கொரோனோ தொற்று மக்கள் சேவகர்களை காவு கொண்டுவருகின்ற சூழலில இளம் சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவு ஊடகப்பரப்பில் பேரதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கொரோனாவிற்கு காவு கொடுக்கப்பட்ட முதல் ஊடகவியலாளராக ஞானப்பிரகாசம் பிரகாஸ் பெயர் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் , உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை மற்றும் கட்டுரைகளை எழுதியும் வந்திருந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்திருந்தார்.
ஊடக அடக்குமுறைகளும் அதற்கான பலியெடுப்புக்களும் நிரம்பிப்போயுள்ள தமிழ் தேசிய ஊடகப்பரப்பில் கொரோனா பேரவலமும் ஊடகவியலாளர்களை காவு கொள்ள தொடங்கியுள்ளமை அச்சத்தை தருகின்றது.
நிழலாக தொடரும் அச்சமூட்டும் சூழலின் மத்தியில் வடகிழக்கு தாயப்பரப்பிலிருந்து ஊடகப்பணியாற்றுவதென்பது எத்தகையதென்பது சொல்லி தெரியவேண்டியதொன்றல்ல.
நெருக்கடிகள் மத்தியில் தனது விசேட தேவைகளை ஒருபுறம் தூக்கி வைத்துவிட்டு முன்னுதாரணமாக யாழில் இருந்து ஊடகப்பணியாற்றி வந்திருந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரிற்கு தனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்ளும் யாழ்.ஊடக அமையம் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேராற்றலை வேண்டி நிற்கின்றது.
அதேவேளை கொரோனா பேரவலத்தின் மத்தியில் தமது அர்ப்பணிப்பு மிக்க பணிகளை ஆற்றிவரும் ஊடகவியலாளர்கள் தமது சுயபாதுகாப்பு தொடர்பில் கூடிய அக்கறை கொள்ள யாழ்.ஊடக அமையம் மீண்டும் தயவுடன் வேண்டி நிற்கின்றது.
தனது வாழ்வியலை,ஊடகப்பயணத்தை பற்றி ஞானப்பிரகாசம் பிரகாஸ் எழுதி வந்திருந்த பிரகாஸ் எனும் நான் பதிவினை நூலுருவாக்கும் முயற்சியில் கைகோர்த்துக்கொள்ளும் யாழ்.ஊடக அமையம் அவரது கனவுகள் மெய்ப்பித்துக்கொள்ளும் பாதையில் பயணிக்க உறுதி எடுத்துக்கொள்கின்றது.
மத்திய குழு,
யாழ்.ஊடக அமையம்
03.09.2021