பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.
அதற்கு, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
வர்ணப்பூச்சு வேலைகள் இடைநிறுத்தம்.
அதேவேளை , வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.