வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பொருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் கச்சான் வியாபாரிகள் உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனையடுத்து தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் திருவிழாவுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை எடுக்கவேண்டும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையிலேயே நேற்று 36 பேரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, ஆலயத்துடன் தொடர்புடைய 75 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 25 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.