ஆண்மையவாத ஆதிக்க சிந்தனைகளின் அடக்குமுறையின் மீள் வடிவமாய் சீதனம் தகப்பன்: பெட்ட கொரி கிரி பூசி வெள்ளையா வந்துட்டுதாம்! பெட்டேன்ற தேப்பனுட்ட என்ன கேட்டவன் என்டு கேள். அயல் வீட்டு நபர்: என்னடாப்பா கேட்டனீ? மாப்பிள்ளை: நான் ஒன்டும் கேட்கேல அண்ண! கேளுங்கோ! தகப்பன்: கதைய விட்டுட்டு கிட்ட போய் கேளடா. என்ன கேட்டவன் என்டு. அயல் வீட்டு நபர்: என்னடா கேட்டனீ? மாப்பிள்ளை: அண்ண நான் கேட்டது என்ன என்டால் எனக்கு ஒன்டும் வேண்டாம். அயல் வீட்டு நபர்: உனக்கு ஒன்டும் வேண்டாம்? அவன் சொல்லுறான் தனக்கு ஒன்டும் வேண்டாமாம். மாப்பிள்ளை: ஓம் அண்ண எனக்கு ஒன்டும் வேண்டாம்! பிள்ளைக்கு நல்ல வடிவா சொகுசா என்ஜோய் பண்ணுறதுக்கு அந்த பிள்ளையின்ற அக்கவுண்ட் நம்பருக்கு 50 லட்சம் ரூபா காசு (5000000). அவளுக்குதான் எனக்கு ஒன்டும் வேண்டாம். நான் கேட்டன் உங்கட பிள்ளை சனத்துக்க நகையபோட்டு மிடுக்கா திரியனும் எல்லோ அதால அந்த பிள்ளைக்கு 30 பவுனில நகை. எனக்கு வேண்டாம் உங்கட பிள்ளைக்குதான். அந்த பிள்ளை கொஞ்சம் நிறம் குறைவு. கொரி கிரி பூசித்தான் அவள் கொஞ்சம் நிறமா இருக்கிறாள். அந்த கொரி பூசி கொஞ்சம் வெளியில திரியேலாதுதானே அப்ப அதில ஏறித்திறியிறதுக்கு ஒரு கார் ஒன்டு. எனக்கு வேண்டாம் அவளுக்குதான். அப்ப அவளவும்தான் நான் கேட்டது மற்றது என்ன நான் ஏதோ ஒரு 15, 20 ஆ ஐஞ்ச பத்த பெத்து தள்ளுவன். என்ற பேரப்பிள்ளையல் ஓடித்திரியிரதுக்கு ஐஞ்சாறு பரப்பு வீடும் காணியும். எனக்கு இல்ல உங்கட பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்குதான். அயல் வீட்டு நபர்: உன்ன சொல்லி பிழையில்லை. உன்ன பெத்தானே ஒருத்தன்……. %yk;: fiythu muq;Nfw;wk;> 2018 |
இறுக்கமான சமூகக் கட்டமைப்புக்களைத் தகர்த்து, பெண்கள் தம்சார் உரிமைக்கான போராட்டங்களின் போது விமர்சனக்கண்ணோட்டத்தில் கேள்வி கேட்டல் என்பது இலகுவானதல்ல. ஆணாதிக்கக் கருத்தியலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் பண்பாடு, நியமம், விழுமியம் போன்ற எழுதப்படாத சட்டங்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம். ஜனநாயகம் எனும் பெயரில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தொடர்பாக கருத்துப்பகிரும் சமூக அமைப்பியல்களின் மறைக்கப்பட்டு செயன்முறைப்படுத்தப்படும் இயங்கியல் அம்சமாக வன்முறை, அடக்குமுறை, ஆதிக்கம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில், அதிகார கட்டமைப்புக்களை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாட்டாளர்கள் கூட, சீதனம் என்பதனை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகத் தயங்குகின்றனர். தேசவழமையில் உள்ளடக்கம் பெறும் சீதனம் பேசப்படும் அளவுக்கு முதுசம் பேசப்படாமைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் ஆராய்தல் காலத்தின் தேவையாக உள்ளது. முதுசம் என்ற பொருண்மையை விடுத்து சீதனம் என்ற பொருண்மை அதிகம் பேசுபொருளாக காணப்படுவதற்கு அடிப்படைக் காரணம் ஆணாதிக்க சிந்தனை மற்றும் அதன் வழியான சமூகக் கட்டுமானமுமே ஆகும்.
