Home உலகம் புதிய முகத்துடன் “தலிபான் 2.0” ரீ. வியில் பெண் அறிவிப்பாளர்!

புதிய முகத்துடன் “தலிபான் 2.0” ரீ. வியில் பெண் அறிவிப்பாளர்!

by admin
(படங்கள் :Tolo news channel)

தலிபான் அதிகாரியைச் செவ்வி! ஆப்கானிஸ்தான் மக்கள் வியப்பு!!
தொலைக்காட்சி பார்த்த குற்றத்துக்காகச் சில பெண்கள் கல் எறிந்து கொல்லப்பட்டனர். இரண்டு தசாப்தங்களுக்கு முந்திய ஆப்கானிஸ்தானில்இது நடந்தது. அந்த இருண்ட அத்தியாயம் மீண்டும் தம் வாழ்வைச் சூழ்ந்து விடுமோ என்ற அச்சத்துடன் பலர் அங்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தலிபான்களது ஆரம்பமோ வேறு விதமாக இருக்கிறது.


ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றி இரண்டு தினங்களில் அந்நாட்டு மக்கள் சற்றும் எதிர்பார்த்திராத காட்சி ஒன்றை தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது. ஆப்கானின் ‘ரோலோ’ செய்திச் சனல் (Tolo news channel) தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர் ஒருவர் தலிபான் இயக்க அதிகாரியிடம் காபூல் நகரின் நிலைவரம் குறித்துக் கேள்வி கேட்டு
செவ்வி காணும் காட்சி உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முக்காடு அணிந்து சுமார் இரண்டரை மீற்றர் தூரம் தள்ளி இருந்தவாறு அந்தப் பெண் அறிவிப்பாளர் தலிபான் அதிகாரியோடு பேசுகிறார்.


காபூல் நகரில் வீடுவீடாக நடத்தப்பட்டு வருகின்ற சோதனைகள் தொடர்பாகப் பெண் செய்தியாளர் ஒருவர் வீதியில்நின்று செய்தி வழங்கும் காட்சியையும் ரோலோ தொலைக்காட்சி ஒளிபரப்பியது 1996 முதல் 2001 வரை நீடித்த தலிபான்களின் முந்திய ஆட்சியின் திகில் அனுபவங்களில் இருந்து விடுபடாத பெண்களும்காபூல் மக்களும் இந்தக் காட்சியைக் ‘கனவு’ போலக் கண்டு வியந்துள்ளனர்.


தலிபான்களின் 1996-2001 ஆட்சியில் பெண்களது கல்வி உரிமை ஆரம்பப் பள்ளியுடன் தடுக்கப்பட்டது. அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதும் பாட்டுக் கேட்பதும் தடைசெய்யப்பட்டிருந்தது. மீறி நடப்போர் கல் எறிந்து கொல்லப்பட்டனர். ஆனால் இன்று காபூலில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் தங்களது புது முகம் ஒன்றைக் காட்ட முற்படுகின்றனரா?

புதிதாக வந்துள்ள தலிபான்களை “தலிபான் 2.0” என்று ஊடகங்கள் எழுது கின்றன. தலிபான் பேச்சாளர் காபூலில் நகரில் நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், ஓர் இணக்கமான முகத்தைக் காட்டியிருக்கிறார். முன்னாள் அரசு நிர்வாகிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பை அறிவித்தார். பெண்கள் இஸ்லாமியச் சட்டங்களின் கீழ் தொழில், கல்விஎன்பவற்றுடன் சமூகத்தில் செயற்பாடுமிகுந்தவர்களாக சுதந்திரத்துடன் வாழ அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். ஊடக சுதந்திரமும் மதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை-ஜலாலாபாத் நகரில் ஆப்கான் கொடியை ஏற்ற முற்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. காபூல் நகரில் தலிபான் ஆயுத பாணிகள் மக்களைத் தாக்குகின்ற வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்படுவோர் வாகனத்தில் கட்டி இழுக்கப்படுகின்ற காட்சிகளும்வெளியாகி உள்ளன.

