Home இலங்கை பக்த நந்தனார் கதையும் என் மனதில் எழும் கேள்விகளும் -ப.கண்ணன்.

பக்த நந்தனார் கதையும் என் மனதில் எழும் கேள்விகளும் -ப.கண்ணன்.

by admin


சமூக வர்க்க வேறுபாடுகள் மிக்க காலத்தில் தாழ்குலத்தில் பிறந்து சிவனை ஆலயத்தினுள் சென்று தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டு, பல சோதனைகளுக்கு உள்ளாகி இறைவனருளால் கோயினுள் சென்று இறைவனை வழிபட்டு பூவுலக வாழ்வை துறந்த சிவபக்தனின் கதையே பக்தந்தனார் ஆகும்.


சோழ நாட்டில் பறையர் சமூகத்தில் பிறந்து அவரூரின் நாட்டாமைக்காரராகவும், செல்வந்த அந்தணரின் வயல் தோட்டத்தில் அடிமையாக வேலைபுரிந்து வருகிறார் நந்தனார். இவர் வாழ்ந்த கால கட்டத்தில் தாழ் குலத்தவர்களிற்கு கோயினுள் சென்று இறைவனை தரிசிக்க அனுமதி இல்லை. அதே சமயம் இவரது சமூகத்தவர்கள் கிராமிய வழிபாட்டை வழக்கமாகக் கொண்டவர்கள். நந்தனார் சிவனையே பெருங்கடவுள் என எண்ணி வழிபட்டுவருகிறார்.

ஒருநாள் தன்னூர் மக்களிற்கு சிவனின் புகழைக்கூறி அவர்களை திருபுன்கூரிலுள்ள சிவாலயத்திற்கு அழைத்து செல்கிறார். இவர்கள் ஆலயத்தின் கோபுர வாசலில் நின்று இறைவனை தரிசிக்கின்றனர். அவ்வேளை உள்ளே இருக்கும் நந்தி சிலை கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் சிவலிங்கத்தை மறைக்க இவர்கள் இறைவனை காணமுடியாமல் அதிருப்தியடைகின்றனர். இவர்களை வரவழைத்து வந்த நந்தனார் இறைவனை வேண்டி பாடல் பாட நந்தி விலகி அனைவரிற்கும் சிவலிங்க தரிசனம் கிடைக்கிறது. தரிசனம் கண்ட அனைவரும் சிவநாமத்தை கூறிய வண்ணம் ஊர் திரும்புகின்றனர். திரும்பும் வழியில் நந்தனாரிற்கு சிதம்பரம் வந்து தரிசிக்குமாறு அசரீரி கேட்கிறது. அக்கணத்திலிருந்து சிதம்பரம் செல்லவேண்டும் என்ற ஆசை நந்தனாரில் குடிகொள்கிறது.


நந்தனார் சிவனை தரிசிக்க ஊர்மக்களை அழைத்துச் சென்றதையறிந்த ஊர் பூசாரி மற்றும் பூசாரியின் நண்பர்கள் அவர் மீது பகை கொள்கின்றனர். ஒரு சமயம் பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் தமது ஊரின் கிராமிய தெய்வ வழிபாட்டில் வேள்வி செய்வதற்காக ஆடு, கோழிகளை ஊர்மக்களிடம் தானமாக பெற்றுவருகின்றனர். அவர்கள் நந்தன் வீட்டிலும் சென்று தானம் கேக்க நந்தன் உயிர் பலியை இறைவன் ஏற்க மாட்டார் என கூறி தானமாக ஏதும் கொடுக்காமல் அவர்களை திருப்பி அனுப்பியது மட்டுமன்றி வேள்வி நடக்கும் நாளன்று அங்கு சென்று வேள்வியை தடுத்து மேலும் பகையை வளர்த்துக் கொள்கிறார்.


பூசாரி தனது நண்பர்களுடன் இணைந்து நந்தனாரிற்கு எதிராக தமது மரபு வழிபாடுகளை தடுத்தமையால் தமது எஜமானாகிய செல்வந்த அந்தணரிடம் சென்று நந்தன் தமது வழிபாட்டைக் குழப்புவதாகவும் ஊர்மக்களை வயலில் வேலை செய்யவிடாது கோயில்களிற்கு அழைத்துச்செல்வதாகவும் கூறி நந்தனை நாட்டாமைக்காரர் பதவியிலிருந்து நீக்கி அதை தம்மிலொருவரிற்கு பெற்றுக்கொள்கின்றனர்.