பால் மற்றும் பால்நிலை அடிப்படையில் அதிகாரம் – அதிகாரமின்மை, மேலானவர் – கீழானவர், சலுகை உள்ளவர் – சலுகை அற்றவர், பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற அடுக்கமைவு மற்றும் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் பலதரப்பட்ட சமூகம் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவதனைக் காணலாம். பலவிதமான பால்நிலைகள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், ஆண் மற்றும் பெண் என்ற இருமை நிலைக்குள் நின்று பார்க்கும் பொழுது பெண்கள் இரண்டாம் பட்சமாகவே நோக்கப்படுகின்றனர்.
நெடுங்காலம் தொட்டு இருந்துவரும் இச்சீதன முறையானது சமகால சூழலில் மறைக்கப்பட்ட அடக்குமுறையின் மீள்வடிவமாய் உருவாவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அடக்குமுறையின் மீள்வடிவம் குறித்த கரிசனையில், சீதன முறைமைக்கும் சட்டத்திற்குமான தொடர்பை ஆராய்தல் என்பது அவசியமான ஒன்று. தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம் முஸ்லிம் சட்டம், முக்கூவர் சட்டம் போன்றன நெடுங்காலமாக சுதேச சட்டங்களாகக் காணப்படுகின்றன. சர்வதேச சட்டங்கள் மனித உரிமை, பெண்கள் உரிமை தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள போதிலும் சுதேச சட்டங்களின் முன்னால் வலுவிழந்து போகும் சந்தர்ப்பங்களையும் காணமுடிகின்றது. அதாவது, அரசியலமைப்பின் கீழ்வரும் பிரிவானது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டாலும் 1978ஆம் ஆண்டிற்கு முந்திய பாரபட்சமான சட்டங்கள் மேலோங்கியே காணப்படும் என விதிக்கின்றது.
“16(1) இப்போதுள்ள எழுத்திலான சட்டங்கள், எழுத்திலில்லாச் சட்டங்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தின் முற்போந்த ஏற்பாடுகளுடன் ஒவ்வாதனவாக இருப்பினும் செல்லுபடியும் தொழிற்பாடும் உடையனவாயிருத்தல் வேண்டும்”
தென்னாசிய சமூகங்களை பொறுத்தவரையில் தமக்கே உரித்தான இறுக்கமான பண்பாட்டியல் கட்டமைப்புக்கள் சர்வதேச சட்டங்களின் செயற்திறனை வலுவிழக்கச் செய்வதாக அமைவதுடன் பெண்கள் தம் உரிமைகளை அனுபவிக்கத் தடையாகவும் அமைகின்றது.
தேசவழமைச் சட்டம்
தேசவழமை எனப்படுவது வட இலங்கையிலுள்ள நிலம் தொடர்பாக அங்குள்ள தமிழருக்கு உரிய சட்ட நெறியாகும். இலங்கையிலுள்ள மிகப் பழமையான சட்டநெறிகளுள் ஒன்றாக தேசவழமைச் சட்டம் காணப்படுகின்றது. இந்த சட்ட ஏற்பாடு யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவிவந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டது. 1707ல் சட்டமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டது. பிரதிகள் 1779ல் பிரித்தானிய அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. போர்த்துக்கேயரின் ஆட்சியிலும் பின்பும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலப்பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்றங்கள் தேசவழமையின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக்களை வழங்கி வந்தன. குறிப்பாக 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தேசவழமை சட்டமாக தொகுக்கப்பட்டது. பிரித்தானிய காலப்பகுதியிலும் அற்கு பின்பும் தேசவழமை சட்டத்திலே சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக காலத்துக்கு ஒவ்வாத வழமைகள் என்ற அடிப்படையில் அடிமைகள் பற்றிய பகுதி சட்டத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது.