சமூக வலைத்தளங்கள் அங்கு நடக்கும் மனித உரிமைமீறல் சம்பவங்களை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்ற போதிலும் தலிபான்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் கை வைக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தலிபான்களின் புதிய தலைமுறைத் தலைவர்களும் தளபதிகளும் ருவீற்றர் போன்ற சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அவர்கள் தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். டிஜிட்டல் தலைமுறையினராக மாறிவிட்ட அவர்கள் இனியும் பழைய பாணியில் இணைய சேவைகளையோ அல்லது சமூக ஊடகங்களையோ தடை செய்கின்ற முயற்சிகளில் இறங்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.


பரவலான சந்தேகங்களுக்கு மத்தியில்தலிபான் இயக்கம் அதன் முந்திய-கொடூரங்கள் நிறைந்த – கடும்போக்கான- மார்க்கத்துக்குத் திரும்ப மாட்டாது என்ற கருத்தைப் பரப்புவதற்கு அது தீவிரமாக முயன்று வருவது தெரிகிறது.


அதிகாரம் முழுமையாகக் கைக்கு வந்துவிட்டது. இனிமேல் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சிக்குத் தலைமை வகிக்கப் போவது யார்? 53 வயதான அப்துல் ஹானி பரதர்(Abdul Ghani Baradar) என்னும் தலிபானின் இரண்டாம் நிலைத் தலைவர் தனதுசகாக்கள் சகிதம் கட்டாரை விட்டுப் புறப்பட்டு கந்தகார் விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். புதிதாக உருவாகி இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் அரசை நிறுவி அதன் அதிபராக அவரே பொறுப்பேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.


யார் இந்த அப்துல் ஹானி?
சமீப காலமாக தலிபான்களின்”அரசியல் முகமாகத்” தோன்றுபவர். ஆனால் 1980 களில் சோவியத் – ஆப்கான் போர்க்காலத் தில் இருந்தே தீவிர ஜிஹாத் கெரில்லாவாக விளங்கியவர்.முன்னாள் தலைவர் முஹமட் ஒமர் (Mohammad Omar) 1994 இல் தலிபான் இயக்கத்தை நிறுவிய போது
அவரது வலது கரமாகச் செயற்பட்டவர்.


உலகெங்கும் ஜிகாத்தைப் பரப்பி மேற்கு நாடுகளது படையினரையும் மக்களையும் கொன்று பழிவாங்குதில் முன்னின்றவர். ஆப்கானிஸ்தானின் நீண்ட போரில் வெளிநாட்டுப் படைகளைக் கண்ணி வைத்துக் கொல்வதில் கைதேர்ந்தவராகவும் விளங்கியவர் அப்துல் ஹானி.


ஆப்கானின் மலைத் தொடர்களிலும் கரடுமுரடான தெருக்களிலும் பூங்கொத் துகளோடு சேர்த்து பொறி வெடிகளை மறைத்து வைத்து வெளிநாட்டுப்படை யினரை அதில் சிக்க வைத்தவர். அதனால் இயக்கத்தில் அவர்”பூக்காரன்” என்று அழைக்கப்பட்டவர்.


2001 இல் அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு அங்கிருந்து கட்டாருக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்தார். கட்டாரின் தலைநகர் டோஹா வில் இயங்கிய தலிபானின் அரசியல் பிரிவு அலுவலகத்தின் தலைவராகச் செயற்பட்ட அவர் அமெரிக்காவுடனான சமாதானப் பேச்சுக்களில் தலிபானின் பிரதிநிதியாக அப்போதைய ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ உட்பட பல வெளிநாட்டு அதிகாரிகளுடன் நேரில் பங்குபற்றியிருந்தார்.சமாதான உடன்படிக்கையிலும் அவரே கைச்சாத்திட்டிருந்தார்.


தலைநகர் காபூல் கைப்பற்றப்பட்டதும் கடந்த ஞாயிறன்று அந்த வெற்றிச் செய்தியை அவரே வீடியோப் பதிவு ஒன்றில் தோன்றி அறிவித்தார். கட்டாரில் இருந்து இருபது வருடங்களின் பின்னர் பல மூத்த தலைவர்களுடன் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ள அவர், இன்னும் இரண்டொரு தினங்களில் காபூலுக்குச் சென்று புதிய அரசாங்கம் ஒன்றை அறிவிக்கவுள்ளார் (

         - பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                     19-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More