் பிரதேசசபைச் செயலாளர் ச.லோகேஸ்வரன் ஆகியோருடன் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடந்த புதன்கிழமை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பணிமனைக்கென புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.