இலங்கை தேசவழமைகளும் சமூக வழமைகளும் தொடர்பில் சி.பத்மநாதன் (2001) குறிப்பிடுகையில்,
“புருஷன் வழியில் ஆதனங்களை முதுசமென்றும், பெண்சாதி வழியில் ஆதனங்களை சீதனமென்றும், இவர்கள் சம்சாரமாயிருக்கிற காலத்திலே தேடப்பட்ட ஆதனம் எல்லாவற்றையும் தேடிய தேட்டமென்றும் சொல்வர்கள்”
“மனச் சந்தோசத்தின் பேரால் கலியாணம் முடிக்கப்போகிற பெண் பிள்ளையினிடமாக வந்து ஒரு கலியாணம் முடிக்கிறதற்கு, சீதனமாக வென்கிலும், நன்கொடையாகவென்கிலும் தங்கள் ஆதனங்களிலே சிலவற்றை கொடுப்பார்கள். இந்த சீதன நன்கொடை இன்னார் கொடுத்ததென்று சீதன ஓலையிலே காண்பித்து கொடுத்தவர்களும் அதிலே தங்கள் கையெழுத்துத் திடமாக வைக்க வேண்டியது. இப்படி கொடுப்பது மனப்பிரியத்தினால் அல்லாமல் வலாத்காரத்தினால் அல்ல”
ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து வாழும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கென்று வந்துசேரும் சொத்துக்களை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் என்று குறிப்பிடுவர். ஆண்வழி வரும் சொத்து முதுசம் என்றும், பெண்வழிவரும் சொத்து சீதனம் என்றும், இருவரும் இணைந்து தேடிக்கொள்ளும் சொத்து தேடிய தேட்டம் என்றும் அழைக்கப்படும். ஆரம்பத்தில் தாய்வழி சீதனத்தை பெண் பிள்ளைக்கு வழங்கும் நிலையில் இருந்து தற்கால சூழலில் முதுசம் சீதனம் தேடிய தேட்டம் என்ற வகைப்பாடுகளின்றி எல்லா சொத்துக்களில் இருந்தும் சீதனம் கொடுக்கும் வழமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏனைய சமூகங்களின் நடைமுறையில் உள்ள மணக்கொடை மற்றும் வரதட்சணையில் இருந்து வேறுபட்ட தனித்துவத்தை கொண்டதாக சீதனம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீதனம் பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கே முழு உரித்தும். சீதன உறுதியில் மனைவியின் பெயருடன் கணவன் பெயர் சேர்த்து எழுதப்பட்டாலும் அதனால் கணவனுக்கு எவ்விதமான பங்கும் கிடைக்கப் போவதில்லை. அடிப்படையில் வரதட்சணை முறையில் இருந்து தனித்துவமானதாக சீதன முறைமை ஆரம்பத்தில் காணப்பட்டது. பெண்ணுக்கு முழு உரிமையும் வழங்கிய இதே தேசவழமை, குறித்த பெண் சொத்தை விற்க முற்பட்டால் கட்டாயம் கணவனது எழுத்துமூலம் அவசியம் என்கின்றது. உதாரணமாக குறிப்பிடின் அநேகமாக, வடபகுதியில் யுத்த தாக்கத்தினால் காணாமல்போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் கணவனை இழந்த பெரும்பாலான பெண்தலைமைக் குடும்பங்களை காணலாம். இவ்வாறான பெண்தலைமைகள் பொருளாதாரரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. இடர்நிலையை தணிக்கும் பொருட்டு அவற்றில் சில தம் சொத்துக்களை பரிமாற்றம் செய்யவும் எத்தனிக்கின்றன. அவை அவர்களது சொந்த காணியாக இருப்பினும் கணவனின் எழுத்துமூல சம்மதம் இல்லாத நிலையில் பெண்தலைமைகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும் நிலை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. சீதனம் பெண்ணுக்கு உரித்தான தனிச் சொத்து என குறிப்பிடும் நிலையில், ஆணின் ஒப்புதல் இன்றி சொத்தை மாற்ற இயலாது என்பதில்தான் ஆணாதிக்க சிந்தனையின் மறைநிலைச் செயற்பாடு (Hidden Function) உட்பொதிந்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்த சீதனம் என்ற பதத்துக்கான வரையறையில் இருந்து வரதட்சணை நோக்கிய பயணமாக எம் பண்பாடு திரிபடைந்துள்ளது. இந்நிலையில் சீதனம் என்ற பொருண்மை மீள் வடிவம் ஒன்றை ஏற்பதனையே கீழ்வரும் விடயங்கள் சுட்டிநிற்கின்றன.
