தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் உலகிற்கு எடுத்துகூறி, மீண்டும் ஒருதடவை நீதிக்கான எமது வேண்டுகையை ஒரே குரலில் ஒற்றுமையாக ஒலிக்கவேண்டிய தருணம் எழுந்துள்ளது .
கடந்த செப்டம்பர் 24 ம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த எழுகதமிழ் மக்கள் அணிதிரள்வானது, காத்திரமான பல செய்திகளை அனைவரிற்கும் வழங்கியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, எமது தாயகத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமும், இன அழிப்பில் ஆரம்பம் தொட்டு கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதியுமாகிய கிழக்கு மாகாணத்திலிருந்து மீண்டும் ஒருமுறை எமது மக்களின் குரலை ஜனநாயக ரீதியில் அனைவரிற்கும் எடுத்துக்கூறும்விதமாக எதிர்வரும் பெப்ரவரி 10 ம் திகதி வெள்ளிக்கிழமை{முழுநிலா நாள்}, மட்டுநகரில் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப்பேரணி நடைபெற உள்ளது.
பெப்ரவரி 10ம் திகதி கிழக்கு மண்ணில் இருந்து எழும்ப இருக்கும் இந்த உரிமைக்குரல், எம் தாயகத்தின் வடபாகம் தொட்டு தென்பாகம் வரை அனைத்து மக்களும் ஒரேவிதமான அரசியல் அபிலாசைகளுடனேயே இருக்கின்றோம் என்பதை மீண்டும் இந்த உலகிற்கு பறைசாற்ற இருக்கிறது .குறிப்பாக, இன்னும் இரண்டு மாதங்களில் ஐநா மனித உரிமைபேரவை இலங்கைக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடையும் நிலையில், நாம் எமது உணர்களையும் எம் தேவைகளையும் கூட்டாக வெளிப்படுத்துவது, மிகவும் பொருத்தமானதாகும்.
குறிப்பாக, கிழக்கும் வடக்கும் இணைந்ததுதான் தமிழர் தாயகம் என்பதையும் அப்படியான இணைப்பு இல்லாத எந்தவொரு தீர்வும், நீண்டகால நோக்கில், எம்மை இம்மண்ணில் வெறும் சிறுபான்மை இனக்குழுமங்களாக மாற்றும் மறைமுக சதிமுயற்சியின் ஒரு அங்கமே என்பதையும் புரிந்து கொண்டுஇ வடக்கு கிழக்கின் இணைப்பை எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தும் இந்த பேரணிக்கு வடக்கு கிழக்குவாழ் அனைத்து மக்களினதும் பேரெழுச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது.
எனவே, எம்மிடையே இருக்கின்ற கட்சி வேறுபாடுகள் அடங்கலாக அனைத்துப் பேதங்களையும் களைந்து, இனத்தின் பொதுநன்மைக்காக மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றோம்..
கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமல்லாது வடக்கின் அனைத்து மாவட்ட மக்களும், இலங்கைத்தீவின் ஏனையபகுதிகளில் வசிக்கும் மக்களும் கிழக்கு எழுகதமிழ் எழுச்சிப்பேரணியில் தத்தமது சுயமுனைப்பில் பங்கெடுத்து, எம் நீதிக்கான குரலை ஒன்றுபட்டு ஒலிக்க முன்வருமாறு வேண்டிக்கொள்கிறௌம்.
மொழியால் ஒன்றாய் பிணைந்துள்ள எம் முஸ்லிம் சகோதரர்களுடன் தமிழ் மக்கள் பேரவை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள கலந்துரையாடல்களும் ஆரோக்கியமான திசையில் சென்றுகொண்டிருக்கின்றது.
இந்தத் தீவில் ஒடுக்கப்படும் சிறுபான்மைச்சமூகத்தை சேர்ந்த முஸ்லிம்களும் தமிழர்களும் கோட்பாட்டு ரீதியில்ஒன்றிணைந்து, எம்மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளுகெதிராக கைகோர்த்து நிற்பதுதான் எங்கள் அனைவரினதும் இருப்பிற்கும் பாதுகாப்பானதாகும்.
அரசியல்வாதிகளினதும் பேரினவாதிகளினதும் பிரித்தாளும் சூழ்ச்சிகளால் இனியும் நாம் பிளவுபட்டு நிற்காது ஒடுக்கப்படும் மக்களென்ற வகையில் கைகோர்த்து எம் நீதிக்கான குரலை ஒன்றுபட்டு ஒலிக்க முன்வருமாறு எம் முஸ்லிம் சகோதரர்களை தமிழ் மக்கள் பேரவை நம்பிக்கையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அழைக்கிறது.
கல்வி / உயர்கல்வி நிறுவனங்கள் , மாணவர் அமைப்புகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் மத அமைப்புகள் என அனைத்து வெகுஜன அமைப்புகளும் இந்த ஜனநாயக எழுச்சிப்பேரணியில் கலந்துகொண்டு இந்த குரலிற்கு மேலும் பலம் சேர்க்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டிக்கொள்கிறது.
ஒன்றுபட்ட மக்களின் எழுச்சி, நிச்சயமாக எமக்கு சாதகமான வழிமுறைகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையுடன் பயணிப்போம்.
அனைவரும் ஒன்றாய் இணைவோம்.
நன்றி
தமிழ் மக்கள் பேரவை