தமிழ் நான் பேசும் மொழி, ஏன் அதை எனது பாடல்களில் சேர்க்கக் கூடாது?
ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சுவிஸ் தமிழ் பாடகி பிரியா ரகு மேற்குலகின் இசைச் சந்தையில் உச்சங்களைத் தொட்டிருப்பவர். சுவிஸில் இலங்கைத் தமிழ் அகதிகளான பெற்றோருக்குப் பிறந்த பிரியா “பொப்” பாணிப் பாடல் களால் இன்று உலகப் பிரபலமாக மாறியுள்ளார். தனது ‘கமலி’ என்னும் பிந்திய இசை அல்பம் ஒன்றில் அவர் தமிழ் வார்த்தைகளைப் புகுத்திப் பாடி னார். உலகெங்கும் ஆங்கிலத்தில் ஒலிக் கின்ற அவரது குரலின் நடுவே இப்போது தமிழ்ச் சொற்களைக் கேட்க முடிகிறது.
ஆகப் பிந்திய தனது அல்பத்துக்கு “சந்தோசம்” என்று பெயரிட்டிருக்கிறார். Leaf High, Good Love 2.0, Lockdown, Lighthouse, Anything, Chicken Lemon Rice Deli, Kamali, Forgot About, Santhosam ஆகிய பெயர்களில் பிரியா ரகுவின் பொப் இசை அல்பங்கள் வெளியாகி உள்ளன. அவரது பிந்திய பாடல்களில் உலக ரசிகர்கள் புரியாத தமிழ்ச் சொற்களைச் செவிமடுக்கிறார்கள். அது ஏன் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
“நாங்கள் எமது பாடல்களில் தமிழ்ச் சொற்களை இணைக்கத் தொடங்கி உள்ளோம்.தமிழ் நான் பேசும் மொழி. நாமே உருவாக்குகின்ற பாடல்களில் தமிழை ஏன் சேர்க்கக்கூடாது? –
லண்டனின் ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு அளித்த பதிலில் இவ்வாறு கூறியிருக்கிறார் பிரியா ரகு.
” எல்லோரும் வந்து ஹொலிவூட் பாடல்களையே பாடுகிறார்கள். அது மகிழ்ச்சி தான்.ஆனால் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக எனது பெற் றோர் நமது பண்பாட்டை என்னோடு சேர்த்து வளர்த்து விட்டிருக்கின்றனர்.
” நாங்கள் தமிழ் செல்வாக்கைப் பாடல் களில் இணைக்கத் தொடங்கியுள்ளோம். அதில் நம்மைப்பற்றி அதிகம் கண்டுகொ ள்ள முடிகிறது. எங்களுடைய பண்பாட்டுடன் என்னை மீள இணைக்க அது உதவுகின்றது” – என்று கார்டியனிடம் மேலும் தெரிவித்திருக்கிறார் 35 வயதான பிரியா.
சுவிஸ் சென்காளன்(St Gallen) என்ற இடத்தில் பிறந்த பிரியா, தனது சகோத ரனும் இசைத் தயாரிப்பாளருமாகிய ஜாப்னா கோல்ட்(Japhna Gold) உடன் இணைந்தே சுயமுயற்சியாக இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறார். (படம் :த கார்டியன் பத்திரிகை)
குமாரதாஸன். பாரிஸ்.
18-08-2021