பாஸ்கரன் (2014), யாழ்ப்பாணத்தில் வாழ்க்கைத்துணைத் தெரிவு எனும் தனது கட்டுரையில் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண சமூகத்தில் வாழ்க்கை துணை ஒன்றை தெரிவு செய்யும் போது பெற்றோர், உறவினர், சாதி, சீதனம், கல்வி, இனம், வயது, தரகர் ஜாதகம், சமயம், அழகு, பத்திரிகை விளம்பரம் போன்றவற்றை அதிக செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
சீதனத்தை நியாயப்படுத்தும் பின்வரும் சொல்லாடல்களை சமூகத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
- ஆம்பிளை பிள்ளைய பெத்தனான் சீதனம் வாங்கித்தான் கலியாணம் செய்வன்
- சீதனம் கொடுக்காட்டி போற இடத்தில பிள்ளைக்கு மரியாதை இல்லை
- வெளிநாட்டு மாப்பிள்ளை என்டால் சீதனம் குறைவா குடுக்கலாம்
- மாப்பிளை உத்தியோகமே! அப்ப சீதனம் கூட குடுக்கோணும்.
- பேசி கலியாணம் கட்டினால்தான் கூடச் சீதனம் வாங்கலாம்.
- காதலிச்சால் என்ன இப்ப, கலியாணத்துக்கு முன்னம் சீதனம் பேசுரது எங்கட பண்பாடு
- உள்ளூருக்க மாப்பிள்ளை எடுக்கிறதென்டால் சீதனம் கூட
- வடிவான பிள்ளை என்டால் எங்களுக்கு சீதனம் தேவையில்ல
- என்ர பெட்டை கருப்பு சீதனம் கூட குடுக்கோணும்
- பெட்டைய கூட படிப்பிச்சால் கனக்க சீதனம் குடுக்க வேண்டிவரும்.
- பிள்ளை வயசு வந்தும் கரை சேராமல் இருக்கு, எல்லாரும் அஞ்ச பத்த போட்டு கரை சேத்துடனும்
(களஆய்வு: விடயஆய்வு, 2021)
பெண்பிள்ளைக்கு சீதனம் தேடுதல் என்பது சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்ட கடப்பாடாகக் காணப்படுகின்றது. ஆண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தம் ஆண்பிள்ளையின் படிப்பு, தொழில், அந்தஸ்த்து என்பவற்றுக்கு ஏற்ப சீதனப் பெறுமதியை தீர்மானிக்கின்றனர். நடைமுறையில் வீடு, காணி, நகை, பணம், வாகனம் என்பன சீதனமாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. குறிப்பாகப் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தில் உறவினர்கள் சீதனப் பெறுமதியைத் தீர்மானிப்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
“ஒரு விவசாயி ஆண்துணைக்கு கூடியது பத்துலட்சம் ரூபாவும், ஓர் பட்டதாரி மணமகனுக்கு பதினெட்டு முதல் இருபத்தைந்து லட்சம் ரூபா வரையிலும், வைத்தியர், பொறியியலாளர் ஒருவருக்கு நாற்பது லட்சம் ரூபா வரையிலும் சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது” (மானுடம்.ப.22.2014)
யார் ஊருக்குள் அதிக சீதனம் கொடுத்தது? யார் ஊருக்குள் அதிக சீதனம் பெற்றது போன்ற கேள்விகளின் மூலம், சீதனத்தை ஒரு சமூக அங்கீகாரமாக காணும் சமூக வழமைகளும் தோற்றம் பெற்றுள்ளது. சமூக அங்கீகாரத்தைப் பறைசாற்ற சீதனத்தை மூலதனமாக்கும் செயற்பாடுகளும் அரங்கேற்றம் காண்கின்றன. பெண்வீட்டார் மனவிருப்பின் அடிப்படையில் சீதனம் வழங்குதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஆண்வீட்டார் சீதனப் பெறுமதியை நிர்ணயித்தல் என்ற நடைமுறையை காணலாம். யுத்தத்துக்குப் பிற்பட்ட காலத்தில் சீதனப் பெறுமதி