‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியின் எழுச்சி வரிகள், பெண்கள் கல்வியால் அடையும் பெருமைகளையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பிறர் உதவியில்லாமல் இவ்வுலகை வெற்றி கொள்ள பிறந்தவரே என நாம் சிந்திக்க வேண்டும். தன் வாழ்வில் உள்ள சவால்களை ஒரு பெண் இலகுவில் கடந்து விட முடியாது.
அதனைக் கடக்க அவளுக்கு தன்னம்பிக்கை என்ற ஓர் ஆயுதம் தேவைப்படுகிறது. தன் சவால்களை அவள் தன் தோள் மீது விழும் தூசியைத் துடைப்பது போல் துடைத்தெறிய வேண்டும். நன்மை தீமைகளைப் பிரித்தறியும் ஆற்றல், தன்னம்பிக்கை, நுண்ணறிவு, பகுத்தறிவு, செயல்திறன் என்பவற்றை அவள் தான் கற்ற கல்வியின் உதவியுடன் அடைகின்றாள். எனவே ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக கல்வியைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
தான் பெற்ற கல்வியால் தன்னையும் தன் சமூகத்தையும் பாதுகாத்து நல்வழிப்படுத்துவதாக அமைய வேண்டும். இங்கேதான் ஒரு உபாயமாகவும், எதிர்காலத் தேவைக்காகவும் பெருமைக்காகவும் அவள் ஒரு தொழிலைப் பெறுகின்றாள். அவள் பெற்ற நற்தொழிலால் சமூகமும் அவளது குடும்பமும் பாராட்டுகின்றன. இங்கே பெண்ணின் சிறந்த குணங்களுள் ஒன்றான நீதி, நேர்மை, நியாயம், சாதாரண மனிதர்களை மனிதராக மதித்தல், இன்முகத்துடன் வரவேற்றல் என்பனவும் காணப்படுதல் மிகமிக அவசியமாகும். மற்றும் அவள் தன் குடும்பத்திற்காகவும் தான் தொழில் புரியும் நிறுவனத்திற்காகவும் நேரங்களை சமமாக பிரிக்க வேண்டும். இச் செயல் கிணற்றினைத் தாண்டும் செயலாகும். அதே போன்று தொழிலில் ஈடுபடும் பெண்கள் முறையாக நேரத்தை பயன்படுத்தாவிட்டால் குடும்பங்களில் தேவையற்ற வாக்குவாதங்களும், வீண் சண்டைகளும் சந்தேகங்களும் உருவாகி குடும்பங்கள் பிரியவும் காரணமாகிவிடுகின்றது. ஆகவே பெண்களுடன் இணைந்து ஆண்களும் வீட்டு வேலைகளை சமமாக பிரித்து செய்வது ஆரோக்கியமாக குடும்பத்தினை உருவாக்கும். பெண் பெறும் தொழிலால் தன் குடும்பத்தில் கணவன், பிள்ளைகள், உறவினர்களை வெறுப்பிற்கும் வீண் சண்டைகளுக்கும் வழிசமைத்து விடக்கூடாது.
ஒரு தொழிலைப் பெண் பெறுவதன் மூலம், பிணக்குகளால் கணவன் பிரிந்து சென்றாலும் தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் தனித்து வாழ்ந்து காப்பாற்ற முடியும். உலகில் சாதனை செய்த பெண்கள் பல்லாயிரம் கோடி அப்பெண்களின் வரலாற்றினை கற்றுணர்ந்து அவர்களைப் போல் உங்களாலும் சாதனை செய்ய முடியும்.
இன்றைய கால கட்டத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் வேலை செய்கிறார்கள். அப்பெண்களால் சாதிக்க முடியும்போது. ஏன்? நம்மால் முடியாதா என்று எண்ணவேண்டும். முடியாது என்பதை மூட்டை கட்டிவைத்துவிட்டு முடியும் என்று சொல்லிப் பாருங்கள். முடியாதது என எதுவும் இல்லை.
ஆண் ஒருவன் தொழிலைப் பெற்றால் குடும்பத்திற்கு மட்டும் நன்மை. ஆனால் ஒரு பெண் தொழிலைப் பெற்றால் அதுவே ஒரு சாதனை. நற்தொழிலைப் பெற்றால் பூ போன்ற வாழ்வு, இதனை ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும். அடிமையாகவும், அடங்கியும் எவ்வளவு காலம்தான் கூண்டுக்கிளிபோல் வாழ்வது. சுதந்திர வேட்கையை தேடி அலையும் கிளிகள் போல கூட்டை உடைத்து வெளியே வர வேண்டும். கூடு திறக்கும் வரை காத்திருத்தல் கூடாது. எனவே பெண்கள் தொழில் பெறுவது அவசியம். பெண்கள் இதனைச் சிந்திக்கவேண்டும். தான் செய்யும் தொழிலினால் பல நன்மைகளை தரணி எங்கும் பரப்பிடவேண்டும்.
ந.கேதீஸ்வரி
கிழக்குப்பல்கலைக்கழகம் இலங்கை