சுகாதாரத் துறையில் 20ற்கும் மேற்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கொடிய தொற்றுநோயிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு உறுதியான திட்டத்தின் கீழ், நீண்டகால வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ள, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, சுகாதார ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நோக்கத்திற்காக சுகாதார சேவையை அணி திரட்டுவதற்கான 15 கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மே 27ஆம் திகதி சுகாதார அமைச்சருக்கு அறிவித்ததோடு, ஜூன் முதலாம் முன்னர் தீர்வினையும் எதிர்பார்த்திருந்தது.
இந்நியைில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் தெரிவு செய்யப்பட்ட சில சுகாதார நிறுவனங்களில் ஜூன் 3ஆம் திகதி ஒரு அடையாள தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. சுகாதார அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
இதற்கமைய, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனுராதபுரம், பேராதெனிய, களுபோவில, கராபிட்டி, இரத்தினபுரி மற்றும் கண்டியில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் இலங்கை தேசிய வைத்தியசாலை ஆகிய இடங்களில் உள்ள போதனா வைத்தியசாலைகள் நாளை (ஜூன் 03) காலை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் இருந்து விலகியிருக்கவும், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நண்பகல் 12 முதல் 12.30 மணி மௌனப் போராட்டத்தை நடத்தவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சுகாதாரத் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் சுகாதார அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைகள் 15
01. கொரோனா தடுப்பு செயல்முறையை வலுப்படுத்தும் வகையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில், ஒரு தொழிற்சங்கக் குழுவை நியமித்தல் மற்றும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது சுகாதார செயலாளரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல்.
02. தொற்றிலிருந்து பாதுகாக்க அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் N95 முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை தொடர்ந்து வழங்குதல்.
03. வைத்தியசாலை கொரோனா குழுக்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற்சங்க பங்கேற்புடன் வைத்திய ஆலோசனைக் குழுக்களை மீண்டும் செயற்படுத்துதல்.
04. பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய கர்ப்பிணி சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறையை வழங்குதல்.
05. பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறையை வழங்குதல்.
06. அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட பொது விடுமுறைத் தினங்களில், கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவுகளை செலுத்துதல்.
07. அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சரியான மற்றும் இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குதல்
08. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் ஊழியர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான முறையான திட்டத்தை உருவாக்குதல்.
09. பணிக்கு சமூகமளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள ஊழியர்களை அருகிலுள்ள வைத்தியசாலை / சுகாதார நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு அனுமதியிளித்தல்.
10. மாற்று / சாதாரண சுகாதார உதவியாளர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் தினசரி ஊதியம் வழங்குதல்.
11. ஆட்சேர்ப்பு மற்றும் வெற்றிடங்களை நிரப்புவற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல்
12. சாதாரண மற்றும் மாற்று சுகாதார உதவியாளர்களின் நியமனத்தை நிரந்தரமாக்குதல்.
13. அனைத்து ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள, மேலதிக நேரம், விடுமுறை கொடுப்பனவுகள், தொலைபேசி கொடுப்பனவுகள் குறித்த கட்டுப்பாடுகளை நீக்குதல்,
14. கொரோனா கடமையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக உணவு வழங்கல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நாட்களில் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்குவதற்கான முறையான நிவாரண திட்டத்தை நிறுவுதல்.
15. கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில் ஆபத்தான மற்றும் கடினமான சேவைகளை வழங்க அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட கொடுப்பனவை வழங்குதல்.
அரச தாதியர் சங்கம், அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம், இலங்கை குடியரசின் சுகாதார சேவைகள் சங்கம், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம், இலங்கை இலவச சுகாதார சேவைகள் சங்கம், முற்போக்கு சுகாதார சேவைகள் சங்கம், ஆய்வக ஒத்துழைப்பு ஊழியர்கள் சங்கம், சுகாதார சேவை சமையல்காரர்கள் சங்கம், மேல் மாகாண சுகாதார சேவை சாரதிகள் சங்கம், சுகாதார சேவைகள் ஐக்கிய தொலைபேசி இயக்குனர்கள் சங்கம், அலுவலக பணியாளர்கள் சங்கம், பொது ஊழியர் சங்கம், சுதந்திர பொது ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.