பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் (95வயது) கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் 99 வயதில் மரணமாார். அவரது சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அதனை 90 ஆண்டுகள் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என லண்டன் மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கௌவரவத்தைப் பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலைப் பதிவுசெய்யவோ, நீதிமன்றில் தாக்கல் செய்யவோ கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.