நந்தன் சிதம்பரம் செல்வதற்கு தனது எஜமானிடம் அனுமதி கேட்க, அவனிற்கு அனுமதி மறுக்கப்டுகிறது. உயர் வேதங்களை கற்றவர்களும், குலத்தில் உயர்ந்தவர்களும்தான் சிதம்பரம் சென்று தரிசிக்கலாம், தாழ்குலத்தவர்களிற்கு அனுமதி கிடையாது என கண்டித்து அனுப்புகிறார். மனவருத்தத்துடன் நந்தன் அன்னம், ஆகாரமின்றி வயலிலே வேலை செய்கிறான். அவ்வேளை அவ்வழியால் சிதம்பரம் செல்பவர்களை கண்டு தனக்கும் ஆசைவர, இறைவனை நினைத்து பாடல் பாடுகிறார். அங்கு வேலை புரியும் ஏனைய ஊரவர்களும் நந்தனின் பாடலில் மயங்கி அவர்களும் அவருடன் இணைந்து வேலை செய்யாமல் இறைவனின் புகழை பாடத்தொடங்குகின்றனர். இதைக்கண்ட புதிதாக நியமிக்கப்பட்ட நாட்டாமைக்காரர் எஜமானிடம் சென்று நந்தன் யாரையும் வேலை செய்ய விடாது பாடல் பாடியவாறுள்ளான் என முறைப்பாடு செய்கிறார். உடனே அவ்விடம் விரைந்த எஜமான் நந்தனிற்கு தடியால் அடித்து தண்டணை வழங்குகின்றார்.


சிதம்பரம் செல்லாது இவ்வுயிர் போகாது என பிடிவாதத்துடன் மீண்டும் எஜமானிடம் சிதம்பரம் செல்ல அனுமதி கேட்கின்றார். நந்தனை சிதம்பரம் செல்ல சம்மதம் தெரிவிக்க மனமிருந்தும் அவன் சென்றால் வயலில் வேலை சரிவர நடக்காது என எண்ணி மீண்டும் அனுமதி மறுக்கின்றார். நந்தன் மீண்டும் மீண்டும் மனமுருகி அனுமதி கேட்க வயலை உழுது நெல் விதைத்து அறுவடைக்கு தயார்படுத்தி விட்டு சிதம்பரம் செல் என நந்தனிற்கு கூறுகின்றார். தான் உடனே சிதம்பரம் செல்வது சாத்தியமில்லை, பயிரை அறுவடைக்கு தயார் செய்ய பல காலம் ஆகும் என எண்ணி மனம் வருந்தி அங்கிருந்து செல்கிறார். மறுநாள் காலை எஜமானின் அனைத்து வயல்களிலும் பயிர் அறுவடைக்கு தயார் நிலையிலிருப்பதை கண்ட நந்தன் இது இறைவனின் செயல் என எண்ணி இறைவனை போற்றி பாடுகின்றார். வயலில் பயிர் விளைந்ததை அறிந்த எஜமான் அவ்விடம் விரைந்து அதிசயத்தை கண்டு நந்தனின் பக்தியில் மெச்சி தன் தவறை உணர்ந்து நந்தனிடம் மன்னிப்பு கோரி அவனை சிதம்பரம் செல்ல அனுமதிக்கின்றார்.

நந்தனார் தனக்கு சிதம்பரத்தினுள் செல்ல அனுமதி இல்லை என என்hதால் ஆலய வெளி வீதியில் தங்கி இறைவனை வழிபடுகின்றார். இதையறிந்த இறைவன் சிதம்பர அந்தணர் கனவில் தோன்றி தனது பக்தன் வெளியில் உள்ளான். அவனை பூரண கும்ப மரியாதையுடன் ஆலயத்தினுள் அழைத்து வருமாறு கூறுகின்றார். மறுநாள் நந்தனை மேள தாளங்களுடன் பூரண கும்ப மரியாதையுடன் ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும்போது அங்கிருந்த வேறொரு பிராமணர் அவர்களை இடைமறித்து இறைவன் வந்து கனவில் சொல்லியது என்பதை நம்பி காலம் காலமாக நாம் பின்பற்றும் சாஸ்திர முறைகளை கைவிடலாகாது என கூற அங்கு பதற்ற சூழிநிலை ஏற்படுகிறது. இதற்கு முடிவாக நந்தனாரை அக்னியில் பிரவேசிக்க வைப்போம், அவரிற்கு இறைவனருள் இருப்பின் அவரை அக்னி தீண்டாது என அனைவரும் ஒரு மனதாக அக்னி பிரசேத்திற்கு தீர்மானிக்கின்றனர். இதைப்பற்றி சற்றும் அச்சம் கொள்ளாத நந்தனார் இறைவனை வேண்டி சுவாலையினுள் பிரவேசித்து இறையருளால் பட்டாடை மின்ன, பூணூல் தரித்தவராக அக்னியிலிருந்து வெளிவந்தார். இதைக்கண்டு அனைத்து பிராமணரும் வாயடைத்து நிற்க நந்தனார் ஆலயத்தினுள் சென்று தரிசித்து பாடல் பாட கருவறையினுள் சிவன் பார்வதி தாண்டவத்தை கண்டு கண் குளிர்ந்தார். இறைவன் திருவருள் பூரணமாகக் கிடைக்கப்பெற்ற நந்தனார் அக்கணமே சோதி வடிவாகி கருவறையில் உள்ள இறைவனுடன் இணைந்தார்.


