Home இலங்கை பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன்.

பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன்.

by admin


அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ?


கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு ஒரு குழுவை நியமித்தது. இது முதலாவது கட்டம்.


இரண்டாவது கட்டம் பலவிதமான ஊகங்களின் மத்தியில் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய பசில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற ஒருவரை இவ்வாறு நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு சாதகமான ஒரு சமிக்ஞையைக் காட்டுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. மேற்கு நாடுகள் ஓர் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு பின்னணியில் ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ராஜபக்சக்கள் ஒர் ஆளை மாற்றியிருக்கிறார்களா ?


ஆனால் பஸில் வந்து என்ன செய்யப்போகிறார்? ஏற்கனவே ஐந்து ராஜபக்சக்கள் செய்யாத எதை அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது? மூத்த மூன்று ராஜபக்சக்களில் பசில் ராஜபக்ச ஒரு ராஜதந்திர ஆளுமை என்று வர்ணிக்கப்படுகிறார். ஒரு புறம் அவரை 10 வீதம் கமிஷன் எடுப்பவர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இன்னொருபுறம் திரை மறைவில் காய்களை நகர்த்தி நினைத்த காரியத்தை கச்சிதமாக முடிப்பவர் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் பஸில் நிதியமைச்சராக வந்ததனால் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடியதாக இருக்குமா?


நிச்சயமாக இல்லை. ஏனெனில் இலங்கைத்தீவின் பொருளாதாரம் எப்பொழுது சரியத் தொடங்கியது? இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டபோதுதான் அந்தச் சரிவு ஏற்படத் தொடங்கியது. 1960களில் சிங்கப்பூரை விட முன்னிலையில் நின்ற ஒரு தீவு இப்பொழுது பங்களாதேசிடம் கடன் வாங்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இனப்பிரச்சினைதான். தென் ஆசியாவில் முதன் முதலாக நாட்டை திறந்த சந்தை பொருளாதாரத்துக்கு திறந்து விட்டவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனதான். ஆனால் 78ஆம் ஆண்டு திறந்த சந்தைக்கு திறந்துவிடப்பட்ட இலங்கைத்தீவு கிட்டத்தட்ட 43 ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது ?திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட ஏனைய வறிய நாடுகள் முன்னேறிய அளவுக்கு இலங்கைதீவினால் முன்னேற முடியவில்லை. காரணம் மிகவும் எளிமையானது. இனப் பிரச்சினைதான் அடிப்படைக் காரணம். தீர்க்கப்படாத இனப்பிரச்சினையே எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் காரணம்.


இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் இனப்பிரச்சினை பொருளாதார பிரச்சினையின் மீது பிரதிபலித்ததா? அல்லது பொருளாதார பிரச்சினை இனப்பிரச்சினையின் மீது பிரதிபலித்ததா?
பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்தபின் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் இரண்டு விடயங்களில் தோல்வியடைந்தார்கள்.ஒன்று பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்புவது. இரண்டாவது சுதேச நோக்கு நிலையிலிருந்து பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது. அதாவது காலனித்துவ நோக்கு நிலையிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்திற்கு மாற்றீடாக இலங்கை நோக்கு நிலையில் இருந்து ஒரு சுதேச பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது
இவை இரண்டிலும் அடைந்த தோல்விகளின் விளைவே ஜேவிபியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியாகும். அதன்பின் பொருளாதார பிரச்சினைகளை எதிர் கொள்வதற்காக ஜெயவர்த்தனா 1978இல் நாட்டை திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு திறந்துவிட்டார். ஆனால் அது கெடுபிடிப் போர்க்காலம். மேற்கின் விசுவாசியான ஜெயவர்த்தனா நாட்டை மேற்கை நோக்கித் திறந்துவிட அதற்கு எதிராக சோவியத் சார்பு இந்தியா இனப்பிரச்சினையில் தலையிட்டது. இதன் விளைவாக இனப்பிரச்சினை அடுத்தகட்ட வளர்ச்சியை அடைந்தது. இனப்பிரச்சினையின் வளர்ச்சியோடு பொருளாதாரம் முற்றாகப் படுத்துவிட்டது. இனப்பிரச்சினை உள்ளவரை பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.


அப்படி என்றால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின் பொருளாதாரம் செழித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக 2009க்கு பின்னர் தான் நாடு சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்தது.அப்படி என்றால் என்ன நடந்தது? அங்கேயும் மிக எளிமையான ஒரு விடை உண்டு.இனப்பிரச்சினை தான் காரணம். 2009இல் தோற்கடிக்கப்பட்டது ஆயுதப் போராட்டமதான்.அது ஒரு காரணம் அல்ல. அது ஒரு விளைவு. காரணம் இன ஒடுக்குமுறைதான்.இன ஒடுக்குமுறையின் விகார வடிவம்தான் ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்தது. ஓர் இனப்படுகொலை மூலம் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. எனவே 200இல் அவர்கள் பெற்ற யுத்த வெற்றி என்பது அதன் இயல்பிலேயே ஓர் அரசியல் வெற்றியாக மாற்ற முடியாத ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது இனப்படுகொலையில் இருந்து பிரிக்கப்படவியலாத ஒரு வெற்றியாகும்.


இவ்வாறு யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியாத ராஜபக்சக்கள் அந்த யுத்த வெற்றியை ஒரு தேர்தல் முதலீடாக மாற்றினார்கள்.அதுதான் யுத்த வெற்றி வாதம். இங்கிருந்துதான் 2009க்குப் பின்னரான பொருளாதாரத் தோல்விகள் தொடங்கின. யுத்த வெற்றியை ஓர் அரசியல் வெற்றியாக மாற்றினால்தான் அந்த அரசியல் வெற்றியை ஒரு பொருளாதார வெற்றியாக மாற்றலாம். அரசியல் ஸ்திரம் இல்லையென்றால் வெளியிலிருந்து முதலீடுகள் வராது. பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. இதுதான் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது.இதுதான் பொருளாதாரம் தொடர்ந்தும் சரியக் காரணம்.


இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.அதுவும் பொருளாதாரத்தை பாதித்தது.முஸ்லிம்களை தவிர்த்துவிட்டு இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. ஈஸ்டர் குண்டு வெடிப்பானது. முஸ்லிம்களோடு இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வரையறைகளை ஏற்படுத்தியது. அதன்பின் வைரஸ் தொற்று ஏற்பட்டது.அது பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு வீழ்த்தியது.இப்பொழுதும் இலங்கை தீவு ஒருபுறம் வைரஸ் இன்னொருபுறம் கடன் பொறி இரண்டுக்குமிடையே சிக்கியிருக்கிறது.


இந்த சிக்கலிலிருந்து இலங்கைதீவை விடுவிக்க ஒரு மீட்பராக பஸில் உள்ளே கொண்டு வரப்படுவதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. ஆனால் ஒரு பஸில் என்ன ஆயிரம் பசில்கள் வந்தாலும் சரிந்து விழும் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. ஏனென்றால் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதில் இருந்துதான். அதை ராஜபக்சக்கள் செய்வார்களா? நிச்சயமாக முடியாது. ஏனென்றால் பசில் ராஜபக்சவை உள்ளே கொண்டு வந்ததன் பிரதான நோக்கமே வம்ச ஆட்சியை பாதுகாப்பதுதான். மகிந்த ராஜபக்ச உடல்ரீதியாக பலங்குன்றும்போது பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்கி குடும்ப ஆட்சியை அடுத்தகட்டத்துக்கு பாதுகாப்பதே பசிலை உள்ளே கொண்டு வந்ததன் பிரதான நோக்கமாகும். ராஜபக்களைப் பொறுத்தவரை குடும்ப ஆட்சியை பாதுகாப்பது என்பது யுத்த வெற்றி வாதத்தை அடுத்தகட்டத்துக்கு அப்டேட் பண்ணுவதுதான். யுத்த வெற்றி வாதத்தை அப்டேட் பண்ணுவது என்பது யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தயாரற்ற ஓர் அரசியல்தான். எனவே பசிலைக் கொண்டு வந்து அரசியல் அற்புதங்களை நிகழ்த்த முடியுமா?


மாறாக பசிலின் வருகையால் ஒரு மாற்றம் நிகழ்கிறது என்ற தோற்றத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு ராஜபக்சக்கள் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் சில சமயோசிதமான சுதாகரிப்புக்களைக் குறித்து சிந்திக்கக்கூடும்.குறிப்பாக ஐநாவின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் அவர்கள் உள்நாட்டு வடிவிலான ஒரு நிலைமாறுகால நீதிப் பொறிமுறை குறித்து சுதாகரிப்புக்கள் எதையாவது செய்யக்கூடும்.

ஏற்கனவே அப்படிப்பட்ட சுதாரிப்புக்கான வாய்ப்புகளை அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள். நிலைமாறுகால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகமும் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகமும் தொடர்ந்தும் இயங்குகின்றன.எனவே நிலைமாறுகால நீதிக்கான வாய்ப்புக்களை அவர்கள் ஒரு தோற்றத்துக்காகவேனும் பேணி வருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அந்த வழியில் அவர்கள் புதிய முன்னேற்றங்களை காட்டக் கூடும்.


ஆனால் என்னதான் முன்னேற்றங்களைக் காட்டினாலும் வரும் செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் திரட்டும் பொறிமுறையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியுமா ?அது கடந்த ஜெனிவாத் தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட விருக்கும் ஒரு பொறி முறையாகும்.அந்த பொறிமுறையை இப்பொழுது அவர்கள் முனைப்பு காட்டும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளின் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என்பதே இலங்கை பொறுத்து ஐநாவின் யதார்த்தம் ஆகும். எனவே அந்த பொறிமுறை வரும் செப்டம்பர் மாதம் இயங்கத் தொடங்கும்.


அது கொழும்பில் மேற்கு நாடுகளுக்கு எதிரான உணர்வலைகளை நொதிக்கச் செய்யும். தமது யுத்தவெற்றி நாயகர்களை குற்றவாளிகளாக்கக்கூடிய ஆதாரங்களை திரட்டப்போகும் ஒரு பொறிமுறையாகவே அதனை ராஜபக்சக்கள் பார்ப்பார்கள். அவ்வாறுதான் அதை சிங்கள மக்களுக்கும் உருப்பெருக்கி காட்டுவார்கள். அதன்மூலம் நாட்டில் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான உணர்வலைகளை அதிகப்படுத்தலாமே தவிர தணிக்க முடியாது. எனவே இப்பொழுது அரசாங்கத்தின் முன் இருக்கும் தெரிவுகள் மிகவும் குறைந்தவையே. என்னதான் காய்களை நகர்த்தினாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஏனென்றால் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதுதான் பொருளாதார வெற்றிக்கான முக்கிய முன்நிபந்தனை ஆகும். அதைச் செய்ய அரசாங்கத்தால் முடியாது.மேலும் நிலைமாறுகால நீதி தொடர்பில் மிகவும் பிந்தி ஏதும் சுதாகரிப்புக்களை செய்தாலும்கூட அது வரும் செப்டம்பர் மாதம் ஐநாவால் உருவாக்கபடவிருக்கும் பொறிமுறையை தடுத்து நிறுத்த போவதில்லை. எனவே திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதென்றால் பசிலிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்கவேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More