அதிகரித்துச் செல்லுகின்ற போக்கைக் காணலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போதைய காலகட்டத்தில் புலம்பெயர் சமூக உருவாக்கங்களும் சீதனப் பெறுமதியை தீர்மானிப்பதில் பாரிய பங்கைக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பேச்சு திருமணமோ அல்லது காதல் திருமணமோ எதுவாகிலும் திருமண பேச்சுக்களைத் தீர்மானிப்பது சீதனம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மன சந்தோசத்தின் வழி வழங்கப்படும் சீதன முறைமையில் இருந்து மாறுபட்டு வரதட்சணையாக “இவ்வளவு தா” எனும் அளவிற்கு பண்பாடு மாற்றம்கண்டுள்ளது. மரபார்ந்த சட்டங்களின் வழி, இறுக்கமான கட்டமைப்பை உருவாக்கி அதன்வழி வாழ்வதல்ல வாழ்க்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டதே பண்பாடு, மரபு, நியமம், விழுமியம். காலமாற்றத்திற்கு ஏற்ப இவற்றில் மாற்றங்கள் அவசியமானவை. ஆனால் காலத்துக்கேற்ற மாற்றங்கள் ஆணாதிக்க கருத்தியலுக்கு வலுச்சேர்ப்பதாக மாற்றியமைக்கப்படுவது ஏன்? குறித்த மாற்றம் பாரபட்சத்தை ஒடுக்குமுறையை இல்லாதொழிப்பதாகவும், சமத்துவமான சமூக உருவாக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாகவும் அமைதல் அவசியம். திருமணத்தின் போதான சீதன பேச்சுக்களினை முன்னெடுத்தல் என்பது, அடிப்படையில் ஆணாதிக்க கட்டமைப்பை வலுப்படுத்தும் செயன்முறை ஆகும். “பெண்தானே சீதனத்தை கேட்கிறாள்” என்ற பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கத்தினை ஆழமாக ஆராய்ந்தால், இவ்வாறான சிந்தனைகளுக்குக் காரணம் ஆணாதிக்க சிந்தனைகளும் அதன் வழியான சமூக கட்டுமானங்களுமேயாகும்.
1979 இல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்துவகைப் பாகுபாடுகளையும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை தொடக்கம் சுதேச சட்டமான, குடும்ப வன்முறை தடைச்சட்டம் இல.34, 2005 வரை பால்நிலை அடிப்படையில் பெண்கள் எதிர்நோக்கும் அனைத்துவிதமான உடல், உள, சமூக, பொருளாதாரரீதியான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதே இச்சட்டங்களின் நோக்காகும். பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஆரம்பமானது வடபுலத்தைப் பொறுத்தவரையில் சீதனத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. உள்ளூரில் வாழும் பெண்களாக இருந்தாலும் சரி, கடல் கடந்து வாழும் பெண்களாக இருந்தாலும் சரி தேசவழமைச் சட்டத்தின் கீழ் வாழும் அனைத்து பெண்களுக்கும் சீதனம் என்பது மறைக்கப்பட்ட அடக்குமுறையின் மீள்வடிவம். இவ்வாறாக சமகால சூழலில் சீதன நடைமுறையின் வழியாக பெண்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகளைத் தணிப்பதற்கான செயன்முறைகள் அவசியமாகின்றன. அடிப்படையில் சட்ட மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அப்பால் சமூகத்தில் சீதன நடைமுறையில் காணப்படும் அடக்குமுறை தொடர்பான பிரக்ஞைநிலை மற்றும் அதற்கெதிரான செயல்வாதங்களும் காலத்தின் இன்றியமையாத தேவையாக உள்ளது.
– திவியா சண்முகரத்தினம்