இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. 7,782 படையினர்களின் பங்கேற்புடன் சுதந்திர தின பேரணி இடம்பெற்றுள்ளது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட நாம் இன்று பொருளாதார சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் ஒன்றிணைவோம் என தெரிவித்தார்.
‘தேசிய ஐக்கியம்’ எனும் தொனிப்பொருளில் அபிமானம் மிக்க வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
21ஆம் நூற்றாண்டில் நாட்;டில் பூரணமான ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் நாம் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும். இதன்போது இளைஞர்களுக்கே அரசாங்கம் முதலிடம் கொடுப்பதுடன் அறிவை மையப்படுத்திய கல்வி முறை, மற்றும் பொருளாதாரம் என்பவற்றுடன் புதிய உற்பத்தி பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் செயல்முறையின் உரிமையாளர்களும் பொறுப்பாளர்களும் எமது இளைஞர் சமூகமே எனத் தெரிவித்தார்.
21வது நூற்றாண்டிற்கு பொருத்தமான நவீன அரசாங்கம் என்ற வகையில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் போன்றே சமூக அபிவிருத்தியும் எமது உன்னதமான தாய் நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிக அவசியமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அந்த விடயங்களை அடைவதற்கு நாட்டில் இன நல்லிணக்கமும் சமயம் சார்ந்த நல்வாழ்வும் வலுவடைதல் அவசியம் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் பாரிய அர்ப்பணிப்புடனும், தீர்மானத்துடனும் செயற்படுத்தப்படும் திட்டங்கள் இன்று தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பாராட்டு பெற்றுள்ளன. எனினும் அவற்றிற்கு எதிராக செயற்படும் சில சந்தர்ப்பவாத சக்திகளும் உள்ளன. குறுகிய எண்ணங்களோடு செயற்படும் அந்த சந்தர்ப்பவாத சக்திகளை தாய் நாட்டிற்கு எதிரான சக்திகளாகவே தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பி சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்துகையில் சகல அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மோசடி, ஊழல், வீண்விரயம் மற்றும் களவுகள் என்பவற்றை இல்லாதொழித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுதல் அவசியமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், புதிய உற்பத்திகள், உற்பத்திச் செயலணியின் வினைத்திறன், விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களினதும் வலுவினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் அதன்போது தெரிவித்தார்.
நிலையான வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற இலக்கை அடைவதன் மூலம் பொருளாதார சுதந்திரத்தை பெற முடியும் எனவும் அதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய சமூகத்தின் அனைத்து பிரிவினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(Pix By: Sudath Silva)