இக்கதை இறைவனிற்கு அனைவரும் சமம் என்பதை உணர்த்வதற்கு முன்வந்தாலும் இங்கு இறைவன் நிகழ்த்தியாக கூறப்படும் அற்புதங்கள், இறைவனை தரிசிக்கும் நியதிகளில் சமூக வர்க்கவேறுபாடுகளே காணப்படுகின்றன. இக்கதையில் இறைவனை விட உயர் குலத்தவர் செல்வாக்கே மேலோங்கியுள்ளது. இது உண்மைச்சம்பவமா? அல்லது உயர் குலத்தவர் தம் செல்வாக்கை வெளிப்படுத்த உருவாக்கிய கதையா என்பதில் சந்தேகம் தோன்றுகிறது.
இக்கதையை வாசிக்கும்போது என் மனதில் எழும் கேள்விகள்!

  1. தாழ் குலத்தவர்கள் வெளியில் நின்று தரிசிக்கும்போது தடையாய் இருந்த நந்தியை நகர்த்தி சிவலிங்க தரிசனம் கொடுத்த இறைவன், ஏன் அவர்களை ஆலயத்தினுள் அழைத்து தரிசனம் வழங்கவில்லை?
  2. சிவனே பெருங்கடவுள் எனகூறி கிராமிய தெய்வங்களை புறக்கணிப்பது பக்தியா? திணிப்பா?
  3. சினிமாவின் வழமையான கதாநாயகன் – வில்லன் பாணியில் கிராமியத்தெய்வ பூசாரி வில்லனாக சித்தரிக்ப்படுவது முறையா?
  4. அசரீரி, இறைவன் கனவில் தோன்றி கூறியமை என்பவை கற்பனையாக உருவாக்கப்பட்ட கதையை நகர்த்த பயன்படுத்தப்படும் உத்திகளா?
  5. ஆண்டான் அடிமை முறை! செய்யும் தொழில் மீது விஸ்வாசம் கொள்வதை விடுத்து எஜமான்கள் மீது ஏன் விஸ்வாசம் கொள்ள வேண்டும்?
  6. இறைவன் கனவில் தோன்றி கூறிய வாக்கை மதிக்காத உயர்குலத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. உயர் குலத்தவரின் உத்தரவை ஏற்க மறுக்கும் தாழ்குலத்தவர்கள் உயர் குலத்தவர்களால் தண்டிக்கப்படுவது ஏன்?
  7. இறைவனின் சொல்லை விட தாம் வகுத்த சாஸ்திரங்களே மேல் என வாதிடல் முறையா?
  8. அக்னியில் பிரவேசித்தமை தாமாக முன்வந்தா? ஆலயத்தினுள் செல்வதை தடுக்க வலுக்கட்டாயமாக அக்னியில் தள்ளப்பட்டாரா?
  9. அக்னியிலிருந்து வெளிவரும்போது பட்டாடை மின்ன பூணூல் தரித்தவராக வெளிவந்தமை எதைக்குறி;கிறது? பட்டாடை, பூணூல் என பிராமணியக் கோலத்தில்தான் இறைவனை தரிசிக்கலாம் என்பது மேலும் இறைவனை தரிசித்தலில் வர்க்கவேறுபாடு காணப்படுவதை உணர்த்துகிறதா?
  10. வலுக்கட்டாயமாக அக்னியில் தள்ளப்பட்டு உயிர் பிரிந்ததைதான் அக்னியிலிருந்து வெளிவந்து இறைவனுடன் கலந்தார் என கதை எழுதப்பட்டதா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More