இலங்கை அரசாங்கம் இன்று சந்தித்துள்ள நெருக்கடிக்கு தீர்வு இல்லை என்றும் நெருக்கடியின் கீழ் பயணிப்பதால் மேலும் பல நெருக்கடிகளே ஏற்படும் என தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி, அரசாங்கம் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதையே எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நெருக்கடி எதுவும் ஏற்படாது விட்டால், அரசாங்கமே ஏதாவது நெருக்கடியை ஏற்படுத்தி விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி வைத்தியசாலைக்கு நேற்று (21.09.21) சென்ற அவர், இலங்கையில் ஒரு நெருக்கடி கீழே செல்லும் போது மற்றுமொரு நெருக்கடி மேலே வந்துவிடும். உதாரணமாக தேங்காய் எண்ணெய் நெருக்கடி. தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதாக பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டது. ஆனால் இலங்கையில் இன்றும் மக்கள் தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவையே உட்கொள்கின்றனர
இன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் பரிசோதிக்கப்படுகின்றதா? இல்லை இப்போது அந்த பிரச்சினை அங்கேயே முடிந்து, புதிய பிரச்சினை தோன்றியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் புகுந்து ஆடிய ஆட்டம் எல்லாம் மதுபானசாலைகளை திறந்த பின்னர் காணாமல் போய்விட்டன. எனவே இவை எல்லாம் வேண்டுமென்றே நடக்கும் சம்பவங்கள் என்றார்.
இப்படி தான் ஒவ்வொரு பிரச்சினைகளும் காணாமல் போகும். அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் ஏற்படுத்தும் திருத்தங்கள் ஊடாக பயணக் கட்டுபாடுகள் தளர்த்தல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நகைப்புக்குரியதாக்கி முன்னெடுக்கபடும் சில சம்பவங்களால், கொரோனா தொற்று அதிகரித்தல் மற்றும் மரணங்கள் அதிகரிக்கும் .
சிறிய தீவான இலங்கையை பல மடங்கு பாதுகாக்கும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. தடுப்பூசி ஏற்றலில் குறைபாடு, உரிய நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் மனித உயிர்கள் இல்லாமல் போவதற்கு காரணமாக அமைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.